DEENADAYALAN N

Children Stories Inspirational Children

5.0  

DEENADAYALAN N

Children Stories Inspirational Children

பம்பாய் மிட்டாய்!

பம்பாய் மிட்டாய்!

4 mins
291



ஹை விவு, அவி, ரிஷி, ரோஹன், நித்தின், மகி, கோபிந்சிங் மற்றும் மை டியர் குட்டீஸ்!


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!


முதல் நாள்: (நேற்றைக்கு முந்தைய நாள்)

பேருந்து வந்து நின்ன உடனே மற்ற பசங்க கூட சேர்ந்து குருசிங்கும் இறங்கினான். இறங்கின உடனே பள்ளிக்கூடத்தின் பெரிய கதவு வழியா வெளியிலே பார்த்தான். இன்னைக்கும் அவரைப் பார்க்க முடிஞ்சது. அதே மூங்கில் கழி கையிலே வெச்சிருந்தாரு. அந்த கழியோட உச்சியிலே ஒரு பொம்மை கைதட்டிகிட்டு இருந்துச்சி. தலையையும் இப்படி அப்படி ஆட்டிகிட்டு இருந்துச்சி. அந்த பொம்மைக்கு கொஞ்சம் கீழே வெள்ளை, ரோஸ், மஞ்சள்னு மூனு நாலு வண்ணங்கள்லே பெரிய அளவிலே ‘பம்பாய் மிட்டாய்’ங்கிற ஜவ்வு மிட்டாய் அப்புன மாதிரி நெறைய இருந்துச்சி.


இரண்டாம் நாள்: (நேற்று)

முதல் நாள் பார்த்த மாதிரியே இப்பவும் அவரைச் சுத்தி ஏழெட்டு பசங்க பொண்ணுக கூட்டமா நின்னுகிட்டிருந்தாங்க. அந்த பம்பாய் மிட்டாய்க்காரர், மிட்டாயை எடுத்து, எல்லாருக்கும் – அவங்கவங்க ஆசைப்படற மாதிரி - ஒரு கடிகாரமாவோ, மோதிரமாவோ இல்லேன்னா ஒரு வளையல் மாதிரியோ செஞ்சி கட்டி விட்டுகிட்டிருந்தாரு. அப்பிடி கட்டின உடனே, ஒவ்வொருத்தருக்கும் ஒரு சின்ன சுண்டு விரல் அளவு ஜவ்வு மிட்டாயை எடுத்து கன்னத்துலே தவறாமெ ஒட்டியும் விட்டாரு. அந்த ஜவ்வு பிசுபிசுப்பைத் தாழாம பசங்க, உடனடியா அதை கன்னத்தில் இருந்து பிரித்தெடுத்து வாயிலே போட்டுகிட்டாங்க.


நேத்து மத்தியானம், குருசிங் மத்த பசங்களோட தானும் பக்கத்துலே போய் நின்னப்போ, அந்த பம்பாய் மிட்டாய்க்காரர் இவனுக்கும் காசு வாங்காமலே ஒரு பாம்பு வடிவத்துலே மிட்டாயை கையிலே கொடுத்து, ஒரு சின்ன ஜவ்வு மிட்டாயை இவன் கன்னத்திலேயும் ஒட்டி விட்டாரு. இவனுக்கு மட்டுமில்லாமல் இன்னும் சில பசங்களுக்கும் அவர் இலவசமா மிட்டாய் கொடுத்தார். நேத்து வீட்டுக்கு போனதுமே இந்த விஷயத்தை தன் அம்மாகிட்டே சொன்னான்.


‘ஏ குருசிங், ஜாக்கிரதைடா ராஜா.. இப்போவெல்லாம் குழந்தைங்களைக் கடத்துறவங்க ஏதேதோ வேஷம் போட்டுகிட்டு வருகிறாங்களாம். நீ பக்கத்திலே போகாதே’ ன்னு கண்டிப்பா சொல்லிட்டாங்க.


‘அவரைப் பார்த்தா அப்படி தெரியலைம்மா.. நல்லவர் போலதான் தெரியறாரு’ அப்பிடீன்னான் குருசிங்.


‘இல்லே குரு. சில குழந்தைங்களுக்கு காசு வாங்காமலே மிட்டாய் கொடுக்கிறார்னு சொல்றே. ஏன்? அப்பொதானே அந்தக் குழந்தைங்க அவர் சொல்றதை கேப்பாங்கன்னு இருக்கலாம். அப்புறம் நைசா ஏதாவது செஞ்சிடப் போறாரு’ன்னு எச்சரிக்கை பண்ணினாங்க.


