நதிகள் பலவாகினும்
நதிகள் பலவாகினும்
ஹை விவு, அவி, ரிஷி, அடடே இன்னைக்கு நிறைய குழந்தைகள் வந்திருக்கீங்களே, வாங்க மை டியர் குட்டீஸ்!
கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?
‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!
எக்சன், ஒய்யன், இசட்டன் மூவரும் நெருங்கிய நண்பர்கள். ஒரே வகுப்பில் படிப்பவர்கள். எங்கு சென்றாலும் ஒன்றாய் செல்வார்கள். மதியம் ஒன்றாய் சாப்பிடுவார்கள். ஒன்றாய் விளையாடுவார்கள்.
இதில் ஒரு மாணவனுக்கு மட்டும் ஒரு சந்தேகம். யோசித்துக் கொண்டே வீட்டிற்கு வந்தான். பள்ளிப் பையை மேசை மேல் வைத்து விட்டு உட்கார்ந்து கொண்டான்.
அவனுடைய அம்மாவுக்கு ஆச்சரியம். எப்போதும் வந்தவுடன் அவனுக்கு சிற்றுண்டி கொடுத்து விட வேண்டும். இல்லை என்றால் பசி பசி என்று ஆர்ப்பாட்டம் பண்ணி விடுவான்.
‘என்ன.. சார் இன்னிக்கு ஒரே யோசனையாக இருக்குறீங்க?’ என்று அன்பு கலந்த கிண்டலுடன் கேட்டாள் அம்மா
‘ஒன்னுமில்லேம்மா.. ஒரு சந்தேகம்..’ என்றான்
‘முதலில் வந்து சாப்பிட்டு விட்டு பேசு’ என்று அழைத்தாள் அம்மா.
சாப்பிட்டுக் கொண்டே மீண்டும் அம்மாவைப் பார்த்து, ‘ஏம்மா.. என்னோட நெருங்கிய நண்பர்கள் பற்றி உனக்கு தெரியும்ல..’
‘ஆமா.. தெரியும்.. அதுக்கென்ன… ஏதாவது சண்டைப் போட்டுகிட்டிங்களா?’
‘இல்லம்மா.. நாங்க எல்லாருமே சாமி கும்பிடுறோம்..’
‘ஆமா.. கும்புடுறீங்க.. மனிதர்கள்னா பெரும்பாலும் சாமி கும்பிடத்தான் செய்வாங்க..’
‘அதுக்கில்லம்மா.. ஜனங்க சாமி கும்பிட எங்கே எங்கே போவாங்க?
‘சில பேர் கோயிலுக்கு போவாங்க.. சிலர் சர்ச்சுக்குப் போவாங்க.. சிலர் மாஸ்க்குக்கு போவாங்க.. இன்னும் சில பேரு குருத்வாரா போவாங்க.. இன்னும் கொஞ்சம் பேர் புத்தர் கோயிலுக்குப் போவாங்க.. ஆமா எதுக்கு இப்பொ இந்த கேள்வி?’ – அம்மா கேட்டாள்
‘ஏம்மா இப்பிடி வேற வேற எடத்துக்கு போறாங்க? ஒரே இடத்துலே போயி கும்பிடலாமில்லே..’
‘நம்ம நாடு பெரிய நாடு.. நம்ம நாட்டில் நிறைய ஜனத்தொகை இருக்கு. அவங்கவங்க வழக்கமா எங்க கும்பிடுறாங்களோ அங்க போயி கும்புடுறாங்க”
‘எல்லா எடத்துலையும் சாமிதானே இருக்காரு..?’
‘ஆமா.. கண்டிப்பா..’
‘எல்லா கடவுளும் ஒன்னுதான்னு நீ சொல்லுவியே..’
‘ஆமா.. அதிலென்ன உனக்கு சந்தேகம்..?’
