DEENADAYALAN N

Children Stories Inspirational Children

5  

DEENADAYALAN N

Children Stories Inspirational Children

ஆளுக்கொரு திறமை ஆண்டவன் பரிசு!

ஆளுக்கொரு திறமை ஆண்டவன் பரிசு!

5 mins
298



                        

 

ஹை விவு, அவி, ரிஷி, வினி, க்ருஷ், உமாபதி, ஃபெரோ, மற்றும் மை டியர் குட்டீஸ்!


கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?


‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!


இந்த முறை ஒன்பதாவது ரேங்க்தான் வாங்கி இருந்தான் இனியன். அவனுக்கு ரொம்ப வருத்தமா இருந்துது. எவ்வளவு முயற்சி செஞ்சி படிச்சாலும் இது வரை அவன் ஆறாவது ரேங்க்குக்கு மேலே (அதாவது ஒன்னுல இருந்து அஞ்சு ரேங்க்குள்ளே) போக முடியலே. அவனுக்கு சாமி மேல கோபம் வந்துது.


அன்று மாலை பள்ளியில் இருந்து திரும்பும் போது, தான் வழக்கமா சாமி கும்பிடுற ‘மூனுமுக்கு அரசமரத்தடி பிள்ளையார்’கிட்டே இனியன் வந்தான். ‘ஏன் சாமி தினமும் நான் சாமி கும்பிடறந்தானே? நல்லா படிக்கணும்னு வேண்டிக்கறந்தானே? பள்ளிக்கு வரும்போது உன்னை மூனு தடவை சுத்தறேன்; ஐந்து தோப்புக் கரணம் போடறேன்; என் தலைலே ஏழு கொட்டு கொட்டிக்கிறேன். ‘அடுத்த தடவை நான் அஞ்சாவது ரேங்க்குள்ளே வந்தேன்னா உனக்கு ஐந்து தேங்காய் உடைக்கிறேன்’னு எங்கம்மா கூட உங்கிட்டே வேண்டிகிட்டிருக்காங்களே. அப்பிடி இருந்தும் எனக்கு ஒன்பதாவது ரேங்க் தானே வாங்கி குடுத்திருக்கே. பத்து தேங்கா கூட எங்கம்மாவை உடைக்க சொல்றேன் விநாயகா. ஆனா என் வேண்டுதலை நீ ஏன் நிறைவேத்தலை அதை சொல்லு?’ என்று பிள்ளையாரையே பார்த்துக் கொண்டிருந்தான்.


உலகின் சகல ஜீவ ராசிகளுக்கும் நம்பிக்கை கொடுக்கிற பிள்ளையார், தும்பிக்கையை வளைத்து, கண்களில் வழக்கமான தன் புன்னகையுடன் இனியனைப் பார்த்தார். அதற்குள் கோயிலில் கூட்டம் சற்று அதிகமாகவே, இனியன் பிள்ளையாரை பார்த்துக் கொண்டே வீட்டிற்கு கிளம்பினான்.



டுத்த நாளும் மாலை பள்ளி விட்ட உடனே இனியன் பிள்ளையாரைப் பார்க்க வந்தான். ‘எப்பொ பார்த்தாலும் ரஷீத் இல்லேன்னா குமார் இல்லேன்னா ஆன்டனி இல்லேன்ன ரன்பீர் இல்லேன்னா ராகுல் இவங்கதான் முதல் அஞ்சு ரேங்க்குள்ளே வாங்கிடறாங்க. அவங்கள மாதிரியேதான் நானும் படிக்கிறேன். நானும் விளையாடுறேன். நானும் சாமி கும்பிடுறேன். ஏன் எனக்கு மட்டும் நீ ரேங்க் வாங்கி தர மாட்டேங்கிற?’ இனியன் தொடர்ந்து கேள்வி கேட்டுகிட்டே இருந்தான்.


இப்போது இனியனும் பிள்ளையாரும் மட்டுமே அங்கே இருந்தனர். விநாயகப்பெருமான், இந்த மாதிரி வேண்டுதல்களையும் அதை நிறைவேத்தறதுலே இருக்கற தாத்பரியத்தையும் இனியனுக்கு எப்படி புரிய வைக்கிறதுன்னு யோசிச்சார்.


