DEENADAYALAN N

Children Stories Inspirational Children

5  

DEENADAYALAN N

Children Stories Inspirational Children

ஒரு சின்னக் குழந்தையின் மனசு!

ஒரு சின்னக் குழந்தையின் மனசு!

4 mins
282


கதை என் கையில்! முடிவு குட்டிஸ் கையில்! - 2

ஒரு சின்னக் குழந்தையின் மனசு!

(கோவை என். தீனதயாளன்)


ஹை விவு, அவி, ரிஷி மற்றும் மை டியர் குட்டீஸ்! அடடே.. இன்றைக்கு விடுமுறை நாள்ங்கறதுனாலே இவ்வளவு பேர் வந்திருக்கிறீங்களே.. மிகவும் நல்லது..


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!



‘துருவனின் அம்மா சோர்ந்து போய் இருந்தாங்க. அதுக்கு காரணம் இருந்துச்சு. எப்பவுமே உற்சாகமாவும் சுறுசுறுப்பாகவும் இருக்கும் அவங்க மகன் துருவன் இந்த ஒரு வாரமா ரொம்ப ‘டல்’லா இருக்கான். முன்பெல்லாம் பள்ளிக்கு போகும் போது துள்ளிக் குதித்துப் போவான். பள்ளி முடிந்து திரும்பி வரும்போது மிகவும் மகிழ்ச்சியாக வருவான். ஆனா இப்பொ?


கோடைகால விடுமுறைக்கு அப்புறம் போன வாரம்தான் பள்ளி திறந்துச்சி. துருவன் ஒன்றாம் வகுப்பில் இருந்து இரண்டாம் வகுப்புக்கு போயிருந்தான்.


முதல் நாள் பள்ளியில் இருந்து திரும்பினப்பவே, ‘அம்மா நாளைக்கு நான் பள்ளிக்கூடத்துக்கு போக மாட்டேன்மா’ என்றான் ‘ஏன்டா செல்லம்.. ‘ என்று அம்மா கேட்ட போது ‘எனக்கு புடிக்கலேம்மா’ என்றான்.


‘சரி ஏதோ இரண்டு மாசம் கழிச்சி பள்ளிக்குப் போனதானாலே அவனுக்கு பள்ளியிலே கொஞ்சம் கஷ்டமா இருந்திருக்கும். அதனாலதான் குழந்தை அப்படி சொல்றான்’ அப்பிடீன்னு நெனச்ச அவனோட அம்மா அதை அப்போதைக்கு விட்டுட்டாங்க. ஆனா அடுத்தடுத்த நாளும் துருவன் ஏதாவது காரணம் சொல்லி பள்ளிக்கு போக மாட்டேன்னு சொன்னது அவங்க அம்மாக்கு ரொம்ப கவலையாப் போச்சி.


L K G, U K G, ஒன்றாம் வகுப்பு அப்பிடீன்னு பள்ளிக்கு போன இந்த மூனு வருஷத்துலே துருவன் இப்பிடி சொன்னதே இல்லே. இரண்டாம் வகுப்பு போயிருக்கிற இந்த நேரத்துலே மட்டும் ஏன் இவ்வளவு பிரச்சினை பண்றான்’ அப்பிடீன்னு அவங்கம்மாவுக்கு ஒரே கவலை. ‘ஒரு வேளை புது ஆசிரியைன்னு கொஞ்சம் பயப்படுறானோ?’ – அப்பிடின்னும் யோசிச்சாங்க. அடுத்த நாள் துருவனின் பள்ளிக்குப் போய் வகுப்பு ஆசிரியையிடம் விசாரிக்க முடிவு செஞ்சாங்க!



இரண்டாம் வகுப்பு ஆசிரியை, துருவனோட அம்மவை ரொம்ப அன்பா வரவேற்றாங்க. ஆசிரியைகிட்டே துருவனோட அம்மா எல்லா வியத்தையும் சொன்னாங்க. ஆசிரியையும் எல்லாத்தையும் ரொம்ப பொறுமையா கேட்டுகிட்டாங்க.