அம்மா சொல்றதுலையும் ஒரு ஞாயமிருந்துச்சி. சில குழந்தைகளுக்கு மட்டும் எதுக்காக காசு வாங்காமெ கொடுக்கிறார். அவர் பணம் இல்லாதனாலேதானே இவ்வளவு கஷ்டப்பட்டு, இந்த சின்ன வியாபாரம் பண்றாரு. அப்பிடி இருக்கும் போது, சிலருக்கு இலவசமாவும் கொடுக்கிறார்னா, கொஞ்சம் யோசிக்கதான் வேணும்.


இப்பிடியெல்லாம் யோசிச்சிகிட்டே நேத்து குருசிங் தூங்கப் போனான். ராத்திரி முழுக்க கனவு. அந்த மிட்டாய்க்காரர் பீடி பிடிச்சிகிட்டு எல்லாரையும் கை நீட்டி கூப்பிடறது போலவும், யாரோ குழந்தைகளை இழுத்துகிட்டு போவது போலவும், ரவுடிகள் போல முகம் வெச்சிகிட்டு சிலர் வருகிற மாதிரியும், போலீஸ் அவர் பின்னால் ஓடுறதைப் போலவும், குருசிங்கிற்கு ஒரே கனவாக இருந்துச்சி.



மூன்றாம் நாள் (இன்று)

இன்னைக்கு காலைலே எழுந்திருச்சி, பள்ளிக்கு வந்து அவரைப் பார்த்த உடனேயே குருசிங்குக்கு பயம் தொத்திகிச்சி. எப்பொ யாரைக் புடிச்சிகிட்டு போயிடுவாரோன்னு பயமா இருந்துச்சி. ப்ரார்த்தனை முடிஞ்சி, ப்ரார்த்தனைக் கூடத்திலிருந்து வகுப்புக்கு போகும்போது கூட, மிட்டாய்க்காரரை பார்த்தான், அவர் கூட பெரிய மீசை வெச்ச ஒரு ஆள் ஏதோ பேசிகிட்டிருந்தார். குருசிங்குக்கு இன்னும் பதட்டமா இருந்திச்சி. வகுப்புலே சரியா படிக்கக் கூட முடியலே.


பள்ளி இடைவேளையிலே ஒரு முறை குருசிங், பெரிய கதவு பக்கம் பார்த்தான். மிட்டாய்க்காரர் பள்ளிக்கூட காவலாளிகிட்டே ஏதோ பேசிகிட்டிருக்கறது தெரிஞ்சிது. அவன் பயம் இன்னும் கொஞ்சம் அதிகமாச்சி.


கடைசியா பொறுக்க முடியாம, குருசிங் சில பசங்கிட்டே தன் பயத்தை சொல்ல, விஷயம், வகுப்பு ஆசிரியைக்கு போச்சு. அவங்க தலைமை ஆசிரியைக்கு சொன்னாங்க. தலைமை ஆசிரியை போலீஸ் காரங்களை கூப்பிட்டுட்டாங்க.


போலீஸ்காரர் மிட்டாய்க்காரரை கூட்டிகிட்டு வந்து ஒரு வகுப்பறைலே உக்கார வெச்சி ஏதேதோ கேட்டாங்க. ரொம்ப நேர விசாரணைக்கப்புறம், அந்த மிட்டாய்க்காரர் அப்படிப்பட்ட ஆள் இல்லேன்னு தெரிஞ்சி, அவரை ‘இனிமேல் பள்ளி அருகில் வியாபாரம் செய்யக் கூடாது’ன்னு சொல்லி அனுப்பி வெச்சிட்டாங்க.


குருசிங்கின் விழிப்புணர்வை போலீஸ்காரங்களும் பாராட்டினாங்க. தலைமை ஆசிரியரும் மற்ற ஆசிரியர்களும் கூட குருசிங்கின் ஜாக்கிரதை உணர்வை ரொம்பப் பாராட்டினாங்க


அன்றைக்கு மாலை வீட்டுக்கு போக பள்ளிப் பேருந்தில் ஏறும் போது, மிட்டாய்க்காரர் நின்ன இடம் காலியா இருந்துச்சி. அதைப் பார்த்து குருசிங்கோட மனசுலே பாரம் ஏறிகிச்சு.


‘பாவம் அந்த மிட்டாய்க்காரர். தன்னால்தான் அவருக்கு பிழைப்பு போயிருச்சி’ங்கிற குற்ற உணர்வு குருசிங்கோட மனசுலே புரள ஆரம்பிச்சிடுச்சி.


 

‘சரி! குட்டீஸ்.. இந்த இடத்துலே கதையை நிறுத்தறேன். குருசிங் செய்தது சரியா? அவன் குற்ற உணர்வு ஞாயம்தானா? இதெல்லாம் யோசிச்சு, உங்களில் யாராவது மேலும் தொடர்ந்து சொல்லி இந்தக் கதையை முடீங்க பாக்கலாம்!’ என்றேன்.


