வாழ்க்கை...!
வாழ்க்கை...!


"இவ்வளவு நாள் நாம் காதலிச்சதுக்கு என்ன அர்த்தம் உஷா? இப்ப வந்து திடீர்னு இன்னொருவனை நீ கல்யாணம் பண்ணிக்கப் போறேன்னு சொல்றே!"
OMR இல் உள்ள அந்தக் கஃபே காஃபிடேயின் ஜன்னலோர இருக்கையில் எதிரெதிரே அமர்ந்திருந்தார்கள் உஷாவும் சுபாஷூம். வெளியே மேமாதச் சென்னையின் கதிரவ உஷ்ணம். உள்ளே அது தெரியாமலிருக்க ஏ.சியின் உபயத்தினால் வீசப்பட்ட செயற்கைக் குளிர்த் தென்றல்!
எவ்வளவு குளிரான காற்று உடல் மீது வீசினாலும் சுபாஷின் மனதினுள் இருக்கும் வெப்பத்தைத் தணிக்க இயலுமா எனத் தெரியவில்லை. பரிதாபமாக உஷாவை எதிர் நோக்கியிருந்தான்.
"பிராக்டிகலா யோசி சுபாஷ். நீயும் நானும் இப்போ ஃபைனல் இயர் தான் படிக்கிறோம். படிச்சு முடிச்சு, வேலை கிடைத்து, ஓரளவுக்கு சம்பாதிச்ச பிறகு தானே நாம் திருமணம் செய்து கொள்ள முடியும்? எனக்கு இப்பப் பார்த்திருக்கிற வரன் மாதம் ஐம்பதாயிரம் வாங்கறான். சொந்தமா வீடு இருக்கு. எனக்கு ஒரு நல்ல வாழ்க்கை அமையறதில உனக்கு விருப்பமில்லையா?"
"அப்ப நாம் இவ்வளவு நாள் காதலிச்சது?"
"அதையே திரும்பத் திருமபச் சொல்லாதே! வாழ்க்கை காதலைவிடப் பெரியது. ரொம்ப யோசிக்கணும். பொருளாதாரம் அவசியம். ஆண்கள் சில வருடங்கள் வெய்ட் பண்ணலாம். பெண்களுக்கு வயதாக ஆக திருமணம் விரைவில் அமையுமா என்பது சந்தேகம் என்பதைப் புரிந்துகொள்!"
"நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளாமல் கழட்டி விட்டுவிடுவேன் என்று சொல்கிறாயா?"
"அப்படிச் சொல்லவில்லை! வாழ்க்கையில் யாருடைய மனதும் எப்படி வேண்டுமானாலும் மாறலாமில்லையா?"
"இப்பொழுது நீ சரி என்று சொன்னாலும் நான் உன்னைத் திருமணம் செய்து கொள்கிறேன் உஷா!"
"திருமணத்திற்குப் பிறகு நாம் குடும்பம் நடத்த உன் தந்தையிடம் பணம் கேட்பாயா? இல்லை, வேலையில் இல்லாத பையனுக்கு எந்தத் தந்தையாவது தன் மகளைக் கொடுக்க முன் வருவாரா?"
"இதெல்லாம் என்னைக் காதலிக்கும் முன்பு நீ யோசிக்க வில்லையா? என்னைக் காதலித்து என் மனதில் ஆசையை வளர்த்து பின் திடீரென்று வேறொருவருடன் திருமணம் என்று சொன்னால் என் மனம் எவ்வளவு கஷ்டப்படும் என்று நீ உணரவில்லையா?"
"காதலிக்க ஆரம்பிக்கும் போது இதெல்லாம் யோசிக்க முடியாது சுபாஷ். ஒரு பாதையின் வளைவு வரைதான் பாதை நம் கண்களுக்குத் தெரியும். அதன் பின் பாதையை நாம் பயணிக்கப் பயணிக்கத்தான் அறிய முடியும். அந்த வயதில் காதல் கண்களை மறைத்ததால் எதிர்காலம் கண்களுக்குத் தெரியவில்லை. என்ன செய்யச் சொல்கிறாய்?"
