DEENADAYALAN N

Children Stories Inspirational Children

4.5  

DEENADAYALAN N

Children Stories Inspirational Children

பொய்மையும் வாய்மை இடத்த…

பொய்மையும் வாய்மை இடத்த…

3 mins
255



ஹை விவு, அவி, ரிஷி, எஸ்தர், ரன்வீர் மற்றும் மை டியர் குட்டீஸ்!


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!



 

மதியம் சாப்பாட்டு நேரம்! எல்லாரும் சாப்பிட்டு விட்டு வகுப்புக்கு போயிட்டாங்க. டேவிட்டுக்கும் முகுந்துக்கும் சாப்பாடு தாமதமாதான் வந்தது. அவசர அவசரமா சாப்பிட்டு விட்டு, பரபரப்பா வகுப்புக்கு ஓடினாங்க. ஓவிய வகுப்பு. ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்டுகிட்டு அவங்க இடத்திலே உட்காரப் போனாங்க. அப்போதான் தெரிஞ்சது – கையிலே ஒரு பென்சில் வெச்சிகிட்டு எட்வின் நின்னுகிட்டு இருந்தான். 


‘டேவிட்டின் பையிலிருந்து, எட்வின் பென்சிலை எத்துகிட்டிருந்தப்போ, நான் பார்த்துகிட்டுதான் இருந்தேன் மிஸ்..’ – ன்னு அலெக்ஸ் ஆசிரியைகிட்ட சொல்லிகிட்டிருந்தான்.


‘இல்லே மிஸ்.. வந்து மிஸ்.. ‘ என்று தடுமாறிக் கொண்டிருந்தான் எட்வின்.


நிலைமையைப் பார்த்ததும் டேவிட்டிற்கு காலையில் நடந்த சம்பவம் நினைவுக்கு வந்தது:


அன்றைக்கு மதியம் ஓவிய வகுப்பு இருந்தது. மாணவ-மாணவிகள் ஓவிய வகுப்புன்னா அவ்வளவு முக்கியத்துவம் குடுக்கறதில்லேன்னு ஓவிய ஆசிரியைக்கு ஏற்கனவே கடும் கோபம் இருந்துச்சி. சரியான பென்சில் கொண்டு வரலேன்னா நிச்சயம் கடுமையான தண்டனை கொடுப்பாங்க. ஆனா எட்வின்கிட்டே விரல்களாலே பிடிக்கக் கூட முடியாதபடி ஒரு துண்டு பென்சில்தான் இருந்தது.


டேவிட்டுகிட்டே இரண்டு பென்சில்கள் இருந்துச்சி. அதனாலே அவன்கிட்டே ஒரு பென்சிலை தரும்படி எட்வின் கேட்டான். ஆனால் டேவிட், ‘ஊஹும்.. ஒன்னு முனை உடைஞ்சு போச்சின்னா இன்னொன்னு வேணும்’ அப்படீன்னு ஏதோ காரணம் சொல்லி கொடுக்கலே.


இதை எல்லாம் மதி பார்த்துகிட்டுதான் இருந்தான். டேவிட் ரொம்ப இரக்க குணம் உள்ளவன்தான். ஆனா என்னவோ தெரியலே.. பென்சிலை குடுக்கலே..


கொஞ்ச நேரம் கழிச்சி, ‘யாராவது உதவி கேட்டா நம்மாலே முடியுமின்னா முடிஞ்சத செய்யணுமின்னு’ டேவிட்டின் அம்மா அப்பப்போ சொல்றது ஞாபகம் வந்துச்சி. பென்சிலைக் நண்பனுக்கு கொடுத்திருக்கலாமோன்னு டேவிட்டுக்கு மனசுக்குள்ள கஷ்டமா இருந்துச்சி.



இப்போ வகுப்பிலே நுழையும் போது இந்த காட்சியைப் பார்த்தான்.


எட்வினின் கண்கள் கலங்கி இருந்துச்சி. டேவிட்டிற்கு எட்வினைப் பார்க்க பாவமாக இருந்தது. காலையிலேயே அவனுக்கு ஒரு பென்சிலைக் கொடுத்திருந்தா பிரச்சினை இவ்வளவு தூரம் வந்திருக்காதே! டேவிட்டுக்குள்ளே குற்ற உணர்ச்சி மன உளைச்சலைக் கொடுத்துச்சி..


‘எட்வின் இப்பிடி நிக்கிறதுக்கு காரணம் நாந்தான். எப்பிடியாவது அவனெ காப்பாத்தணும்’ என்று யோசித்துக் கொண்டிருந்த டேவிட்டிற்கு திடீரென ஒர் யோசனை தோனுச்சி.