அப்புறம் ஆசிரியை சொன்னாங்க: ‘இது விஷயமா நானே உங்களை சந்திச்சு பேசணும்னுதான் இருந்தேன். குழந்தை வீட்டுலேயும் இப்பிடிதான் இருக்கானான்னு கேட்க வேணும்னு நெனச்சேன். என்னடான்னா நீங்களே ‘கரெக்ட்’டா வந்துட்டீங்க. நீங்க சொல்றது சரிதான். இங்க வகுப்புலே கூட துருவன் ‘டல்’லாதான் உட்கார்ந்திருக்கான். படிப்புலே கூட குழந்தை அவ்வளவு ஆர்வம் காட்ட மாட்டேங்கிறான். அவனோட ஒன்றாம் வகுப்பு ஆசிரியைகிட்டே நான் கேட்டுப் பார்த்தேன். ‘போன வருஷம் ஒன்றாம் வகுப்புலே ரொம்ப நல்லா படிப்பான், ஜாலியா இருப்பான்னு’னுதான் சொல்றாங்க. மைதானத்துலே விளையாட குழந்தைகளை அனுப்பும்போது கூட, இவன் தனியா ஒதுங்கி ஒட்டியும் ஒட்டாமையும்தான் இருக்கான்.


‘இப்போ என்ன செய்யலாம் டீச்சர்?’


‘நீங்க ஒன்னும் கவலைப் படாதீங்க. பிரச்சினை இரண்டாம் வகுப்புக்கு வந்ததுக்கப்புறம்தான்னு தெரியுது. நீங்க வீட்டுக்கு போங்க. இன்னும் இரண்டு மூன்று நாட்கள்லே அவனோட பிரச்சினையை கண்டு புடிச்சி சரி பண்ணிடலாம்’


வகுப்பு ஆசிரியை கொடுத்த தைரியம் துருவனின் அம்மாவுக்கு கொஞ்சம் தெம்பா இருந்துச்சி.



‘சரி! குட்டீஸ்.. இந்த இடத்துலே கதையை நிறுத்தறேன். உங்கள்லே, தொடர்ந்து இந்தக் கதையை - துருவன் ஏன் அப்பிடி இருக்காங்கறதுக்கான ஒரு காரணத்தை கண்டு பிடிச்சி சொல்லி - முடிக்கப் போறது யாரு?’  நான் கேட்டேன்.




‘நானு’ என்று முன் வந்த அவி தொடர்ந்தான்:

அதற்கடுத்து வந்த இரண்டு நாட்களும் வகுப்பு ஆசிரியை குழந்தைகளோட குழந்தைகளா மாறீட்டாங்க. அதில் துருவனையும் சேர்த்துக் கொண்டு, அவனை ஒரு சுமுகமான மன நிலைக்கு கொண்டு வந்தாங்க. அவனிடம், அவனுக்கு பிடித்தது, பிடிக்காதது, விருப்பமான விளையாட்டு, சாப்பாடு, நண்பர்கள், என்று பல விஷயங்களை கேட்டு தெரிஞ்சிகிட்டாங்க. அதிலிருந்து அவங்க ஒன்னைக் கண்டு பிடிச்சாங்க.


துருவனும், நித்தினும் அந்தப் பள்ளியிலேயே படிச்சவங்க. L K G, U K G மற்றும் ஒன்றாம் வகுப்பில் ஒன்னாவே இருப்பாங்க. ஒருத்தரை ஒருத்தர் நல்லா அனுசரிச்சுப் போவாங்க. சண்டை போட மாட்டாங்க. மதிய சாப்பாட்டை பகிர்ந்து சாப்பிடுவாங்க. விளையாட்டுகளில் ஒரே குழுவில்தான் இருப்பாங்க. வகுப்பில் பொருட்களை சேர்த்தும் பிரித்தும் செய்யுற – சின்ன குழந்தைளுக்கான சிறு சிறு பயிற்சிகளை சேர்ந்தே செய்வாங்க. இப்பிடி ஒருத்தர் கூட ஒருத்தர் அவ்வளவு அன்பா நட்பா இருந்தாங்க!


