பொறுப்பும் ஒழுக்கமும்
பொறுப்பும் ஒழுக்கமும்
ஹை விவு, அவி, ரிஷி, அபி, ஜெஸ்மி, நித்தி, ஆரா, ஹபீப், பார்த்தன் மற்றும் மை டியர் குட்டீஸ்!
கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?
‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!
முத்து இன்றும் தாமதமாகத்தான் வந்தான்.
வகுப்பு ஆசிரியை ‘என்னடா முத்து.. அடிக்கடி பள்ளிக்கு தாமதமா வர்றியே..?’ ன்னு கோபமாக் கேட்டாங்க.
‘இன்னைக்கு அம்மா டிஃபன் செய்ய தாமதம் ஆயிருச்சி டீச்சர்’ – அப்பிடீன்னான் முத்து.
முத்து அடிக்கடி தாமதமா வருவது உண்மை. ஆனால் அதுக்கு அவன் சொல்ற காரணமெல்லாம் பொய்! வருகிற வழிலே பசங்க கூட சேந்துகிட்டு தோப்புகளுக்குப் போயி மாங்கா, புளியங்கான்னு அடிச்சிட்டு ஜாலியா சுத்திட்டு வகுப்புக்கு தாமதமா வருவான். கேட்டா டிஃபன் லேட்டு, சீருடை காயலே அது இதுன்னு பொய் சொல்லீருவான்.
வைசுக்கு இந்த விஷயம் நல்லா தெரியும். ஏன்னா, வைசுவுக்கும், முத்துவுக்கும் பக்கத்து பக்கத்துலே வீடு. ரெண்டு பேரும் ஒன்னாதான் பள்ளிக்கு கெளம்புவாங்க. ஆனா கொஞ்ச தூரம் வந்த உடனே முத்து வேற சில பசங்க கூட போய் சேர்ந்துக்குவான். அவங்க கூட சேர்ந்து தோப்புக்கு போவான். இல்லன்னா ஆறு குளம்னு போவான். அப்புறம் லேட்டாத்தான் பள்ளிக்கு வருவான்.
அதே மாதிரி சாய்ந்தரம் பள்ளி விட்ட உடனே நேரா பள்ளி மைதானத்துக்குப் போயிருவான். அங்கே ஒழுங்கா விளையாடிகிட்டு இருக்கிறப் பசங்களை வம்பிழுத்துகிட்டு இருப்பான். அவங்களோட பள்ளிப் பைகளையெல்லாம் எடுத்து ஒளிச்சி வெச்சி அவங்களை வெறுப்பேத்துவான். சண்டை போடுவான். சாய்ங்காலமா வீட்டுக்கு வரும்போதும் லேட்டாதான் வருவான் முத்து.
‘என்னடா தினமும் இப்பிடி சுத்திட்டு, லேட்டா வர்றியே’ன்னு அம்மா கேட்டால், ‘மைதானத்தில் விளையாடிட்டிருந்தேன்; டீச்சர் எழுதிப் போட்டதை எழுதீட்டு வர்றதுக்கு கொஞ்சம் தாமதமாயிருச்சி’ ன்னு ஏதாவது ஒன்னு சொல்லுவான்.
ஆனால் உண்மையில் தெருவில் வித்தை காட்டுபவர் அவர் இவர்னு அங்கங்கே நின்னு வேடிக்கை பார்த்துட்டு தான் வருவான்.
‘ஏன் கண்ணு.. பள்ளிக்கூடம் விட்டு வீட்டுக்கு வந்து மூனு மணி நேரம் ஆச்சல்ல. ஏதாவது வீட்டுப்பாடம் இருந்தா எடுத்து முடிக்கலாமல்ல?’ன்னு முத்துவோட அம்மா செல்லமா சொல்லுவாங்க.
‘இருமா.. கொஞ்ச நேரம் டிவி பார்த்துட்டு வந்துடறேன்..’ முத்து வழக்கம் போல் இழுத்தடித்தான்.
‘அதில்லடா.. இப்பொ உட்டுட்டு காலைல பள்ளிக்கூடம் போறப்போ அவசர அவசரமா செய்றியே.. அதுக்குத்தான் சொன்னேன்’ என்றாள் அம்மா
இப்பிடி ஒவ்வொரு இடத்திலும் பொறுப்பு இல்லாம நடந்துகிட்டு திரிஞ்சதாலே, சரியா படிக்காம குறைந்த மதிப்பெண்களையே வாங்கிட்டு வருவான்.
