Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win
Turn the Page, Turn the Life | A Writer’s Battle for Survival | Help Her Win

DEENADAYALAN N

Children Stories Inspirational Children

5  

DEENADAYALAN N

Children Stories Inspirational Children

உன் வேலையை மட்டும் நீ பார்! (த்தால்..?)

உன் வேலையை மட்டும் நீ பார்! (த்தால்..?)

6 mins
280



                        


ஹை விவு, அவி, ரிஷி, கமல், கலா, அப்பாஸ், டிங்கு, ஜான், மற்றும் மை டியர் குட்டீஸ்!


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!


‘என் தங்கமில்லே.. அம்மாவுக்கு கால் வலிக்குது. கொஞ்சம் குடிக்க தண்ணீர் கொண்டு வாடி..’ அம்மா ஆசையாக கேட்டார்.


‘போம்மா.. நீயே போய் எடுத்துக்கோ - அவங்கவங்க வேலையை அவங்கவங்கதான் செய்யணும்’ – முத்தழகி வெடுக்கென்று சொல்லி விட்டாள்…



முத்தழகி.. பக்கத்துப் பெட்டிக் கடைக்குப் போயி பாட்டிக்கு வெத்தலப்பாக்கு வாங்கிட்டு வர்றியா..’ முத்தழகியின் பாட்டி வேண்டினாள்.


‘போ பாட்டி, நான் வெளையாடிகிட்டிருக்கேன், நீயே அப்பிடியே மெதுவா போயி வாங்கிக்கோ..’ என்று சொல்லி விட்டாள்.



முத்தழகியும் வேறு சில குழந்தைகளும் பந்து விளையாடிகிட்டிருந்தாங்க. பந்து பக்கத்து வீட்டு காம்பவுண்டு சுவருக்கு அப்பால் இருக்கிற தோட்டத்துலே போய் விழுந்திருச்சி. ‘ஏய் முத்தழகி.. என் கால் சுளுக்கி இருக்குடி. போய் பந்தை எடுத்துகிட்டு வாடி..’ – என தோழி வேண்டினாள்.


‘நீதானடி போட்டே.. நான் ஏன் போய் எடுக்கணும்.. நீயே போய் பந்தை எடுத்துகிட்டு வா’ என்று கறாராக முத்தழகி சொல்லி விட்டாள்.


முத்தழகி தன்னோட வேலையை மட்டும் பார்த்துக்கிறா. மற்றவர்கள் ஏதாவது உதவி கேட்டா ‘அவங்கவங்க வேலையை அவங்களே செஞ்சிக்கோங்க’ன்னு சொல்லிடறா. அவளோட இந்த போக்கு அவளுடைய அம்மாவுக்கு கவலையை தந்தது.




இதுக்கெல்லாம் ஒரு காரணம் இருந்தது. போன மாதம் முத்தழகியின் பள்ளியில் ஒரு பிரபலமான பேச்சாளர் வந்து பேசினாங்க. பல நல்ல கருத்துக்களை குழந்தைகளுக்கு எடுத்துச் சொன்னாங்க. அதுலே ஒன்னுதான் இது.


அவர் என்ன சொன்னார்னா: நம்முடைய வேலைகளை நாமே செய்துக்கணும். எல்லாவற்றுக்கும் அம்மாவையோ, அப்பாவையோ, சகோதர்களையோ, நண்பர்களையோ எதிர்பார்க்கக் கூடாது. காலணி-காலுரை அணிதல், ஜடை போட்டுக் கொள்ளுதல், உணவு சாப்பிடுதல், உடை அணிந்து கொள்ளுதல், பள்ளியில் நண்பர்களிடம் வேலை வாங்காமல் இருத்தல் அப்படீன்னு எல்லாவற்றையும் நாமே செய்து கொள்ளணும்’ என்று மிக நீண்ட ஒரு உரையில் சொல்லிச் சென்றார். அது முதல் முத்தழகி இப்படி நடந்து கொள்ள ஆரம்பிச்சிட்டா.




பள்ளியிலும் முத்தழகியின் போக்கு மாறலை. ஒரு மதிய வேளையில், அவள் தோழி சுந்தரியும் அவளும் உணவு சாப்பிடும்போது, சுந்தரிக்கு விக்கல் வந்துருச்சி. முத்தழகியிடம் ‘கொஞ்சம் தண்ணீர் பிடிச்சிகிட்டு வறியாடி’ன்னு சுந்தரி கேட்டா. ‘நீயே போய் புடிச்சிக்கோ.. அவங்கவங்க வேலையை அவங்கவங்கதான் செய்யணும்’னு சொல்லிட்டா முத்தழகி.