பிறகு ஒரு முடிவு செஞ்சிகிட்டு, ‘இனியா..’ ன்னு கூப்பிட்டார் பிள்ளையார்.


இனியனுக்கு குரல் கேட்டு ஆச்சரியம்! அக்கம்பக்கம் யாருமே இல்லே. அப்பிடீன்னா பிள்ளையார்தான் கூப்பிட்டு இருக்கணும். ‘சொல்லுங்க விநாயகா?’ என்றான்.


‘இப்போ உனக்கு என்னதான் குறை? சொல்லு..’ ன்னு பிள்ளையார் கேட்டார்.


‘என்னாலே ஏன் ஐந்து ரேங்க்குள்ளே வர முடியலே?’ ன்னு நேரா தன் குறையை கேள்வியாக்கிக் கேட்டான் இனியன்.


‘இனியா.. குறை என்பது எல்லாருக்கும்தான் இருக்கும். எல்லாக் குறைகளையும் ஒருத்தருக்கேவோ அல்லது எல்லா நிறைகளையும் ஒருத்தருக்கேவோ நான் கொடுக்க முடியாது. குறை நிறை இரண்டும் கலந்துதான் கொடுக்க முடியும். எனவே யோசிச்சு சொல்.. இதுதான் உன் குறையா?’


இனியன் மௌனமாக யோசித்தான்.


‘இனியா.. நல்லா யோசிச்சுக்கோ.. ஐந்து ரேங்க்குள்ளே வந்துட்டா அதுக்கப்புறம் உனக்கு எந்தக் குறையும் இருக்காதா?’ – என்று கேட்டார் விநாயகர்.


‘அதோடு என் எல்லா குறையும் தீர்ந்திடுமா? வேறு குறையே எனக்கு இருக்காதா?’ என்று இனியன் தனக்குத் தானே யோசிச்சான்.


‘சரி இனியா.. ஒன்னு செய்யலாம். அடுத்த மாசம் நாம் சந்திக்கலாம். அதற்குள்ளே என்னென்ன நடக்குதுன்னு பார்ப்போம். மறுபடியும் உன் குறையைப் பற்றி ஆராய்வோம். அப்பவும் உனக்கு இந்த குறை இருந்தா மேற்கொண்டு என்ன செய்யலாமின்னு யோசிக்கலாம். இப்போ நீ வீட்டுக்கு கிளம்பு’ என்று இனியனை அனுப்பி வெச்சார் பிள்ளையார்.


இனியனும் யோசிச்சிகிட்டே, பிள்ளையாரைக் கும்பிட்டுவிட்டு, அவரை திரும்பித் திரும்பி பார்த்துகிட்டே வீட்டை நோக்கி நடந்தான்.




‘சரி! குட்டீஸ்.. இந்த இடத்துலே கதையை நிறுத்தறேன். இனியனுக்கு ஒரு குறை. தான் ஐந்து ரேங்க்குகளுக்குள் வர முடியலயேன்னு. ஞாயமான குறைதானே. பிள்ளையார் நினைச்சா எளிதில் அவனுக்கு அதை கிடைக்கச் செஞ்சிரலாம். ஆனால் எதனாலோ, சாமி அதைச் செய்யலே. இனியனை அடுத்த மாதம் தன்னை மறுபடியும் வந்து சந்திக்க சொல்லி அனுப்பிட்டாரு. அது மட்டும் அல்ல. “அதற்குள்ளே என்னென்ன நடக்குதுன்னு பார்ப்போம்’னு மறைமுகமா வேற பிள்ளையார் ஏதோ சொல்லியிருக்காரு. அப்படி ஒரு மாசத்துக்குள்ளே என்னதான் நடக்கும்? இனியனுக்கு இருக்குற அந்தக் குறை அப்பொ என்ன நிலைலே இருக்கும்?’ன்னு யோசிச்சு, உங்களில் யாராவது மேலும் தொடர்ந்து சொல்லி இந்தக் கதையை முடீங்க பாக்கலாம்!’ என்றேன்.