"என்னுடைய மனம் இவ்வளவு துன்பப் படுகிறதே! அது உனக்குப் புரியவில்லையா?"
"உன்னுடைய மனம் மட்டுமில்லை சுபாஷ். என்னுடைய மனதும் தான் துன்பப் படுகிறது! எதிர்காலத்தைப் பற்றிய ஒரு பாதுகாப்புணர்வை நீ கொடுத்தால் உன்னைத்தான் திருமணம் செய்து கொள்வேன்!"
"அதற்கு இன்னும் சில காலம் அவகாசம் தரமாட்டாயா?"
"உன்னால் எவ்வளவு காலம் என்று உறுதியாகச் சொல்ல முடியுமா?"
"நீதானே சொன்னாய், பாதை வளைவு வரைதான் தெரியுமென்று! எவ்வளவு காலம் என்று எப்படிச் சொல்ல முடியும்?"
"அதையேதான் சொல்கிறேன். பயணித்துப் பார்ப்போம் என்று! ஆனால், வேறு வேறு திசையில்!"
"நாம் காதலித்த தருணங்களின் நினைவுகளை உன் மனதை விட்டு அழித்து விடுவாயா?"
"எந்த ஒரு நினைவும் எப்படி மனதை விட்டு அகலும்? அது ஏதாவது ஒரு நியூரானின் ஆழத்தில் ஒட்டிக்கொண்டு தானே இருக்கும்?"
"அப்படியானால் திருமணத்திற்குப்பின் என்னையும் உன் கணவரையும் ஒவ்வொரு செயலிலும் உன் மனம் ஒப்பிட்டுப் பார்க்குமில்லையா?"
"மனம் எப்போதும் சும்மா இருக்காது சுபாஷ்! எதையாவது எதனுடனாவது ஒப்பிட்டுப் பார்க்கத்தான் செய்யும். ஆனால், அதற்கு ரியாக்ட் செய்யாமலிருப்பதுதான் முக்கியம்!"
"அப்படியானால், மனதளவில் உன் கணவருக்கு துரோகம் செய்வதாகத்தானே அர்த்தம்?"
"சின்ன வயசில் நான் கேட்டு ஏதாவது வாங்கித் தரவில்லை என்றால் என் அப்பா மீது பயங்கரக் கோபம் வரும். இவரை ஓங்கி நாலு அறைவிட்டால் தேவலாம் போல மனம் நினைக்கும். அதற்காக, என் தந்தை மீது பாசம் இ்ல்லை என்று அர்த்தமா?"
"கோபம் வந்தாலும், அவருடைய பொருளாதார நிலை எதுவாக இருந்தாலும் அவர்தானே உன் தந்நை? தந்தையை உன்னால் மாற்ற முடியாதல்லவா? என்னை மட்டும் ஏன் மாற்றுகிறாய்?"
"வாழ்க்கையில் மாற்றமுடியாத விஷயங்கள் நம்முடைய பிறப்பும் இறப்பும்! அதைத் தவிர எல்லா விஷயங்களையும் மாற்றக்கூடிய உரிமையைக் கடவுள் நமக்குக் கொடுத்திருக்கிறார்!"
"நீ மாற்றக்கூடிய விஷயங்களில் மற்றவர் மனது நோகக்கூடாதல்லவா?"
"அதனால் தான் உன்னுடன் அமர்ந்து இவ்வளவு நேரம் பேசிக் கொண்டிருக்கிறேன் சுபாஷ். உன்னுடைய மனது என்னுடைய இந்த முடிவால் காயப்பட்டுவிடக்கூடாது சுபாஷ். நீ படித்து முடித்தவுடன் உனக்கு ஒரு நல்ல வேலையும், நல்ல மனைவியும் கிடைப்பாள். தயவுசெய்து வருத்தப்படாதே!"
"முயற்சிக்கிறேன் உஷா!"
அடுத்த மாதத்தில் உஷாவின் திருமணம் வினோத்துடன் நடந்தது.
இரண்டாவது வருடத்தில் சுபாஷூக்கு வேலை கிடைத்து, நான்காவது வருடத்தில் திவ்யாவைத் திருமணம் செய்து கொண்டான்.