anuradha nazeer

Comedy Classics Thriller

4.5  

anuradha nazeer

Comedy Classics Thriller

சிறந்த காதல் ஜோடிகள்

சிறந்த காதல் ஜோடிகள்

6 mins
206


காலையில் எழுந்து எப்பொழுதும் போல அலுவலகம் செல்ல தயாராகி கொண்டு இருந்தான் "சேகர்",அவனுடைய மனைவி இன்றும் கணவருக்கு பிடித்த உணவை தயார் செய்ய வேண்டும் என்பதற்க்காக மிக வேகமாக சமைத்து கொண்டு இருந்தாள்.. ஆனால் தினமும் செல்லும் நேரத்தை விட சற்று முன்னதாக புறப்பட்டான், இதை பார்த்த மனைவி "ஏன் இவ்வளவு சீக்கிரம் போகிறீர்கள்" என்று வினவினாள். அலுவலகத்தில் கொஞ்சம் வேலை இருப்பதாக சொல்லி கொண்டே கிளம்பினான்..., "நேற்றே சொல்லி இருந்தால் இன்னும் விரைவாக சமைத்து இருப்பேனே,கொஞ்சம் பொறுங்கள் சமையல் முடிய போகிறது" என்றால் மனைவி. "எல்லாம் உன்னிடம் சொல்லி கொண்டே இருக்க வேண்டுமா..? எனக்கு ஆயிரம் பிரச்சனை இருக்கிறது,ஒரு நாள் சாப்பிடாமல் போனால் ஒன்றும் செத்து விட மாட்டேன்,போய் நீ நன்றாக சாப்பிடு..!" என சொல்லி விட்டு விருட்டென்று வாகனத்தை எடுத்து சென்றான். மனைவி ஏதும் சொல்லாமல் உள்ளே சென்று,சமையலை முடித்து இறக்கி வைத்து விட்டு தானும் சாப்பிடாமல் துணிகளை துவைக்க சென்று விட்டாள்...! ("சேகர்" ஒரு தபால் அலுவலகத்தில் வேலை செய்கிறான்,அவனுடைய மனைவி வீட்டில் தான் இருக்கிறாள், இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள்...... வீட்டில் பெற்றோர்கள் சம்மதம் கிடைக்க வில்லை, அதனால் பெற்றோரிடம் சண்டை போட்டு விட்டு,தனக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து வாங்கி கொண்டு தனியாக வந்து விட்டான்..! இருவருக்கும் திருமண ஆகி 20 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை,இது பெரிய மன உளைச்சல் ஆகவே இருந்தது "சேகருக்கு") அலுவலகம் முடிந்து வீடு திரும்பி கொண்டு இருந்தான் "சேகர்",அலுவலகத்தில் சில வேலைகளை தவறாக செய்ததால் "மேலதிகாரி" சேகரை எல்லோர் முன்னும் ரொம்ப திட்டி விட்டார்..!அதை நினைத்த படியே வீடு வந்து சேர்ந்தான்.. மனைவி ஆவலோடு தான் சமைத்த உணவை எடுத்து வந்து பரிமாற துவங்கினாள், இவனும் சாப்பிட உட்கார்ந்தான்,சாப்பிட ஆரம்பித்த கொஞ்ச நேரத்திலேயே தட்டை எடுத்து தூக்கி சுவர் மீது அடித்தான்..! அவள் அப்படியே உறைந்து போய் நின்றாள்..! "உணவில் காரம் எவ்வளவு போட்டு இருக்கிறாய், உனக்கு சமைக்க தெரியாத" என்று கத்தி பேச தொடங்கினான். (உணவு அவ்வளவு காரம் இல்லை, ஆனால் அவன் அலுவலகத்தில் நடந்ததை நினைத்து கொண்டே சாப்பிடவும் தான் அது அவ்வளவு காரம் ஆகிவிட்டது) "உன்னால் ஒரு காரியம் ஒழுங்கா செய்ய முடியாத எல்லாம் என் "விதி" உன்னோடு வாழ வேண்டும் என்பதற்க்காக என் உறவுகள் எல்லாம் தூக்கி எறிந்த்தேன்,உன்னால் ஒரு குழந்தை பெற்று எடுக்கும் பாக்கியம் கூட இல்லை,உன்னை திருமணம் செய்து கொள்ளாமலே இருந்து இருக்கலாம், என் பெற்றோர் பேச்சை அப்பொழுதே கேட்டு இருக்கலாம், உன்னால் தான் என் வாழ்க்கை இப்படி "இருளாக" மாறி விட்டது,அலுவலகத்திலும் இவ்வளவு ஆண்டு வேலை செய்து உனக்கு தானே கொட்டுகிறேன், என்ன பண்ணுவது காதலித்து விட்டேன் அல்லவா..! இன்னும் நிறைய சம்பாதித்து கொட்டுகிறேன்..நன்றாக கொட்டிக்கொள்"என அடிக்கி கொண்டே போனான்... அறை கதவை வேகமாக மூடி விட்டு உள்ளே சென்று விட்டான்...! மனைவி கண் கலங்கிய படி "தானும் எல்லோரையும் விட்டு தானே வந்தேன்" என மனதில் 