‘நான் சொல்றேன்’னு முன் வந்த அவி தொடர்ந்தான்:

‘பள்ளி வழக்கம் போல் நடந்துகிட்டிருந்துச்சி. இரண்டு நாட்கள் போயிருச்சி. மூனாம் நாள் பள்ளியின் அறிவிப்புப் பலகைலே ஒரு அறிவிப்பு வந்தது. அதில்:


‘இரண்டு வாரம் கழிச்சி மாவட்ட அளவில் ஒரு ஓவியப்போட்டி நடக்கிறது. அதுலே கலந்துக்க நம்ம பள்ளியிலே இருந்து மூனு பேரை தேர்வு செஞ்சி அனுப்ப வேணும். அதுக்காக நம்ம பள்ளியிலே நாளைக்கு ஓவியப் போட்டி நடக்கப் போகுது. விருப்பமும் தகுதியும் திறமையும் இருக்கற பசங்க கலந்துக்கலாம்’னு அறிவிச்சாங்க.


இனியனுக்கு ஒரே சந்தோஷம். அவனுக்கு ஓவியம் வரையறதுன்னா ரொம்ப பிடிக்கும். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் எதையாவது கிறுக்கிகிட்டே இருப்பான். அவன் அப்பா கூட அவனை ‘வருங்கால மைக்கலாஞ்சலோ’னு பாராட்டுவாரு. அதனாலே முதலில் ஓடிப்போய் பெயர் கொடுத்து விட்டு வந்தான்.




அடுத்த நாள் போட்டியிலே நூற்று முப்பது பசங்க கலந்துகிட்டாங்க. ‘வானம்’னு ஒரு தலைப்பு கொடுத்திருந்தாங்க. அதுலே இனியனும் போய் ஆர்வமா கலந்துகிட்டான். அவங்க பள்ளியின் ஓவிய ஆசிரியரும் வெளியில் இருந்து வந்திருந்த இரண்டு ஓவிய ஆசிரியர்களும் சேர்ந்து ஒவ்வொரு ஓவியத்தையும் ஆராய்ஞ்சி பார்த்து தேர்வு செஞ்சாங்க. அதுலே இனியனுக்கு மூனாவது இடம் கிடைச்சிது. அடுத்து, மாவட்ட அளவுலே நடக்க இருக்கிற இந்த ஓவியப் போட்டிலே இந்த மூனு பேரும் கலந்துக்குவாங்கன்னு அறிவிச்சாங்க. மூனு பேரையும் எல்லா மாணவர்களும் எல்லா ஆசிரியர்களும் பாராட்டுனாங்க. வாழ்த்து சொன்னாங்க.




ஒரு திங்கட்கிழமை மாவட்ட ‘டவுன்ஹாலில்’ இருந்த ஒரு கூடத்தில் மாவட்ட அளவிலான ஓவியப்போட்டி நடந்தது. அதில் ‘நெருப்பு’ அப்பிடீன்னு தலைப்பு கொடுத்தாங்க. முன்னூறு பேர் கலந்துகிட்டாங்க. இனியனும் தன்னோடு தேர்வான தன் பள்ளி நண்பர்களோட சேர்ந்து கலந்துகிட்டான்.


“நல்ல செந்தழல் நிறத்துலே பின்புலத்துலே பெரிய அளவுலே தீப்பிடிச்சி எரிஞ்சிகிட்டிருந்தது. அங்க இருந்து நூத்துக் கணக்கான பேரு ஓடி வர்றது முன்புலத்துலே தெரியுது. எல்லாரும் பெரிய பெரிய பெட்டிகளையும், குழந்தைகளையும், விலை மதிப்புள்ள சாமான்களையும் தூக்கிகிட்டு ஓடி வர்றாங்க. ஆனா ஒரே ஒரு சின்ன பொண்ணு மட்டும் தன்னோட சின்னஞ்சிறு கைகள்ளே ஒரு சிறு கோழிக் குஞ்சை வெச்சி எடுத்துகிட்டு ஓடி வந்துகிட்டிக்கு” – இதுதான் இனியன் வரைஞ்ச ஓவியம்.