அன்றைய ‘ட்ரில்’ பீரியடில், பள்ளி மைதானத்தில் ‘மசைப்பந்து’ங்கற ஒரு குழு விளையாட்டு நடந்தது. இது கால் பந்து மாதிரி. மைதானம் முழுக்க இரண்டு குழுக்கள் ஆடுவாங்க. ஒரு குழுவில் இருக்கறவங்க எதிர் குழுவில் இருக்கும் சிறுமிகள் மேல் பந்தை எறியணும். எதிர் குழுவில் இருப்பவர், அடி படாமல் தப்பித்துக் கொள்ளணும். மேலே பட்டா, அவங்க ‘அவுட்’ ஆகி மைதானத்தை விட்டு வெளியேறிடணும். பந்தை ஒருவருக்கு ஒருவர் ‘பாஸ்’ செஞ்சி விளையாடுவாங்க. அப்பொதான் எளிதா எதிர் குழுவில் விளையாடறவங்களை ‘அவுட்’ செய்ய முடியும்.


ஆனா முத்தழகி எப்பவும் தானேதான் பந்தை நேரடியா எறிவாள். எவ்வளவு தூரத்தில் இருந்தாலும் தன் குழுவில் மற்றவர்களுக்கு பந்தை ‘பாஸ்’ செய்ய மாட்டாள். இதனால் முத்தழகியின் குழு படு தோல்வியை அடைந்தது. அதுக்கு முக்கிய காரணம் முத்தழகிதான்னு எல்லாரும் அவளை குற்றம் சொன்னாங்க. இந்த விபரங்கள் உடற்பயிற்சி ஆசிரியைகிட்டே சொன்னாங்க. அவரும் முத்தழகியை கூப்பிட்டு, அவளோட தவறை சுட்டிக் காட்டி, ஒரு குழுவாக இருக்கும்போது ‘பாஸ்’ செஞ்சிதான் ஆடணும்னு விளக்கமா சொன்னாங்க.


டீச்சர் சொன்னப்பொ கேட்டுகிட்டாளே தவிர, முத்தழகி அதை உணர்ந்த மாதிரி தெரியலே. இந்த விஷயம் அவளோட தோழி மூலமா, முத்தழகியோட அம்மாவுக்கும் போச்சி.


ஆனா இதெல்லாம் முத்தழகிக்கு தப்பாவே தோணலே. தான் செய்யிறது சரிதான்னு நெனச்சா. வருத்தப்படலை. அவங்கவங்க வேலையை அவங்கவங்களே தான் செஞ்சிக்கணும் அப்பிடீங்கிறதுதான் சரின்னு சொன்னா.


முத்தழகியை எப்படி திருத்தறதுன்னு அவளோட அம்மா யோசிச்சாங்க.




‘சரி! குட்டீஸ்.. இந்த இடத்துலே கதையை நிறுத்தறேன். “அவங்கவங்க வேலையை அவங்கவங்களே பார்த்துக்கணும்! ஒருவன் தன் சொந்தக் காலிலேயே நிற்பதுதான் சரி. மற்றவர்களுடைய தயவை எதிர் பார்க்க்கூடாது” அப்பிடீங்கிறது ஞாயம் போலதான் தோனுது. ஆனால் அது சரியா? முடியுமா? ‘எனக்கு மத்தவங்க தயவு தேவையில்லை. மத்தவங்களும் என் தயவை எதிர் பார்க்காம எல்லாம் செஞ்சிகோணும்’ங்கறது சரியா? முடியுமா? அப்பிடி ஒரு ஆளு இருக்க முடியுமா? இதை யோசிச்சு, உங்களில் யாராவது மேலும் தொடர்ந்து சொல்லி இந்தக் கதையை முடீங்க பாக்கலாம்!’ என்றேன்.


‘நான் சொல்றேன்’னு முன் வந்து ரிஷி சொல்லத் தொடங்கினான்: முத்தழகி தூங்குன உடனே அவளோட அம்மாவும் அப்பாவும் இதப்பத்தி பேசுனாங்க. முத்தழகிக்கு புரிய வெக்கிற மாதிரி சூப்பரா ஒரு திட்டம் தீட்டினாங்க. அந்தத் திட்டத்தை அடுத்த நாள் காலையிலிருந்தே செயல் படுத்துனாங்க.