நினைத்து கொண்டே கண்ணீர் தரையில் விழுந்த படி வீட்டை சுத்தம் செய்து கொண்டு இருந்தாள்..! மனைவியும் சாப்பிடாமல்,அப்படியே தரையில் படுத்து உறங்கி விட்டாள்..! மறுநாள் காலையில் எழுந்து மறுபடி அவளது பணியை செய்ய ஆரம்பித்தாள்.. "சேகர்" எதுவும் பேசாமல் செய்து வைத்த சமையலை எடுக்காமல் விருட்டென்று கிளம்பி போய் விட்டான்..! அலுவலகம் சேர்ந்த பிறகு தனது பணியை ஆரம்பித்தான்.. அப்பொழுது

ஒரு "வயதான முதியவர்" தலையில் பழ கூடையை சுமந்த படி,வியர்வை சொட்ட, சொட்ட வந்தார்(மதிய நேரம் உச்சி வெயில் வேறு) பழ கூடையை இறக்கி வைத்து விட்டு,அலுவலகத்தின் உள்ளே வந்தார்....! தனது சட்டை பையில் இருந்த பணத்தை எடுத்து மேசையில் வைத்தார்(பணம் அவரது வேர்வையில் நனைந்து இருந்தது). இதை கண்ட சேகருக்கு ஒரே ஆச்சரியம்..! இவ்வளவு வயதான காலத்தில் யாருக்கு இப்படி உழைக்கிறார் என்று..? அதை மனதில் நினைத்து கொண்டே "உங்களுக்கு நான் என்ன உதவி செய்ய வேண்டும் ஐயா" என்று அவரிடம் வினவினான். அந்த முதியவர் கடந்த மாதம் பணம் அனுப்பிய ரசீதை காண்பித்து "இதே முகவரிக்கு பணம் அனுப்ப வேண்டும்" என்று சொல்லிவிட்டு,அதோடு ஒரு கடிதத்தையும் கொடுத்தார். அந்த ரசீதை கண்ட சேகருக்கு ஒரே அதிர்ச்சி...! (அது ஒரு முதியோர் இல்லத்தின் முகவரி) சேகருக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது..! " "இது எதற்க்காக, ஏன் அனுப்புக்குறீர்கள்" என்று கேட்க வேண்டும் என்கிற ஆவல் அவனை பிடித்து கொண்டது. தயங்கிய படியே " ஐயா இதை கேட்க கூடாது தான் இருந்தாலும் என் மனம் கேட்க வேண்டும் என்று துடிக்கிறது,உங்களிடம் ஒன்று கேட்கலாமா..? என்று குரல் தாழ்த்திய படி கேட்டான். அவரும் "சொல்லுங்கள் தம்பி" என்றார். நீங்கள் யாருக்கு பணம் அனுப்புக்குறீர்கள்..! எதற்க்காக...!உங்கள் மனைவிக்காக வா...? என்றான். அந்த முதியவர் ஆச்சரியமாக சேகரை பார்த்தார்..! "சேகருக்கு ஒன்றுமே புரியவில்லை தவறாக கேட்டு விட்டோமோ..? என்று நெஞ்சம் படபடத்தது"..! "நான் இருக்கும் போது என் மனைவியை அப்படி விட்டு விடுவேனா..? தம்பி" என்று சற்று கம்பீரமாக அந்த முதியவர் சொன்னார். "சேகர்" அமைதியாக அவர் சொல்வதை கேட்க ஆரம்பித்தான்... முதியவர் சொல்ல ஆரம்பித்தார்... "நான் இந்த முதியோர் இல்லத்திற்கு கடந்த 10  ஆண்டாக பணம் அனுப்புகிறேன், இன்று வரை யாரும் இந்த கேள்வியை கேட்டது இல்லை. முதல் முறையாக நீங்கள் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது." என்று சற்று உற்சாகமாக சொல்ல ஆரம்பித்தார். "எனக்கு திருமணம் ஆகி 40 ஆண்டுகள் ஆகின்றன,என் மனைவி என் கூட தான் இருக்கிறாள், எங்களுக்கு குழந்தைகள் இல்லை. என் மனைவிக்கு வாய் பேச முடியாது, எங்கள் திருமணம் ஒரு சுவாரசியமான நிகழ்வு தம்பி" என்று கூறியவர் கொஞ்சம் தண்ணீர் கேட்டார் "சேகரிடம்". மிக விரைவாக ஓடி தண்ணீர் கொண்டு வந்து கொடுத்தான்.."