DEENADAYALAN N

Children Stories Inspirational Children

5  

DEENADAYALAN N

Children Stories Inspirational Children

பலவானும் புத்திமானும்!

பலவானும் புத்திமானும்!

4 mins
309


                                    கதை என் கையில்! முடிவு குட்டிஸ் கையில்! – 10

                                            பலவானும் புத்திமானும்!

                                           (கோவை என். தீனதயாளன்)

                        

 

ஹை விவு, அவி, ரிஷி, ரிச்சி, டார்வின், காந்தி, சரோ, ஜெகன், அலெக்ஸ், ராஜா, கிரிஜா மற்றும் மை டியர் குட்டீஸ்!


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!


 

அந்த வகுப்பிலேயே ஜக்கு கொஞ்சம் பெரிய பையன். எல்லோரையும் பயமுறுத்தி வெச்சிருந்தான். அவனை மிஞ்சி யாரும் எதுவும் செய்ய முடியாது. அவன் யாருகிட்டேயாவது பிரச்சனைப் பண்ணிகிட்டு பேச்சு வார்த்தை இல்லாம இருந்தான்னா மத்தவங்களும் அவங்ககிட்டே பேசக் கூடாதுன்னு உத்தரவு போட்ருவான். புதுசா வித்தியாசமா பென்சில் பேனா அந்த மாதிரி, பசங்க கொண்டு வந்தாங்கன்னா, அதை அவங்கிட்டேயிருந்து பறிச்சுக்குவான். ‘வீட்லே கேட்டாங்கன்னா தொலைஞ்சி போச்சின்னு சொல்லுடா’ன்னு உத்தரவும் போட்டுடுவான்.


யாராவது டீச்சரிடம் போய் இவனைப் பத்தி சொன்னா இன்னும் அதிகமா மிரட்டுவான். ‘டேய், எவனாவது டீச்சரிடம் என்னைப் பத்தி ஏதாவது போட்டுக் குடுத்தீஙன்னா அவ்வளவுதான். சொன்னவன் வெளிலே வந்தா நல்லா வட்டியும் முதலுமா குடுப்பேன். தெரிஞ்சிக்கோங்க’ன்னு பயமுறுத்துவான். ஆனால் டீச்சரிடம் பேசும்போது மட்டும் தான் நல்ல பையனைப் போல் ஒழுங்காக பேசுவான். படிப்பில் சுமார்தான் என்றாலும் வீட்டுப் பாடமெல்லாம் மற்றவர்களிடம் கேட்டு எழுதிக் கொடுத்துருவான்.


இதற்கெல்லாம் பயந்துகிட்டு நல்ல பசங்க ‘துஷ்டனைக் கண்டால் தூர விலகு’ன்னு அவன் பக்கமே போக மாட்டாங்க. அதையும் மீறி அவன் வம்புக்கு வந்தான்னா அவன் கேட்கிறதை கொடுத்துட்டு ஒதுங்கிப் போயிருவாங்க.


ஆனா துரையால் அப்படி இருக்க முடியலே. ‘இவனுடைய தப்பு ரொம்ப அதிகமாயிட்டிருக்கு. இதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணனும்’னு முடிவு செஞ்சான். அதுக்கு தகுந்த மாதிரி ஒரு சரியான சமயமும் அமைஞ்சுது. அதே வகுப்புலே படிக்கிற வீரன். ஜக்கு வீரன்கிட்ட பேசறதில்லே. அதனாலே யாரும் அவன்கிட்டே பேசக் கூடாதுன்னு மத்தவங்களுக்கு உத்தரவு போட்டிருந்தான். இந்த சமயத்துலே, வீரன், துரைகிட்டே கட்டுரை நோட்டு கேட்டான். வீரன்கிட்டே கட்டுரை நோட்டைக் கொடுத்தா ஜக்கு தன்னிடம் சண்டைக்கு வருவான்னு துரைக்கு தெரியும். ஆனா இதுதான் தனக்கு இந்த விஷயத்தை ஒரு முடிவுக்கு கொண்டு வர நல்ல வாய்ப்புன்னு துரை முடிவு செஞ்சான். வேணுமின்னே ஜக்குவுக்கு தெரியற மாதிரி தன்னோட கட்டுரை நோட்டை வீரன்கிட்டே கொடுத்தான். அதைப் பார்த்த ஜக்கு இடைவேளைலே துரையை மிரட்டினான். துரையும் சளைக்காமல் ‘அப்பிடிதாண்டா குடுப்பேன்’னு எதிர்த்து சொல்லிட்டான். ஜக்கு மற்ற பசங்ககிட்டே, ‘டேய் இனிமே துரை கூட யாரும் பேசக்கூடாது. அவன் வெளியே வரட்டும். நான் கவனிச்சிக்கிறேன்’னு ரோஷமா சொன்னான். ஆனா துரை அதை கண்டு கொள்ளவில்லை.