மறுநாள் காலையில் கண் விழிச்சா முத்தழகி. கடிகாரம் மணி ஏழைக் காட்டியது.


‘என்னம்மா ஏழு மணி ஆகிறது. ஏன் என்னை எழுப்பலை’


‘நீதானேமா சொன்னே. அவங்கவங்க வேலையை அவங்கவங்கதான் செய்யணுமின்னு. நீயே எழுந்துக்குவேன்னு நெனச்சேன்’ என்றார் அம்மா.


முத்தழகி பற்பசையை தேடுனா. கிடைக்கலை. அம்மாவிடம் கேட்டாள். ‘நான் பல் விளக்குற இடத்துலேதான் இருக்கும் பாரு’ன்னு அம்மா சொல்லிட்டாங்க.


‘அம்மா என்னுடய காலுறையைத் துவைக்கலையா’ - முத்தழகி


‘நீ துவைச்சிருப்பேன்னு என்று நினைச்சேன்’ – அம்மா



ஒரு வழியா சாப்பாட்டு மேசைக்கு வந்தாள். ஆனா அங்கே வெறும் ரொட்டித் துண்டுகள்தான் இருந்துச்சி. ‘அம்மா இட்லி இல்லையா’ என்றாள்.

‘இன்னும் மாவு அரைக்கலையம்மா. நீயே ரொட்டியை ‘டோஸ்ட்’ போட்டு சாப்பிட்டுக்கோ’ என்று சொல்லி விட்டாள் – ஒரு வேலையாக இருந்த அம்மா.


முத்தழகிக்கு கோவம் கோவமாக வந்துச்சி. சாப்பிட்டா தாமதாயிடும்னு அவசரமா புத்தகப்பையை எடுத்துகிட்டா. ’அப்பா.. சீக்கிரம் வாங்க. எனக்கு பள்ளிக்கு ‘லேட்’ ஆயிருச்சி. சீக்கிரம் கிளம்பணும்.’ என்று கத்தினாள்.


வழக்கமாக அப்பாதான் அவளை இருசக்கர வாகனத்திலே பள்ளிக்கு கொண்டு போய் விட்டுட்டு அப்படியே அவருடைய அலுவலகத்திற்குப் போய்டுவார். ஆனா…


‘அப்பா கிளம்பி முக்கால் மணி நேரம் ஆச்சும்மா. நீ பள்ளிக்கு பேருந்தில் போயிடு’ ன்னு அம்மா சொல்லிட்டாங்க.



முத்தழகி அழுத்தத்தின் உச்சத்துக்குப் போயிட்டா. தெருவில் இறங்கி பேருந்தைப்பிடிக்க ஓடினா. ஒரு வழியா ஒரு பேருந்தில் ஏறிகிட்டா. ‘டிக்கட்.. டிக்கட்..’னு நடத்துனர் வந்தப்பொதான் ஞாபகம் வந்தது. ‘காசு கொண்டு வரலயே’ன்னு. பகீர்னு இருந்துச்சி. “‘காசு கொண்டு போ’ன்னு இந்த அம்மா ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாமில்லே’ என்று அம்மா மேலே கோவமா வந்துது.


இப்போ என்ன செய்யிறது? நல்ல வேளை. பக்கத்துலே அவளோட தோழி சுந்தரி நின்னுகிட்டிருந்தா. ‘சுந்தரி பேருந்திற்கு காசு மறந்துட்டேண்டி’ன்னா. உடனே சுந்தரி அவளுக்கு டிக்கட் எடுத்துட்டா. முத்தழகிக்கு குற்ற உணர்வாய் இருந்துச்சி.



ள்ளிக்கு தாமதம் ஆயிருச்சி. பிரார்த்தனை முடிஞ்சி எல்லாரும் வகுப்புக்கு போயிட்டாங்க. ஒரு மணி நேரம் ‘வெளியில் நிற்கும் தண்டனை’ கொடுத்துட்டாங்க. முத்தழகிக்கு அழுகையா வந்துச்சி.’