சேகர்". சேகர் நாற்காலியின் நுனியில் அமர்த்த படி " உங்களின் திருமணம் எப்படி நடந்தது,உங்கள் மனைவி எப்படி தெரியும், அதையும் சொல்லுங்கள் ஐயா..!" எனக்கு ஆவலாக இருக்கிறது" என்று முதியவர் தண்ணீர் குடித்து முடிப்பதற்குள் சொல்லி முடித்தான். முதியவர் சற்று சிரித்த படி மேலே சிந்திய நீரை துண்டினால் துடைத்த படி மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்..! "என் மனைவியை சிறு வயதிலேயே தெரியும்,எங்கள் வீட்டின் அருகில் தான் குடும்பமாய் இருந்தார்கள்,அவர் வீட்டில் இவள் ஒரே பிள்ளை தான்,அவளுக்கு 10 வயதாக இருந்த பொழுது அவளுடைய தந்தையோடு வெளியே சென்று விட்டு வீடு திரும்பும் வழியில் வாகனம் மோதி அவர் தந்தை இறந்து விட்டார்,தன் கண் முன்னே தந்தை இறந்து போனதை கண்ட அவளுக்கு பேச்சு வராமல் போய் விட்டது....அதன் பிறகு அவளுடைய தாய் பல வீட்டு வேலைகளை செய்து அவளை வளர்த்தார்,இவளும் வளர்ந்து பெரியவளாகி விட்டாள். அவளுடைய குறையை பார்த்த யாருக்கும்,அவளின் அன்பு தெரியவில்லை,அவளுக்கு எல்லோரும் தன்னிடம் பேச வேண்டும் என்கிற ஆசை இருக்கும் ஆனால் யாரும் பேச தான் மாட்டார்கள்..! அவளின் தந்தை மரணத்திற்கு பிறகு உறவுகள் எல்லாம் அவரவர் வேலையை பார்க்க சென்று விட்டனர். திருமண வயது வந்தது,ஆனால் பேச முடியாத காரணத்தால் அவளை திருமணம் செய்ய யாரும் முன் வரவில்லை..., பிறகு எங்கள் பெற்றோர்கள் பேசி இருவருக்கும் திருமணம் நடந்தது. பிறகு காலங்கள் கடந்தது எங்களை பெற்றவர்கள் எல்லாம் இறந்து விட்டார்கள்..! எங்களுக்கும் வயது ஆகி விட்டது. ஆனால் என் மனைவி ஒரு குழந்தை மாதிரி......தம்பி" என்று சொன்னவர் குரலில் ஒரு தடுமாற்றம். (கையில் வைத்து இருந்த துண்டை எடுத்து கண்களை லேசாக துடைத்தார்) (சேகரின் உள்ளத்தில் ஏதோ ஒன்று குத்த ஆரம்பித்தது) தன்னை நிதானித்து கொண்டு மீண்டும் சொல்ல ஆரம்பித்தார்.. "அவளுக்கு உலகமே நான் மட்டும் தான், என்னை தவிர வேறு யாரையும் தெரியாது...ஒரு முறை நான் உடல் நலம் பாதிக்க பட்டு படுத்த படுக்கையாக இருந்தேன்.. வேலைக்கு செல்லாமல் கையில் பணம் வேறு இல்லை. அப்பொழுது மருந்து வாங்க வேண்டும் என்பதற்காக "அவள் அம்மா நினைவாக வைத்து இருந்த ஒரு தங்க குண்டு மணியை எனக்காக கடையில் விற்று விட்டாள்." பிறகு அந்த பணத்தை கொண்டு மருத்துவரிடம் சென்று "என் கணவனை எப்படியாவது காப்பாற்றுங்கள்" என்று வாய் பேச முடியாத நிலையிலும்,செய்கையை காண்பித்து மருத்துவரிடம் கெஞ்சி புழுவாக துடித்து போய் விட்டாள்..! (என்று சொன்னவர் கண்கள் இரண்டும் சிவந்து போய் விட்டது) "பிறகு நான் குணமாகி என் வேலையை செய்ய ஆரம்பித்தேன்".என்று தன்னை திட படுத்தி கொண்டு மீண்டும் தொடர்ந்தார்.. "அப்பொழுது தான் எனக்கு ஒரு சிந்தனை வந்தது, எனக்கு முன்பு அவள் இறந்து விட்டாள் பரவாயில்லை கடைசி வரை அவளை பார்த்து கொண்ட மன நிறைவு இருக்கும் ஆனால் அவளுக்கு முன்பே எனக்கு இறப்பு வந்தால் என் மனைவியின் நிலை என்ன என்று..? அதற்கு தான் இந்த "பணம்" ஒவ்வொரு மாதமும் ஒரு தொகையை அனுப்பி விடுவேன்..  