வைசுக்கு, முத்து இப்பிடி நடந்துக்கறதும், ஊர் சுத்தறதும், படிப்புலே கவனமில்லாமல் இருக்கறதும், பொய் பேசறதும் ரொம்ப வருத்தமா இருந்துச்சி. ‘டேய் இன்னைக்கு கண்டிப்பா உங்க அம்மாகிட்ட எல்லாத்தையும் சொல்லப் போறேண்டா’ என்று கோபமாக சொன்னான்.
அப்படி மிரட்டினாலாவது அவன் பயந்துகிட்டு திருந்துவான்னு வைசு எதிர்பார்த்தான். ஆனால் முத்து எதற்கும் அசைஞ்சு கொடுக்கலே.
முத்து நல்ல பையன் தான். இப்பிடி சேரக் கூடாதவங்களோடு சேர்ந்து கெட்டுப் போறது ரொம்ப கஷ்டமா இருந்துது. ஏதாவது செஞ்சி முத்துக்கு நல்ல புத்தியை கொடுக்கணும்னு வைசுக்கு தோனுச்சி.
‘சரி! குட்டீஸ்.. இந்த இடத்துலே கதையை நிறுத்தறேன். முத்து திருந்த வைசு என்ன செஞ்சிருப்பான்? அவனோட முயற்சி வெற்றி பெறுமா? முத்து திருந்துவானா? அப்புறம் என்ன நடந்திருக்கும்னு யோசிச்சு, உங்களில் யாராவது மேலும் தொடர்ந்து சொல்லி இந்தக் கதையை முடீங்க பாக்கலாம்!’ என்றேன்.
‘நான் சொல்றேன்’னு முன் வந்த நித்திலா தொடர்ந்தாள்:
வைசு நடந்ததை எல்லாம் தன் அப்பாவிடம் சொன்னான். ‘அப்பிடியா? சரி கவலைப் படாதே. இன்னும் ரெண்டு மூனு நாள்லே அவன் திருந்திருவான் பாரு’ ன்னு வைசுவோட அப்பா உறுதியா சொன்னாரு.
அதே போல நான்கைந்து நாள் கழிச்சி பார்த்தா முத்து ரொம்ப பொறுப்பான பையன் ஆயிட்டான். பள்ளிக்கு தாமதமா வர்றதில்லே. வீட்டுலே அம்மாகிட்டே பொறுப்பா நடந்துகிட்டான். பள்ளிலே இருந்து வந்த உடனே முதல் வேலையா வீட்டுப் பாடத்தை முடிச்சிருவான். தோப்புப் பக்கம் தலை வெச்சி கூட படுக்கறதில்லே. வித்தை காட்றவர் கூட்டத்துக்குப் பக்கத்துலே கூட போறதில்லே. பள்ளி மைதானத்துலேயும் நண்பர்கள் கூட நல்ல முறையில் விளையாடினான். பள்ளீலே டீச்சர்கிட்டேயும் ‘ரொம்ப நல்ல பையன்’னு பேர் வாங்குனான். நல்லாவும் படிக்க ஆரம்பிச்சிட்டான். வீட்லே அம்மாவும் சந்தோஷமா அவனை அப்பப்போ செல்லமா பாராட்ட ஆரம்பிச்சிட்டாங்க. அது அவனுக்கு ஒரு ‘டானிக்’ மாதிரி ரொம்ப உற்சாகமா இருந்தது.
அன்று வழக்கம் போல முத்துவும் வைசுவும் பள்ளிக்கு கிளம்பினாங்க. முத்து தானாகவே ஆரம்பிச்சான்.