ஆனா ஒன்றாம் வகுப்பிலிருந்து இரண்டாம் வகுப்பு வந்தப்போ எல்லாம் மாறிப் போச்சு. நித்தினின் அப்பாவுக்கு பணி மாற்றம் வந்திருச்சி. அவன் கோவையிலிருந்து பொள்ளாச்சிக்குப் போயி அங்க ஒரு பள்ளியில் சேர்ந்துட்டான். துருவன் ஆர்வமா இரண்டாம் வகுப்புக்கு வந்தப்பொ, நித்தின் வராதது அவனுக்கு ஏமாற்றமாகவும் அதிர்ச்சியாகவும் இருந்துச்சு. . மூன்று வருடமா தன்னோட இருந்த நெருங்கிய நண்பன் வராததாலே ரொம்பவும் மனசு சோர்ந்து போச்சி. அதனாலதான் பள்ளிக்கு வர அவனுக்கு பிடிக்கலே. அதுக்கு முக்கிய காரணம் நித்தின் பள்ளியிலே இல்லேங்கறதுதான். 


இதையெல்லாம் புரிஞ்சிகிட்ட ஆசிரியை அதுக்கப்புறம் துருவன் தனியா இல்லாம பார்த்துகிட்டாங்க. எப்பவும் அவன் கூட ரெண்டு மூனு நண்பர்கள் இருக்கற மாதிரி பார்த்துகிட்டாங்க. மதிய சாப்பாட்டை அவங்க கூட சேர்ந்து அவனை சாப்பிட வெச்சாங்க. இந்த விவரங்களையெல்லாம் துருவனின் அம்மாகிட்டே ஆசிரியை சொன்னாங்க. அதைக் கேட்டதும் துருவனின் அம்மாவுக்கும் எல்லாம் புரிஞ்சுது. அதுக்கப்புறம் துருவனிடம் அவன் யார் கூட சாப்பிட்டான், யார் கூட விளையாண்டான், அப்பிடீன்னு தினமும் கேப்பாங்க. அப்பப்போ சாக்லேட் மாதிரி சில தின்பண்டங்களைக் கொடுத்து நண்பர்களோட அதை பகிர்ந்து சாப்பிட சொல்லி அனுப்புவாங்க. போகப் போக துருவனே அவன் அம்மாவிடம் தன்னோட புது நண்பர்கள் பத்தி நிறைய பேச ஆரம்பிச்சுட்டான். அப்பிடியே கொஞ்சம் கொஞ்சமா துருவன் எதார்த்த நிலைக்கு திரும்பி, பழைய மாதிரியே பள்ளியிலேயும் வீட்டிலேயும் உற்சாகமாவும், சுறுசுறுப்பாகவும் இருக்க ஆரம்பிச்சுட்டான்.



‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று விவு கேட்க, ரிஷி சொன்னான்: ‘சில சமயம் நமக்கு ரொம்ப புடிச்ச உணவு சாப்பிட முடியாம போகலாம். இல்லன்னா நாம் ரொம்ப விரும்புற பொருள் நமக்கு கிடைக்காமல் போகலாம். அதே மாதிரி நம்ம நண்பர்களும் பல காரணங்களுக்காக நம்மளெ விட்டு பிரிஞ்சி போகலாம். ஆனா அதுக்கெல்லாம் கவலைப்பட்டுகிட்டு உட்கார்ந்திருக்காமெ, எப்பவும் போல நம்ம வேலைகளை தொடர்ந்து செஞ்சிகிட்டே உற்சாகமாவும் சந்தோஷமாவும் இருக்கணும்.


அப்போ நான் கொஞ்சம் உள்ளே நுழைய வேண்டி வந்துச்சி: ‘வெரி குட் ரிஷி.. சூப்பரா சொன்னே.. இந்தக் கதையிலே இன்னொரு நீதியும் இருக்கு. ஒரு குழந்தையோட வழக்கமான செயல்பாடுகள்ளே திடீர்னு ஏதாவது மாற்றம் தெரிஞ்சா அந்த குழந்தைக்கு அதை சொல்லத் தெரியாம இருக்கலாம். அந்த நேரங்கள்லே, அவங்க கூட சேர்ந்து இருந்து, ஆதரவா பேசி, பழகி அது என்னன்னு கண்டு பிடிச்சி அந்தக் குழந்தையை எளிதா நார்மல் நிலைக்கு கொண்டு வர வேண்டியது பெரியவங்களோட கடமை’ 


 

குட்டீஸ்! உங்களில் யாராவது உங்கள் கற்பனைக் குதிரையைத்தட்டி விட்டு, இந்தக் கதைக்கு வேறு விதமான முடிவு ஏதாவது தோன்றினால், அதை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.



மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?


அன்புடன்


கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in