‘நான் சொல்றேன்’னு முன் வந்த ரோஹன் தொடர்ந்தான்:

குருசிங் பார்த்தவைகளும், நடந்தவைகளும், அவன் வீட்டுலே விபரங்களை சொன்னதும், அவன் அம்மா சொன்னதும், மாணவர்கள் ஒன்னு சேர்ந்து விஷயத்தை பள்ளியில் சொன்னதும், இதுலே எதுவுமே தப்பு இல்லே. அந்த விழிப்புணர்வு அப்பிடீங்கிறது எல்லா மாணவர்களுக்குமே கட்டாயம் இருக்கணும். அதே மாதிரி மிட்டாய்க்காருக்கு பிழைப்பு போயிருச்சேன்னு குருசிங்குக்கு குற்ற உணர்வு வந்ததும் ரொம்பவும் ஞாயமான விஷயம்தான்.


அதனாலே அவன் ரொம்ப யோசனை செஞ்சி அவனோட அப்பாகிட்டே தன் மனக்கஷ்டத்தை எடுத்து சொன்னான். அப்பாவும் அவன் நிலைமையப் புரிஞ்சிகிட்டார். மிட்டாய்க்காரர் பிழைப்புக்கு ஏதாவது வழி செஞ்சாதான் குருசிங் மனசு சாந்தம் ஆகும். அதைப் புரிஞ்சிகிட்ட அவன் அப்பா, அந்த மிட்டாய்க்காரரின் இருப்பிடத்தைப் பள்ளிக் காவலாளி மூலம் தெரிஞ்சிகிட்டு, அவரை மறுநாள் காலை தன் அலுவலகத்துக்கு வந்து பார்க்க சொன்னார்.


அடுத்தநாள் காலைலே மிட்டாய்க்காரர் குருசிங்கின் அப்பாவைப் பாக்க அலுவலகத்துக்கு வந்திட்டாரு.


‘மிட்டாய்க்காரரே, இங்கே ஒரு வேலை இருக்கு செய்றீங்களா?’ அப்பிடீன்னு குருசிங்கின் அப்பா கேட்டார்.


‘கண்டிப்பா செய்றேன் சார்.. ‘னாரு மிட்டாய்க்காரர்


‘இந்த அலுவலகத்திலே சுமார் நூறு பேர் வேலை செய்றாங்க. இவங்க அத்தனை பேருக்கும் காலை மாலை இரண்டு வேளையும் தேனீர் தயாரிச்சுக் கொடுக்க வேண்டியது உங்க வேலை. அதிலே வரும் லாபம் முழுவதும் உங்களையே சேரும். சரியா..?’


‘ரொம்ப நன்றி சார்’


ஒரு சின்ன அறையைக் காண்பிச்சி, ‘இதோ இந்த அறையை தேனீர் தயாரிக்கிறதுக்கு பயன் படுத்திக்கங்க. இங்கே மின்சார அடுப்பு, நூறு டம்ளர்கள், தேனீர் தயாரிக்க தேவையான பாத்திரங்கள், பால் பாத்திரம் அப்பிடீன்னு எல்லாமே இருக்கு. எல்லாத்தையும் நீங்க பயன் படுத்திக்கலாம். ஓகேவா..?’


மிட்டாய்க்கார் கலங்கிய கண்களோட குருசிங்கோட அப்பாவைப் பார்த்து வணங்கினார்!


‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று கோபிந்சிங் கேட்க, விவான் சொன்னான்: சில சமயங்களில் நாம் நல்லது செய்யும் போது கூட சில பிரச்சினைகள் வரலாம். அதற்காக நல்லது செய்யாமல் இருந்துவிடக்கூடாது. இந்தக் கதையிலே குருசிங் பயந்தது போல நடந்திருந்தா விஷயம் ரொம்ப விபரீதமா போயிருக்கும் இல்லையா? ஆனா நல்ல வேளை. அப்பிடி எதுவும் நடக்கலே.


ஆனா அதே சமயத்துலே, இன்னொருத்தருக்கு இதனால் ஒரு பிரச்சினை ஏற்படுறது அப்பிடீங்கிறதும் ரொம்ப வருத்தமான விஷயந்தான். அப்படி பிரச்சினை ஏற்பட்டவங்களுக்கு நம்மாலான எல்லா உதவிகளையும் செஞ்சி, அவங்களோட பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டியதும் நம் பொறுப்பு ஆகும். 

 

குட்டீஸ்! விவான் சொன்னது சரிதானே! குழந்தைகளே இந்தக் கதை பற்றிய உங்கள் எண்ணங்களை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.



மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?


அன்புடன்


கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in