“டேய் வைசு.. நீ எனக்கு நல்லது சொன்னப்பொ எல்லாம் நான் கேட்கலே. ஆனா ஏழெட்டு நாளைக்கு முன்னாலே வழக்கம் போல ‘பெரிய மீசை சம்பாண்ணன்’ தோப்புக்குப் போனேன். சம்பாண்ணன் ஒளிஞ்சிருந்து வந்து என்னை ‘லபக்’குன்னு புடிச்சிட்டாரு. எனக்கு ஒரே பயமா போச்சி. நடுநடுங்கிப் போயிட்டேன். யாராவது அவருகிட்டே மாட்டுனா ‘தோலை உரிச்சி உப்பு கண்டம்’ போட்ருவாருன்னு சொல்லுவாங்க. பயத்துலே எனக்கு பேச்சே வரலே. என்ன பண்றதுன்னே தெரியலை. ரொம்ப மிரட்டினாரு. ‘டேய்.. நீ படிக்கிற பையன்கிறதனாலே உன்னை இன்னைக்கு விடறேன். இன்னொரு தடவை இந்த மாதிரி மாங்கா எடுக்க தேங்கா எடுக்கன்னு தோப்புக்குள்ளே வந்தே உங்க அம்மாகிட்டே சொல்லிருவேன். அவங்க உன்னை எங்கேயாவது ‘ஹாஸ்டல்’லே கொண்டு போய் விட்டுருவாங்க. ஹாஸ்டல்லே ரொம்ப கண்டிப்பா இருப்பாங்க. எந்தக் குறும்பும் பண்ண முடியாது. நீ யாரையும் பாக்கவும் முடியாது. ஜாக்கிரதை‘ன்னு எனக்கு எச்சரிக்கை குடுத்து அனுப்பிச்சிட்டாரு.
எனக்கு ஒரே பயமாவும், கவலையாவும் போயிருச்சி. அதே வருத்தத்துலே அன்னைக்கு சாய்ந்தரம் வித்தைக் காட்றவர் கூட்டத்துக்கு போனேன். அவரு என்னைப் பிடிச்சி ‘வித்தைக் காட்றதுக்கு படுடான்னு’ கீழே இழுத்து தள்ளப் பார்த்தாரு. நான் திமிறிகிட்டு ஓடப் பார்த்தேன். ‘இனிமே இஸ்கோல் (பள்ளி)லே படிக்கிற புள்ளீங்க இந்தப் பக்கம் வந்தீங்கன்னா அப்பிடியே வித்தைலே இழுத்துப் போட்டு மாயம் மந்திரம் செஞ்சிருவேன்’னு சொல்லி மிரட்டி துரத்தி உட்டுட்டாருடா”
‘அப்பிடியா..!’ன்னு வைசு ஆச்சரியப்பட்டான். ‘எப்பிடியோடா.. கெட்ட சகவாசத்தை எல்லாம் விட்டுட்டு, உன் தப்பை உணர்ந்து, இந்த மாதிரி பொறுப்பான பையனா நீ மாறுனதுக்கு அந்த பெரிய மீசை சம்பாண்ணனும், வித்தைக் காட்றவரும்தான் காரணமா இருந்திருக்காங்க. அவங்களுக்கு நன்றிதான் சொல்லனும்!’னான்.
‘உண்மைதாண்டா’ என்றான் இப்போது அறிவோடும் பொறுப்போடும் இருக்கும் முத்து.
அன்று மாலை வைசு தன் அப்பாவிடம், ‘அப்பா இப்பொவெல்லாம் முத்து ரொம்ப பொறுப்பானவனா ஆயிட்டான்பா. அப்பிடி நீங்க அந்த தோப்புக்காரர்கிட்டையும், வித்தைக்காரர்கிட்டையும் என்னப்பா சொன்னீங்க?’ன்னு வைசு ஆர்வமா கேட்டான்.
‘ஹூம்.. உண்மையை சொன்னேன்’ அப்பிடின்னு ரஜினி ஸ்டைல்லே சொல்லிட்டு வைசுவின் அப்பா சிரிச்சார்.
‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று அவி கேட்க ஜெஸ்மி சொன்னாள்: ‘ஒழுக்கமும் பொறுப்பும் இல்லாதவர்கள் வாழ்க்கையில் மிகவும் துன்பப்படுவார்கள்’ என்பதும், ‘கூடா நட்பு கேடாய் முடியும்’ அப்பிடீங்கிறதும் இக்கதையோட நீதி ஆகும். இந்தக் கதையில் முத்து திருந்தியிருக்கவில்லை என்றால், அந்த தோப்புக்காரரும், வித்தைக்காரரும் சொன்னதைப் போல்தான் அவன் வாழ்க்கை ஆகி இருக்கும். எனவே நாம் அனைவரும் வாழ்க்கையில் ஒழுங்காகவும் பொறுப்பாகவும் வாழ வேண்டும்.
குட்டீஸ்! ஜெஸ்மி சொன்னது சரிதானே! சரி குழந்தைகளே! இந்தக் கதை பற்றிய உங்கள் எண்ணங்களை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.
மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?
அன்புடன்
கோவை என். தீனதயாளன்