அதில் பாதி அந்த முதியோர் இல்லத்தில் கணவன் இல்லாமல் இருக்கும் மற்றவர்களுக்கும்,மீதி பாதி தொகையை என் மனைவிக்காக சேர்த்து வைத்து கொண்டு வருகிறேன்..! அந்த பணத்தோடு ஒரு கடிதம் கொடுத்தேன் அல்லவா..! அதை திறந்து படித்து பாருங்கள் தம்பி"..என்றார். "சேகர் நெஞ்சில் ஒரு உறுத்தல்...கைகள் நடுங்கிய படி கடிதத்தை பிரித்து பார்த்தான்...! அவன் கண்கள் இரண்டும் கலங்கிய படி இருந்தது..!அதில்..... "நானும், என் மனைவியும் நலமாக உள்ளோம்... இந்த மாதம் என்னால் இயன்ற தொகை அனுப்பி உள்ளேன். அடுத்த மாதம் இதே போல் கடிதமும், பணமும் வரவில்லை என்றால்.. நான் இறந்து போய் இருப்பேன்... நீங்கள் வந்து என் மனைவியை அழைத்து சென்று பத்திரமாக குழந்தை போல் கடைசி வரை பாத்து கொள்ளுங்கள்". இதுவே என் கடைசி ஆசை.." .......... இதை படித்த சேகருக்கு நெஞ்சில் பாரம் கூடியது கை,கால் நடுக்க ஆரம்பித்தது..கலங்கிய கண்களோடு அந்த முதியவரை பார்த்தான்... "சரி தம்பி எனக்கு நேரம் ஆகி விட்டது அதை அனுப்பி விடுங்கள்,ஒரு உதவி செய்ய வேண்டும்" என்றார் அந்த முதியவர். என்ன செய்ய வேண்டும் ஐயா என ஆவலோடு கேட்டான். "வெளியில் நான் வியாபாரம் செய்யும் பழ கூடை இருக்கிறது அந்த பழ கூடையை கொஞ்சம் தூக்கி விட முடியுமா" என்றார். நெஞ்சில் ஒரு பெரிய பாரத்தோடு அவன் அமர்ந்து இருந்த அலுவலக கூண்டை விட்டு வெளியே வந்தான்.. வெளியே வந்து பார்த்த சேகருக்கு பெரிய அதிர்ச்சி....! அந்த முதியவருக்கு இடது கை இல்லை...! (இவ்வளவு நேரம் அவருக்கு கை இல்லாததை சேகர் கவனிக்கவே இல்லை..அவ்வளவு ஆர்வமாக அவர் சொன்னதை மட்டும் தான் பார்த்து கொண்டு இருந்தான்) "கண்கள் கலங்கிய படி அந்த கூடையை தூக்கி அவர் தலையின் மீது வைத்தான்"... அது கொஞ்சம் சுமை அதிகமாகவே இருந்தது. "மனைவி மீது இவ்வளவு அன்பு வைத்து இருக்கிறீர்கள்..உங்களுக்கு ஒரு குழந்தையும், கொஞ்சம் சொத்தும் இருந்து இருந்தால் இன்னும் எவ்வளவு நன்றாக இருந்து இருக்கும்.....,! நீங்கள் உங்கள் மனைவிக்காக இவ்வளவு கஷ்ட பட தேவையில்லையே" என்று குரலில் ஒரு நடக்கத்தோடு சொன்னான். இதை கேட்ட முதியவர் சற்று சத்தமாய் சிரித்தார்... ஆ...ஆ...ஆ. "என் மனைவி நம்பி வந்தது என்னை தான்......! சொத்தையோ....! அல்லது பிள்ளையை யோ இல்லை......!" "அவளுக்காக சுமகின்ற இந்த சுமையும் ஒரு சுகமே.....!" என்று சொல்லி கொண்டே உச்சி வெயிலில் உற்சாகமாக பழ கூடையை தலையில் வைத்த படி ஒரு கையால் பிடித்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்... ! அந்த முதியவர். சேகரின் கண்களில் கலங்கி நின்ற நீர்....! பெருந்துழி யாய்...! தரையில் விழுந்தது...! தரையில் விழுந்தது கண்ணீர் துளி மட்டும் அல்ல...! அவனின் சுபாவமும்...! _______________________________________ "வறுமையில் கணவனை நேசிக்கும் பெண்ணும்" "முதுமையில் மனைவியை நேசிக்கும் ஆணும்" தான் உலகின் ஆக சிறந்த காதல் ஜோடிகள்...! ________________________________________ கொண்டு செல்ல ஒன்றும் இல்லை இவ்வுலகில் கொடுத்து செல்வோம் உண்மையான அன்பை..! இனி வரும் நாட்கள் வசந்த காலமாகட்டும்..! 








Rate this content
Log in

Similar tamil story from Comedy