காத்திருந்தேன்....!
காத்திருந்தேன்....!
பிள்ளையை எதிர்பார்த்து இருக்க ஐந்தாவதாய்
நான் பெண்ணாய் பிறந்து விட்டேன் என பாராமுகம் காட்டும்
தந்தையின் அன்பை பெற காத்திருந்தேன்...
என்னால் ஊடல் ஏற்பட்டு கணவன் மனைவியிடையே
சண்டைகள் வர கோபமாகவே என்னிடம் பேசும் தாயிடம் இருந்து
ஒரு சின்ன அரவணைப்பு கிடைக்குமா என காத்திருந்தேன்....
எனக்கு அடுத்து பிறந்தும் ஆண் என்பதால்
என்னை மதிக்காது சுற்றும் தம்பியிடம்
என்றேனும் அக்கா என்ற அழைப்பு வராதா என காத்திருந்தேன்...
நன்கு படித்தும் வசதி இல்லை என்பதால்
படிக்காமல் விட்ட படிப்பை என்று தொடர்வேன் என காத்திருந்தேன்...
நான்கு அக்காவும் தம்பியும் திருமணம் ஆகி சென்று விட
இன்னும் முதிர்கன்னியாய் பிறந்த வீட்டில் இருக்கும் நான்
என்று மாமியார் வீடு செல்வது என காத்திருந்தேன்...
சின்ன சின்ன ஆசைகள் கூட நிராகரிக்கப்பட்டு
நிறைவேற்றிக் கொள்ள முடியாமல் போய்
எத்தனையோ விஷயங்களுக்கு காத்திருந்து காத்திருந்து
இப்போதும் காத்துக் கொண்டே இருப்பது பழக்கமாய்
இருந்ததால் வழக்கமாகி விட்டது...!!
ஆனால் முன்பு போல் இப்போது எதிர்பார்ப்பு இல்லை
அதனாலேயே ஏமாற்றமும் இல்லாமல்
மனம் வருத்தப்படுவதில் இருந்து கொஞ்சம் ஓய்வு பெற்றுள்ளது...!!!