போட்டி முடிவுகள் மூனாவது நாள் இனியனின் பள்ளிக்கு வந்துச்சி. அதோட, இனியன் வரைந்த ஓவியத்தின் பல்வண்ண ஊடுகதிர் நகலையும் அனுப்பி வெச்சிருந்தாங்க. அதுலே இனியன் முதல் பரிசு வாங்கி இருந்தான். பள்ளியே அவனைப் பாராட்டுச்சி. அதில் நல்ல ரேங்க் வாங்குகிற மாணவர்களும் வந்து வாழ்த்தினாங்க. பிரார்த்தனைக் கூடத்தில் தலைமை ஆசிரியர் இனியனின் வெற்றியை அறிவித்தார். இனியனின் ஓவியத்தை அறிவுப்புப் பலகையிலும் காட்சிப் படுத்தினார். அதோடு அடுத்து மாநில அளவில் நடக்க இருக்கும் ஓவியப் போட்டியில் இனியன் பங்கு பெறப்போவதையும் அறிவித்தார். வெற்றி பெற வாழ்த்தினார்.


இதெல்லாம் ஒரு கனவைப் போல நடந்து முடிந்திருந்தது. இனியன் மகிழ்ச்சியின் உச்சத்துலே இருந்தான். அன்றைக்கு மாலை நேராக விநாயகப் பெருமானை போய்ப் பார்த்து வணங்கினான். கோயிலில் கூட்டம் காலியான உடனே விநாயகப் பெருமான் இனியன் முன் தோன்றினார்.


‘என்ன.. இனியா.. சந்தோஷமா இருக்கிறே?’


இனியன் அந்த ஒரு மாசத்துலே நடந்த எல்லாத்தையும் விநாயகப் பெருமான்கிட்டே எடுத்து சொன்னான். அத்தனையையும் நடத்தியதே அவர்தானே. அவருக்கு தெரியாதா!


‘ஆம் இனியா.. எல்லாம் தெரிஞ்சிகிட்டேன். ஆனா ஒரு விஷயம் தெரியுமா?’


இனியன் விநாயகரைப் பார்த்தான்.


‘நீ கலந்துகிட்ட இதே ஓவியப் போட்டியிலே, வேற மூனு பேரும் கலந்துகிட்டாங்க. அந்த மூனு பேரும் தனித் தனியா எங்கிட்டே வந்திருந்தாங்க.. தங்களுக்குதான் இந்த வெற்றியை கிடைக்கச் செய்ய வேணுமின்னு மூனு பேரும் ரொம்ப வேண்டிகிட்டாங்க. பத்து, இருபது, ஐம்பது என தேங்காயை உடைக்கப் போவதாயும் மூனு பேரும் தனித்தனியா வேண்டிகிட்டாங்க.’


‘அப்படியா…!’


‘ஆமா.. ஆனா நடந்தது என்ன? இந்தப் போட்டியிலே உனக்குதான் வெற்றி கிடைச்சிது! இப்பொ சொல்லு! நான் நெனச்சிருந்தா அவங்கள்லே யாராவது ஒருத்தரை வெற்றி அடையச் செய்திருக்கலாம். ஆனா நான் அப்படி செய்யலை. ஏன்?’


இனியன் ‘ஏன்?’ என்பதைப் போல் விநாயகரைப் பார்த்தான். 


‘ஏன்னா இந்த உலகத்துலே பிறக்கும் ஒவ்வொருத்தரையும், கடவுள் நிச்சயம் ஏதோ ஒரு திறமையோடுதான் பிறக்க வைக்கிறார். அவங்கங்க திறமை அந்தந்த நேரத்துலே வெளிப்பட்டு, வெற்றியா மாறும். நல்ல பெயர் எடுத்து பிரகாசிப்பாங்க.’


மேலும் தொடர்ந்தார் விநாயகப் பெருமான்: ‘உதாரணமா, உன்னையவே எடுத்துக்கோயேன். ஒரு குறிப்பிட்ட ரேங்க்குக்குள் வரணுமின்னு நீ ஆசைப் பட்டே. ஆனா அதுக்கும் மேலே, உன்னுடைய திறமை ஓவியத்தில் இருந்துச்சி. அதைக் கண்டு பிடிச்சி, நல்ல முயற்சி எடுத்து, போட்டிலே கலந்துகிட்டதாலே, நீ ஓவியப் போட்டியில் வெற்றி அடைஞ்சே. அதைப் போலவே ஓவியப் போட்டியில் வெற்றி பெறணுமின்னு என்னை வேண்டிய மற்ற மூன்று பேருமே இசை, வணிகம் அப்பிடீன்னு வேற வேற துறைகள்லே திறமை அமையப் பெற்றிருக்காங்க. தக்க சமயம் வரும்போது, அதில் அவங்க கலந்துகிட்டாங்கன்னா, அதுலே அவங்க நிச்சயமா வெற்றி பெறுவாங்க.’


