வாழும் வரை நட்பு
வாழும் வரை நட்பு
நட்பு என்றாலே தனி சுகம் தான். அதுவும் சிறுவயது நண்பர்கள் வாழ்க்கை முழுவதும் நண்பர்களானால் அந்த வாழ்க்கையும் ஒரு சொர்க்கம் தான். ராம், ஜனனி, மைக்கேல், முபின், ஜானு இவர்கள் அனைவரும் சிறுவயது நண்பர்கள். அரசு பள்ளிக்கூடத்தில் பன்னிரண்டாம் வகுப்பு வரை ஒன்றாக படித்தார்கள். எந்த வேலையாக இருந்தாலும் 5 பேரும் சேர்ந்தே செய்வார்கள். எங்கு போனாலும் அனைவரும் சேர்ந்தே செல்வார்கள். "நம்ம இருக்கோம் நமக்கு. வேறென்ன வேணும் நமக்கு " இதை அடிக்கடி ஐவரும் சேர்ந்து சொல்வார்கள். பெண்களும் ஆண்களும் நண்பர்களாக இருக்க முடியாது என கூறுபவர்களுக்கு இவர்களின் நட்பு சிறந்த எடுத்துக்காட்டாக இருந்தது.
மேற்படிப்பு படிப்பதற்காக ராம் வெளிநாடு செல்ல வேண்டியதாக இருந்தது. ஜானு மற்றும் மைக்கேலிற்கு ஒரே கல்லூரியில் இடம் கிடைத்தது. முபின் கேரளா சென்றான். ஜனனிக்கும் படிக்க வேண்டுமென ஆசை ஆனால் குடும்ப சூழ்நிலையால் அவள் ஒரு தையல் கடைக்கு வேலைக்கு சென்றாள். வாரம் ஒருமுறை மட்டும் ஐவரும் தொலைபேசியில் பேசிக் கொண்டனர். ராம் ஜானு மைக்கேல் முபின் நால்வருக்கும் தேர்வு நெருங்கி கொண்டு இருந்தது. ஜனனியின் தங்கை விஷக் காய்ச்சலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். ஆனால் ஜனனி இதை தன் நண்பர்களிடம் கூறவில்லை. அக்கம்பக்கத்தாரிடம் கடன் வாங்கி மருத்துவ செலவை பார்த்தனர் ஆனால் அந்த பணம் போதவில்லை. இரண்டு வாரங்களாக ஜனனி தன் நண்பர்களிடம் ஒழுங்காக பேசவில்லை. அவர்கள் ஏதாவது பிரச்சனையா என்று கேட்டும் ஜனனி ஒன்றும் கூறவில்லை. மருத்துவமனையில் மருத்துவர்கள் இனி பணம் செலுத்தினால் தான் மருத்துவத்தைத் தொடர முடியும் என்று கூறிவிட்டனர். இந்த விஷயத்தை அறிந்த ஜானுவின் அம்மா ஜானு விடம் கூறினார். ஜானு தன் நண்பர்கள் மூவருக்கும் இந்த செய்தியை தெரிவித்தாள். நால்வரும் சேர்ந்து தான் சேர்த்து வைத்திருந்த பணத்தை அந்த மருத்துவமனைக்கு ஜனனியின் தங்கையின் மருத்துவ செலவிற்காக அனுப்ப முடிவு செய்தனர்.
மருத்துவர்கள் ஜனனியிடம் வந்து உன் தங்கையின் மருத்துவ செலவிற்கான பணம் 25 ஆயிரம் ரூபாயை யாரோ மருத்துவமனைக்கு அனுப்பி உள்ளனர் என்றார். ஜனனிக்கு ஒன்றும் புரியவில்லை. அந்த பணத்தை வைத்து ஜனனியின் தங்கைக்கு மருத்துவம் பார்க்க ஆரம்பித்தனர். ஜனனியின் தங்கையும் குணமாகி வீட்டிற்கு வந்தாள். ஜனனியின் தங்கையை பார்க்க ஜானுவின் அம்மா ஜனனியின் வீட்டிற்கு வந்தாள். அப்பொழுதுதான் ஜானுவின் அம்மா தான் இந்த விஷயத்தை ஜானுவிடம் சொன்னதாக கூறினார். அப்பொழுதுதான் ஜனனிக்கு எல்லாம் புரிந்தது. ஜனனி தன் நண்பர்களுக்கு நன்றி கூறினாள்.
"நட்பு தான் சொத்து நமக்கு..." என நால்வரும் சேர்ந்து கூற ஜனனி சிரித்தாள். " நம்ம இருக்கோம் நமக்கு. வேறென்ன வேணும் நமக்கு " என ஐவரும் சேர்ந்து கூறி சிரித்தனர்.