சரி! குட்டீஸ்.. உங்கள்ளே யாராவது, டேவிட், எப்பிடி எட்வினைக் காப்பாத்தி இருப்பான்னு, கதையைத் தொடர்ந்து சொல்லி, எல்லாரும் ஏத்துக்கற மாதிரி, ஒரு திருப்பத்தை சொல்லி, யாரு இந்த கதையை முடிக்கப் போறீங்க?


‘நானு’ என்று முன் வந்து எஸ்தர் சொல்லத் தொடங்கினாள்:


‘டேவிட்டிற்கு தோனின அந்த யோசனைப்படி செஞ்சா, அவனோட குற்ற உணர்வும் போயிடும்னு தோனுச்சு. ஃப்ளாஷ் மாதிரி வந்த அந்த யோசனைப்படி அவன் ஆசிரியைகிட்ட சொல்ல ஆரம்பிச்சான்:


‘சாரி மிஸ்.. காலையிலையே எட்வின் எங்கிட்ட பென்சிலைக் கேட்டான். நான் அப்போ குடுக்கலே. மறுபடியும் மதியம் கேட்டான். அப்பொ நாந்தான் அவங்கிட்டே ‘நான் சாப்ட்டு வர கொஞ்சம் தாமதமாயிடும்.. அதுக்குள்ளே வகுப்பு தொடங்கீரும். நீ என்னோட பையிலே இருக்கிற பென்சில் பெட்டியில இருந்து பென்சிலை எடுத்துக்கோ’ன்னு சொல்லி அனுப்பினேன் மிஸ். அதனாலே எட்வின் மேலே தப்பு இல்ல மிஸ்.’ என்றான் டேவிட்.


‘அப்பிடியா.. ஏண்டா எட்வின் இதச் சொல்லக் கூடாதா.. சரி சரி. எல்லாரும் போய் அவங்கவங்க இருக்கைலே உட்காருங்க. ‘ட்ராயிங்’ நோட்டை எடுங்க.’ என்று ஆசிரியை உத்தரவிட்டார்.


வகுப்பு முடிந்தவுடன் எட்வின் டேவிட்டிடம், ‘ரொம்ப ‘தேங்க்ஸ்’டா டேவிட்.. நீ மட்டும் இப்பிடி சொல்லலேன்னா எல்லாரும் எனக்கு அவமானமா போயிருக்கும். நான் செஞ்ச தப்ப மன்னிச்சிடுடா.. இனிமேல் எப்பவும் இப்பிடி ஒரு தப்பை பண்ணக் கூடாதுன்னு என் மனசு ரொம்ப உறுதி ஆயிருச்சிடா..’ என்றான்.


‘பரவாயில்லைடா.. இதுக்கு நானும் ஒரு காரணம்தான்டா.. காலையிலே நானே குடுத்திருந்தா இப்பொ இந்த அளவுக்கு ஆயிருக்காதுடா..’ என்றான் டேவிட்.


டேவிட், எட்வினைக் காப்பாத்தத்தான் இப்பிடி ஒரு பொய் சொல்றான்னு ஓவிய ஆசிரியைக்கும் புரிஞ்சிருச்சி. தண்டனை கொடுக்கிற அளவுக்கு தானும் கண்டிப்பாக இருப்பதால்தான் எட்வின் இப்பிடி செய்திருப்பான் என்பதையும் புரிஞ்சிகிட்டாங்க. இனிமேல் தண்டனைகளை தவிர்த்து சாத்வீக முறைகளைக் கையாள வேண்டும் என்று ஆசிரியை முடிவு செய்து கொண்டார்.

 

‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று ஒரு குழந்தைக் கேட்க ரன்வீர் சொன்னான்: திருவள்ளுவர் சொன்ன மாதிரி,

‘சொல்லப் படுகிற பொய், யாருக்கும் எந்த தீங்கும் தராமல், ஒருவருக்கு குற்றமற்ற நன்மையைத் தரும் என்றால், அந்தப் பொய்யும் உண்மைக்கு சமமான ஒன்றேயாகும்’


குட்டீஸ்! அது மட்டுமல்ல. சில தண்டனைகள் பயத்தைத் தூண்டி தவறுகளை செய்ய வைக்கும். சில மன்னிப்புகள் மனத்தில் உரமேற்றி எந்த சூழ்நிலைகளிலும் தவறுகள் செய்யாமல் இருக்கச் செய்யும்.


ஓகே குட்டீஸ்.. உங்களில் யாராவது உங்கள் கற்பனைக் குதிரையைத்தட்டி விட்டு, இந்தக் கதைக்கு, உங்கள் கருத்துக்களை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.



மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?



 

 

 


Rate this content
Log in