ன்று பந்து விளையாட்டில் இரண்டு அணியுமே முத்தழகியை வேண்டாம்னாங்க. ‘அவள் ‘பாஸ்’ பண்ணி ஆட மாட்டா.. வேணுமின்னா ‘ஒப்புக்கு சப்பா’வா இருக்கட்டும்’னாங்க. முத்தழகிக்கு அவமானமா போயிருச்சி.


சாய்ந்தரமா பேருந்துக்கு காசில்லாததால நடந்தே விட்டுக்கு வந்தாள். பசி ஒரு பக்கம் வாட்டிச்சி. வீட்டுக்கு வந்த உடனே சாப்பாட்டு மேசை மேல் பார்த்தாள்.


‘எனக்கு சோர்வா இருக்கு முத்தழகி. டப்பாலே பிஸ்கட் இருக்கு. எடுத்து சாப்பிட்டுக்கோ.’னு அம்மா சொன்னாங்க. இரண்டு பிஸ்கட்டுகளை எடுத்து உள்ளே தள்ளினாள். ‘மடக் மடக்’னு இரண்டு டம்ளர் தண்ணீரை குடிச்சா.



மனசெல்லாம் துக்கமா இருந்துச்சி. அப்பொ அவளுடைய அப்பா வந்தார். அப்பாவைப் பார்த்தவுடன் முத்தழகி தேம்பித் தேம்பி அழ ஆரம்பிச்சா. பின் அம்மாவும் அப்பாவும் அவளை சமாதானப் படுத்தினாங்க. அன்றைக்கு நடந்ததை எல்லாம் முத்தழகி ஒன்னு விடாமல் அவங்கிட்டே சொன்னா.


அவளோட அம்மா அவகிட்டே, ‘முத்தழகி, ‘அவங்கவங்க வேலையை அவங்கவங்களே செஞ்சிக்கணும்’னு உங்க பள்ளிக்கு வந்த பேச்சாளர் சொன்னதுக்கான உண்மையான அர்த்தம், முடிஞ்ச வரைக்கும் மத்தவங்களுக்கு தொந்தரவு இல்லாமல் நம் வேலையை நாமே செஞ்சிக்கணும்ங்கறதுதான். ஆனா நீ, ஒருவர் மற்றவருக்கு உதவி செய்ய வேண்டிய அவசியம் இல்லேங்கிற மாதிரி தப்பா புரிஞ்சிகிட்டே. தப்பாவே நடந்துகிட்டே. உன்னை மாதிரியே எல்லாரும் நடந்துகிட்டா என்ன நடக்கும்ங்கறதுக்கு உதாரணம்தான் இன்றைக்கு நீ அனுபவிச்ச துன்பங்கள் துயரங்கள் எல்லாம்.


முத்தழகி ஆமோதித்து தலையை லேசாக ஆட்டினாள். பிறகு அப்பாவும் அம்மாவும் அவளிடம் ஒருவர் மாற்றி ஒருவர் பேசினார்கள்.


‘உன்னுடைய பல வேலைகளை செய்து கொடுக்கும் அம்மா எப்பொழுதாவது தண்ணீர் கேட்டால் நீ எடுத்துதான் தர வேண்டும்.’


‘உனக்கு பல கதைகளை சொல்லி மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ளும் வேலையை செய்யும் உன்னுடைய பாட்டி தாத்தாவிற்கு நீ பக்கத்துப் பெட்டிக் கடைக்குப் போய் வெத்தலப்பாக்கு வாங்கிட்டு வரும் வேலையை செய்யறதுதானே நியாயம்.’


‘மற்ற குழந்தைகளோடு விளையாடும்போது ஒருவரை ஒருவர் அனுசரித்து விளையாடினால்தானே விளையாட்டு சுவாரஸ்யமாக இருக்கும்’



உதாரணமா குளித்து, தலை சீவி, உடை மாற்றி, காலணி-காலுறை அணிதல் மாதிரியான வேலைகளை நீயே செஞ்சிக்கலாம். ஆனா காலை, மதியம், மாலை, இரவு உனக்குத் தேவையான உணவுகளை தயாரித்து அம்மாதானே உனக்கு கொடுத்தாகணும்.’



‘இவ்வளவு ஏன்? நாம் தினமும் சாப்பிடுற காய்கறி அரிசி, பருப்பு இதையெல்லாம் பயிர் செஞ்சி, நாம் சாப்பிட்டு உயிர் வாழ்றதுக்காக. நமக்கு அனுப்பி வெச்சி, நமக்காக உழைக்கிறவங்க யாரு?’


