தெய்வத் திருமகள்
தெய்வத் திருமகள்


தலைச்சனா பொறந்த புள்ள
பேரு சொல்ல வந்திருச்சி
தங்கமா எண்ணினாரோ முத்துசாமி
அம்பலம் தான்!
ஒத்தைமகளா உன்னை நெனச்சி
உசுர வச்ச சரஸ்வதியும்
பெத்த மவ, இப்ப என்னை
பெத்தவளா ஆயிட்டியே!
பேருசொல்ல ஒத்தப்புள்ள
வேணுமுன்னு நெனச்சதில்ல
ஊருமெச்ச வாழத்தான் பொண்ணு மூணு
பெத்தெடுத்த!
குலம் தழைக்க ஒத்தமவன் பொறக்க
எண்ணி நீ பட்டதெல்லாம்
நார் படுமா? ஆற்றின் கீழ் வேர் படுமா?
நாற்றங்கால் சேர் படுமா ?
கல்லையும் கும்பிட்ட புள்ளையும் கும்பிட்ட
கரிசல்நில மண்ணையும் கும்பிட்ட
கடவுளுன்னு சொன்னதால
காளையையும் கும்பிட்ட
மஞ்ச துணி கட்டினதால
மரத்தையும் கும்பிட்ட!
அந்த கோயில் போய்வான்னு
அடுத்த ஊர் ஆச்சி சொல்ல
அடுத்த நாளே வண்டிகட்டி
அந்த கோயில் போய்வந்த
இந்த கோயில் போய்வான்னு
எடச்சி ஒருத்தி சேதி சொல்ல
எள்ளலவும் யோசிக்கல
ஏன் எதுக்குன்னு கேக்கவும் இல்ல
பழநியில தேரிழுக்க
பாட்டியும் தான் வேண்டிக்கிச்சி
மாலை போட்டு மலைக்கு வர
மாமாவும் வேண்டிக்கிச்சி
தானம் தர்மமெல்லாம்
தட புடலா செஞ்சிவச்ச
தங்க தொட்டி கட்டி
தாலோ பாட ஆச வச்ச!
கார்த்திகையும் பொறந்துடுச்சி
கனியும் நேரம் வந்துடுச்சி
இடுப்பு வலி எடுத்துடுச்சி
இரவெல்லாம் வெளுத்துடுச்சி!
உத்தமியே உன் மகனா
பூமியிலே பொறப் பெடுக்க
கருவாக உருமாறி
கார்த்திகை 2ல் கண் முழிச்சன்
என்ன தவம் செஞ்சேனோ
இப்படி ஓர் பொறப்பெடுக்க
புண்ணியந்தான் செஞ்சேனோ
உந்தன் மடி நான் கிடக்க
குலசாமி கை விடல
கும்பிட்ட எதுவும் வீண் போகல
கடைசி வர கூட வா ன்னு
கடவுள தான் கேட்டிருந்தேன்
கடவுளா நீ கெடச்ச பின்னே
கால் பதிச்சேன் பூமியிலே
குலம் தழைக்க ஒரு மவந்தான்
போறந்துட்டானு நீ அழுத
கடவுள் நீ கெடச்சதால கண்ணீரின்றி
நான் அழுதேன்