‘எல்லாக் கடவுளும் ஒன்னுன்னா எதுக்கு ஒவ்வொருத்தரு ஒவ்வொரு எடத்துக்குப் போயி சாமி கும்பிடணும்?’
‘போச்சுடா சாமி… ஆமா.. இப்பொ எதுக்கு இந்தக் கேள்வி’ அம்மா சிரித்துக் கொண்டே கேட்டாள்.
‘சொல்லும்மா.. ரொம்ப நாளா உன்னெ கேக்கணும்னு இருந்தேன்..’
‘சரி.. இப்போ உன்னை நான் கேட்கிற கேள்விக்கு பதில் சொல்றியா..’
‘ம்..’
‘பொழுது போக்கறதுக்கு உனக்கு எங்கே போக பிடிக்கும்..?’
‘ம்.. பார்க்குக்கு.,’
‘உன் தங்கச்சிக்கு எங்கே போக பிடிக்கும்..?’
‘சினிமாவுக்கு..’
‘உன் நண்பர்களுக்கு…?’
‘ஒருத்தனுக்கு சர்க்கஸ் பிடிக்கும்.. ஒருத்தனுக்கு நாடகம் பாக்கறது பிடிக்கும்..’
‘இப்பிடி ஒவ்வொருத்தரு ஒவ்வொரு இடத்துக்கு போனாலும், நோக்கம் என்னவோ பொழுது போக்கறது தானே..’ – அம்மா கேட்டாள்.
‘ஆ..மா..’
‘அது போலதான்.. சாமி கும்பிட ஒவ்வொருத்தரு ஒவ்வொரு இடத்துக்கு போனாலும் நோக்கம் என்னவோ பிரார்த்தனைதான்..’
‘ஓ.. சரிதாம்மா.. ஆனா ஒவ்வொருத்தரு ஒவ்வொரு மாதிரி பிரார்த்தனை பண்றாங்களே…!’
‘ஓ.. இது உன் அடுத்த கேள்வியா.. சரி! இப்பொ டெல்லிக்கு சுற்றுலா போறோம்னு வெச்சிக்க. எப்பிடி போகலாம்?’
‘ரயில்லே போகலாம்..’
‘அப்புறம்..’
‘ஏரோப்ளேன்லே போகலாம்.. ஏன்.. பேருந்துலே போகலாம்.. காருலே போகலாம்.. இன்னும் கடல் வழியா கூட போகலாந்தான்..‘
‘சரியா சொன்னே.. தரை, கடல், ஆகாயம்னு எந்த மார்க்கத்துலே போனாலும் டெல்லிக்கு போய்ச் சேருவதுதானே நம்ம நோக்கம்.. ‘
‘ஆமா...’
‘அது மாதிரிதான்.. பெரிய ஜனத்தொகை உள்ள நம்ம நாட்லே எத்தனையோ மார்க்கத்தை கடைப்பிடிக்கிறவங்க இருக்காங்க.. வேற வேற பிரார்த்தனை முறைகளை கடைப் பிடிக்கிறாங்க.. ஆனா எல்லா மார்க்கமும் மனித நேயத்தையும், அமைதியையும், அஹிம்சையையும், நிம்மதியையும்தான் போதிக்குது. எல்லா மார்க்கத்தின் நோக்கமும் கடவுளை அடையறதுதான்.’
‘எல்லாம் சரிம்மா.. வழி வழியா கும்பிடறதாலே வேற வேற எடத்துலே போயி கும்பிடட்டும்.. கால காலமா கடைப்பிடிச்ச வேற வேற முறைகளை கடைப்பிடிச்சு பிரார்த்தனை செய்யட்டும்.. எல்லா எடத்துலேயும் ஒரே சாமிய கும்புடக் கூடாதா?’
சரி! குட்டீஸ்.. இந்த கேள்விக்கு அவன் ஏற்றுக் கொள்ளும்படி திருப்தியான பதிலைச் சொல்லி இப்பொ யாரு இந்த கதையை முடிக்கப் போறீங்க?