இதுக்கு பயந்துகிட்டு அடுத்த ஓரிரு நாட்கள் துரைகிட்டையும் வீரன்கிட்டையும் மத்த பசங்க யாரும் பேச முன் வரலை. ஜக்கு அப்பப்பொ இவங்க ரெண்டு பேரையும் கிண்டலும் கேலியும் பண்ணிகிட்டு இருந்தான். இதைப் பார்த்து துரை ஒரு முடிவுக்கு வந்தான். அந்த முடிவுப்படி தன் காரியங்களையும் நிறைவேற்றினான்!


அதன் பின் ஜக்கு ரொம்ப நல்ல பையன் ஆகி விட்டான். எல்லோருக்கும் ஆச்சரியம். இது எப்படி சாத்தியம் ஆனது?


‘சரி! குட்டீஸ்.. இந்த இடத்துலே கதையை நிறுத்தறேன். ‘அவ்வளவு முரடனா இருந்த ஜக்கு அப்படி நல்லவனா திருந்தற அளவுக்கு அப்படி என்ன நடந்திருக்கும்?’னு யோசிச்சு, உங்களில் யாராவது மேலும் தொடர்ந்து சொல்லி இந்தக் கதையை முடீங்க பாக்கலாம்!’ என்றேன்.


‘நான் சொல்றேன்’னு முன் வந்த விவு தொடர்ந்தான்:

ஒரு முடிவுக்கு வந்த துரை, அன்று மத்தியானம் உணவு இடைவேளையில் ஆசிரியர்கள் அறைக்குப் போனான். அங்கே தன் டீச்சர்கிட்டே ஜக்குவோட அட்டகாசத்தை பொறுமையா எடுத்து சொன்னான். அதை கேட்டுகிட்ட டீச்சர் அவனுக்கு சில யோசனைகள் சொல்லி அதன்படி செய்யச் சொன்னாங்க.


அடுத்த நாள் காலையிலே எல்லாரும் பள்ளிக்கு வந்துகிட்டிருந்தாங்க. பள்ளிலே இன்னும் மணி அடிக்கலே. அப்போ நல்ல முறுக்கு மீசையா வெச்சிகிட்டு, கோபமான முகத்தோட ஒரு ஆள் வந்தார். அவரைப் பார்த்தால் முரட்டு ஆளா தெரிஞ்சது. அங்கே ஜக்கு, துரை மற்றும் நிறைய பசங்க இருந்தாங்க.


‘டேய் துரை.. ‘ என்று இடி போல சத்தம் போட்டு கூப்பிட்டார்.


‘மாமா..’ என்று கூறிக் கொண்டே துரை அவர் அருகில் ஓடி வந்தான். 


‘ஏண்டா.. அறிவில்லே உனக்கு.. புத்தகத்தை மறந்து வெச்சிட்டு வந்திட்டியே..’ என்று திட்டினார், துரை பயந்து கொண்டே ‘ஆமா மாமா.. மறந்துட்டேன்’ என்று நடுங்கிக் கொண்டே புத்தகத்தை வாங்கிக் கொண்டான்.


‘ஆமா இங்க யாராவது உன்னை வம்புக்கு இழுக்குறாங்களா? மிரட்டுறாங்களா?’ன்னு தன் மீசையை முறுக்கிகிட்டே கேட்டார்.


‘இல்லே மாமா. அப்பிடியெல்லாம் இங்கே யாருமில்லே. எல்லாரும் நல்ல பசங்கதான்’னு சொல்லி அவரை நைசாக பேசி அனுப்பி வெச்சிட்டான்.