விவசாயி..


‘நம்ம உயிருக்கு நிகரான அந்த விவசாயி ‘எனக்கு தேவையானதை நான் பயிர் செஞ்சி சாப்பிட்டுக்கிறேன். உனக்கு தேவையானதை நீ பயிர் செஞ்சி சாப்பிட்டுக்கோ’ன்னு சொல்லிட்டா நம்ம நிலைமை என்னாகும்?’


‘நிச்சயம் பசி பட்டினிதான்’



‘அதே மாதிரி, நம் நாட்டு எல்லை ஓரத்துலே, இரவு-பகல், வெய்யில்-மழை, வெப்பம்-பணி, காடு-மலை ன்னு எந்த சூழலையும் சந்திச்சிகிட்டு, அதை சமாளிச்சி போராடிகிட்டு நிக்கிறாங்களே நம்ம ராணுவ வீரர்கள்! அவங்க, ‘நான் போரிட்டு என் உயிரைக் காப்பாத்திக்கிறேன். நீயும் என்னைப் போல போரிட்டு உன் உயிரைக் காப்பாத்திக்கோ’ன்னு சொல்லிட்டா நம் நிலைமை என்னாகும்?


‘அதோ கதிதான்.. பரலோகம் தான்’


இப்படி தன்னலம் பாராமல், ‘அவங்கவங்க வேலையை அவங்கவங்கதான் பார்த்துணும்’னு நினைக்காமல், நம் விவசாயிகளும், ராணுவ வீரர்களும் உயிரைக் கொடுத்து நம் அனைவருக்காகவும் உழைப்பதால்தான் நாம் நூற்று முப்பத்தியெட்டு கோடி இந்திய மக்கள் நிம்மதியாக வாழ்ந்துகிட்டிருக்கிறோம்.



தன் அம்மா அப்பா சொன்ன அத்தனையையும் பொறுமையா கேட்டுகிட்டிருந்தா முத்தழகிக்கு. அப்புறம் சொன்னாள்: உண்மை அம்மா. உண்மை அப்பா. நான் நல்லா புரிஞ்சிட்டேன். நான் ஒரு ஆள் அல்ல. நான் ஒரு சமுதாயத்தின் அங்கம். ஒருவருக்கொருவர் உதவி செஞ்சி வாழ்ந்தாதான் அனைவருமே நிம்மதியா வாழ முடியும்னு நல்லா புரிஞ்சிட்டேன்.



‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று கலா கேட்க அப்பாஸ்: ‘நான் தனி ஆள் அல்ல. இந்த சமுதாயத்தின் ஒரு அங்கம், என் நாட்டு விவசாயிகள் நான் பசி பட்டினியில் செத்து விடாமல், நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக தன்னலம் கருதாமல், பொது நலத்துடன், கடுமையாக உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். என் நாட்டு ராணுவ வீரர்கள் நான் அமைதியாகவும், எந்த அச்சுறுத்தலும் இல்லாமலும், மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ வேண்டும் என்பதற்காக தங்கள் உயிரை துச்சமென மதித்து வீர உணர்வுடன் நாட்டையும் என் உயிரையும் காத்துக் கொண்டிருக்கிறார்கள். நாமும் இந்த சமுதாயத்தில் – அவரவர் வேலையை மட்டுமே அவரவர் செய்து கொண்டிருக்காமல், ஒருவர் மற்றவருக்கு உதவியாக இருந்து ஒருவரை ஒருவர் அனுசரித்து வாழ்ந்தால்தான் அனைவருமே நிம்மதியாக வாழ முடியும். அது மட்டுமல்ல. எத்தகைய நெருக்கடியான காலகட்டத்திலும் நம் விவசாயிகளுக்கும் நம் ராணுவ வீரர்களுக்கும் நம்மாலான எல்லா உதவிகளையும் செய்ய வேண்டும். அதுவே அவர்களுக்கும் நம் நாட்டிற்கும் செலுத்தும் நன்றிக் கடன் ஆகும்.



குட்டீஸ்! அப்பாஸ் சொன்னது சரிதானே! சரி குழந்தைகளே! இந்தக் கதை பற்றிய உங்கள் எண்ணங்களை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.


மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?




Rate this content
Log in