‘அப்பிடிப் பார்த்தா.. எனக்கு ஒரு கேள்வி தோணுது விநாயகப் பெருமானே’


‘கேள்வியா.. கேளு!’


‘இந்த உலகத்துலே பிறக்கும் ஒவ்வொருத்தருக்கும் சாமி நிச்சயமா ஒரு திறமையை கொடுக்கும்’னு நீங்க சொன்னீங்க’


‘ஆமா’


‘எப்படி இருந்தாலும் தனக்குன்னு சாமி ஒரு திறமையை கொடுக்கும். அதை வெச்சி நாம் வாழ்க்கையில் வெற்றி பெற்று விடலாம்’

அப்பிடீன்னு நினைச்சு சில பேர் சாமிகிட்டே பிரார்த்தனை கூட செய்ய மாட்டாங்களே?”


விநாயகர் புன்னகைத்தார். ‘சரியா கேட்டே இனியா.. ஒவ்வொருத்தருக்கும் ஒரு திறமையை சாமி கொடுத்திருப்பது உண்மை! ஆனால் அந்தத் திறமையைக் கண்டுபிடிப்பதும், அதை அடைவதற்கான முயற்சியை முனைந்து எடுக்க வேண்டியதும், நேர் வழியில் சென்று அதை அடைவதும், மனிதராய்ப் பிறந்த ஒவ்வொருவரின் கடமையும் கூட. இதில் பிரார்த்தனை என்பது, மனிதர்களின் முயற்சிகளை ஒருமுகப்படுத்தி, அவர்களின் நேர்மையை கணக்கில் கொண்டு, வெற்றியை நோக்கிய பயணத்தை விரைவு படுத்த உதவுமே அன்றி, வெறும் பிரார்த்தனை மட்டுமே வெற்றிக்கு உதவாது. பிரார்த்தனையே இல்லாத நேர்மையான உண்மையான முயற்சி வெற்றி பெறலாம். ஆனால் நேர்மையான உண்மையான முயற்சி இல்லாத வெறும் பிரார்த்தனை நிச்சயம் வெற்றி தராது.


இனியன் விநாயகரை வணங்கி சொன்னான்: பெருமானே! சிறியவனாகிய எனக்கே நீங்கள் சொல்வதின் பொருள் நன்றாக விளங்குகிறது. பெரியவர்களுக்கு இன்னும் ஆழமாவே புரியும்.


விநாயகரை பத்து முறை வலம் வந்து, பத்து தோப்புக் கரணம் போட்டு, பத்து முறை தலையில் குட்டிக் கொண்டு, பள்ளிப் பையைத் தூக்கிக் கொண்டு, தன் வீட்டை நோக்கி நடந்தான் இனியன்.

 


‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று ஃபெரோ கேட்க விவு: ‘ஒவ்வொரு மனிதருக்கும் ஒரு திறமையை இறைவன் கொடுத்திருக்கிறான். அந்த திறமையை கண்டு பிடித்து, வாழ்க்கையில் நிலையான ஒரு வெற்றியை அடைவதற்கான உண்மையான, நேர்மையான, முயற்சியை அந்த மனிதர்தான் எடுக்க வேண்டும். பிரார்த்தனை என்பது மனிதனின் உண்மையான, நேர்மையான, முயற்சிக்கு உறுதுணையாய் இருக்குமே தவிர, பிரார்த்தனை மட்டுமே வெற்றியைத் தந்து விடாது.’


 

குட்டீஸ்! விவு சொன்னது சரிதானே! சரி குழந்தைகளே! இந்தக் கதை பற்றிய உங்கள் எண்ணங்களை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.



மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?


அன்புடன்


கோவை என். தீனதயாளன்


Rate this content
Log in