அவர் அந்தப் பக்கம் நகர்ந்த உடன், ‘ அப்பாடா..’ என்று துரை பெரு மூச்சு விட்டான். வீரனிடம் போய் சத்தமாக ‘ டேய் வீரா இவுரு எங்க மாமாடா. இவரப் பார்த்தா எல்லாரும் பயப்படுவாங்க. ரொம்ப கோபக்காரருடா. அதனாலேதான் அவரை நைசா பேசி அனுப்பி வெச்சிட்டேன்.’ என்று சொன்னான்.


ஜக்கு அப்படியே அமைதியாக வகுப்புக்குள் போய்க் கொண்டிருப்பது தெரிந்தது.


அதன் பிறகு ஜக்குவின் போக்கு மாறி விட்டது. யாரையும் மிரட்டுவதுமில்லை. அது மட்டுமில்லே. சமீபத்துலே அவன் பசங்ககிட்டே மிரட்டி வாங்கிட்டுப் போயிருந்த எல்லாப் பொருள்களையும் கொண்டு வந்து கொடுத்துட்டான். ரொம்ப நல்ல பையன் ஆகி இருந்தான். எல்லார்கிட்டையும் ரொம்ப அன்பா பழகினான். நன்றாக படிக்கவும் செஞ்சான்.


வீரன் துரையிடம் வந்து மெதுவாக கேட்டான். ‘என்னடா.. உங்க முரட்டு மாமா வந்துட்டு போனதிலிருந்து, ஜக்கு அப்பிடியே ஆளே மாறிப்போயிட்டான். இப்பொ எல்லாம் எல்லார்கிட்டேயும் சாந்தமா பழகுறான். என்ன நடந்தது?’


‘ஒன்னும் நடக்கலேடா. ஜக்கு விஷயத்தை நம்ம டீச்சர்கிட்டே போய் விவரமா சொன்னேன். அவங்க எங்கிட்டே, ‘தன்னை விட பலசாலி இல்லேன்னு நெனச்சிகிட்டு ஜக்கு இப்பிடி நடந்துக்கிறான். ‘நம்மள விட பலசாலிக இந்த உலகத்துலே நிறைய பேர் இருக்காங்க’ன்னு உணர்ந்துட்டா அவன் இப்பிடியெல்லாம் நடந்துக்க மாட்டான்’ அப்பிடீன்னு நம்ம டீச்சர் சொன்னாங்க. அப்புறம் நான் தான் டீச்சர் கிட்டே சொல்லிட்டு, எங்க மாமா உதவியோட இப்பிடி ஒரு ட்ராமா நடத்தினேன். உண்மையிலேயே எங்க மாமா ரொம்ப சாது. ‘அவனும் ஒரு சின்னப் பையன். தானா திருந்திருவான்’னு மாமா சொன்னாரு. நான் அவருகிட்டே, ‘ அவன் திருந்தணும்னுதான் மாமா இப்பிடி செய்யறோம். நீங்க அவன் கிட்டே ஒன்னும் பேசாதீங்க. எங்கிட்டே வந்து கோவமா பேசுனாப் போதும்னு சொல்லி சம்மதிக்க வெச்சேன். இப்பொ பாரு. ஜக்கு எவ்வளவு நல்லப் பையன் ஆயிட்டான். நல்லா படிக்கிறான். நாம அவனுக்கு நல்லதுதானேடா செஞ்சிருக்கோம்’ அப்பிடீன்னான் துரை.


‘உண்மைதாண்டா’ ன்னு வீரனும் ரொம்ப சந்தோஷப்பட்டான்.


‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று அவி கேட்க ரிஷி: உடலளவில் பலம் இருக்கற ஒரு காரணத்தினாலேயே மற்றவங்களை அடக்க நினைக்கக் கூடாது. ஏன்னா ‘வல்லவனுக்கு வல்லவன் எப்போதும் இவ்வையகத்தில் உண்டு’. இன்னும் சொல்லப்போனால் பலவான்கள் மற்றவர்களுக்கு பாதுகாவலாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் அனைவரும் அவர் மீது ஆழ்ந்த அன்பு செலுத்துவர்.

 

குட்டீஸ்! ரிஷி சொன்னது சரிதானே! சரி குழந்தைகளே! இந்தக் கதை பற்றிய உங்கள் எண்ணங்களை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.



மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?


அன்புடன்


கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in