‘நான் சொல்றேன்..’ அப்பிடீன்னு, அழகான பெண் குழந்தை பாரதம் முன் வந்தாள். சொல்லத் தொடங்கினாள்:
‘உங்கள்ளே யாருக்கு இனிப்பு பிடிக்கும்.. கை தூக்குங்க..’ – மற்ற குழந்தைகளை நோக்கிக் கேட்டாள்.
‘எனக்கு.. எனக்கு..’ என்று ஒரு குழந்தைக் கூட தவறாமல், எல்லாக் குழந்தைகளும் கையைத் தூக்கின.
உடனே, அந்த அறையில், கதை கேட்க வரும் குழந்தைகளுக்கு தேநீர் தயாரிக்க வைத்திருந்த சர்க்கரையை எடுத்து எல்லோர் கையிலும் கொடுக்கப் போனாள் பாரதம்.
‘ஊஹும்.. எனக்கு மோத்தி லட்டுதான் வேண்டும்’ – என்றது ஒரு குழந்தை
‘எனக்கு மைசூர்பா..’
‘எனக்கு காஜுகத்லி’
‘எனக்கு பாசந்திதான் வேணும்’
‘எனக்கு பாதாம் அல்வா’
இப்படி ஒவ்வொரு குழந்தையும் ஒவ்வொன்று கேட்கத் தொடங்கியது.
’எல்லா இனிப்புகளையும் செய்றதுக்கு இந்த சர்க்கரைதானே அடிப்படை.. இதையே வாங்கிக் கொள்ள வேண்டியதுதானே.. ஏன் வாங்கிக் கொள்ள மாட்டேன் என்கிறீர்கள்’ என்று கேட்டாள் பாரதம்.
‘அடிப்படை ஒன்னுன்னாலும் அதைப் பலவிதமா செஞ்சி சாப்ட்டு பழகிட்டோம். இப்பொ ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்னு பிடிக்குதே’
‘கரெக்ட்.. அடிப்படையில் எல்லா இடத்திலும் இருக்கும் ஆண்டவன் ஒன்னுதான்.. அவரவர் அவரவருக்கு பிடித்த பெயரில் அழைத்து பிரார்த்தனை செய்தாலும், ஆண்டவன் ஒருவன் தானே!’
‘ஆமா.. ஆமா’ என்றார்கள் அனைத்து குழந்தைளும்.
‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று ஒரு குழந்தைக் கேட்க:
‘நூற்று மூப்பத்து ஐந்து கோடிக்கும் மேல் ஜனத்தொகை உள்ள நம் நாட்டில், பல்வேறு பழக்க வழக்கங்களை தொன்று தொட்டு கடைப் பிடித்து வரும் நம் மக்களின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதே பெரிய பலம்! மிகச்சிறிய ஜனத்தொகை உள்ள சில நாடுகளெல்லாம் பெரிய பெரிய பிரச்சினைகளோடு அமைதி இன்றி தவிக்கும் போது இவ்வளவு பெரிய ஜனத்தொகை உள்ள நம் இந்தியாவில் இவ்வளவு அமைதியாக வாழ்வது நாம் பெற்ற பேறு. குறைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவைகளைக் களைய நம் முயற்சிகளை தொடர்ந்து செய்வோம் – அயராது பாடு படுவோம் - அமைதியான அறம் சார்ந்த வழியில்!’ என மற்றொரு சற்றே பெரிய குழந்தை கூற எல்லா குழந்தைகளும் மனமாற ஏற்றுக் கொண்டார்கள்.
குட்டீஸ்! உங்களில் யாராவது உங்கள் கற்பனைக் குதிரையைத் தட்டி விட்டு, நம் நாட்டின் அதிசயத் தக்க பல்வேறு சிறப்பு அம்சங்களை பதிவிட்டு, அதை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.
மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?
