Dr.PadminiPhD Kumar

Children Stories Children

4  

Dr.PadminiPhD Kumar

Children Stories Children

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 19

ஞாயிறுதோறும் சிறுகதை - கதை 19

3 mins
489


                 பிறந்தநாள் பரிசு 

            சென்னை நகரின் அரசாங்க அலுவலகத்தின் உயர் அதிகாரி சுந்தரத்தின் ஒரே மகன் ஆதி. 9 வயது கடந்த மகன் ஆதியின் பிறந்த நாளை மிகவும் ஆடம்பரமாக கொண்டாட நினைத்தார் அவனது அப்பா சுந்தரம். உயர்மட்ட நடுத்தரவர்க்க குடும்பமானதால் அம்மாவும் அப்பாவும் தங்கள் உறவினர்கள், நண்பர்கள் முன்னிலையில் தங்கள் ஆடம்பர வாழ்க்கையை பிரகடனம் செய்வதில் தயக்கம் காட்டியதில்லை. இதற்காகவே தங்கள் ஒரே மகன் ஆதியை சென்னையில் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே இருக்கும் உயர்ந்த பள்ளியில் சேர்த்து படிக்க வைத்தனர்.


          பிறந்தநாள் அழைப்பிதழ் தயாரானது. சுந்தரம் முதலில் அழைப்பிதழ்களை தன் அலுவலக அதிகாரிகளுக்கு வழங்கினார்.அவர் மனதில் தன் உயர் அதிகாரி தன் வீட்டிற்கு வர வேண்டும்; தன் உயர்ந்த ஆடம்பர வாழ்க்கை கண்டு வியக்க வேண்டும் என்பதே நோக்கமாக இருந்தது. இதற்காகவே உயர் அதிகாரி திரு.படேல் அவர்களை மிகவும் வருந்தி அழைத்து இருந்தார்.


         ஆதி தன்னுடன் படிக்கும் அரவிந்த், அசோக், மகேஷ், ரமேஷ் முதலிய நண்பர்களைத் தன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு வருமாறு அழைத்திருந்தான். அவனது நண்பர்களில் அவனுக்கு மிகவும் பிடித்தவன் மகேஷ் தான். ஒரு மாதத்திற்கு முன்பே தன் நண்பர்களிடம் தன் பிறந்த நாள் கொண்டாட்ட ஏற்பாடுகளைப் பற்றி ஒவ்வொரு நாளும் கதை கதையாக கூறிக் கொண்டிருந்தான்.ஆதியின் அப்பா சுந்தரம் சென்னை நகரில் உயர் அரசாங்க அதிகாரிகள் வாழும் அண்ணாநகர் பகுதியில் பெரிய சொகுசு பங்களா கட்டி இருந்தார்.


அந்தப் பெரிய வீட்டில் தன் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக வண்ண வண்ண அலங்காரப் பூக்களாலும் பலூன்களாலும் எவ்வாறெல்லாம் அலங்கரிப்பார்கள் தெரியுமா என்று தன் நண்பர்களிடம் ஆதி முதல் நாள் விவரித்துக் கொண்டிருந்தான்.


        மறுநாள்,”வீட்டில் கேக் செய்ய மாட்டார்கள்; ‘க்ரீம் கிங்' ஷாப்பில் ஆர்டர் செய்து வரவழைக்க ஏற்பாடு செய்திருப்பதாக கூறினான். அடுத்த நாள் தன் நண்பர்களிடம்,”உங்களுக்கு என்ன ஜூஸ் பிடிக்கும்?” என கேட்க, ஆளுக்கொரு ஜூஸாக ஆரஞ்சு, லெமன், கிரேப், ஆப்பிள் என சொல்லவும், தன் பிறந்த நாளன்று அவர்கள் அருந்தி மகிழ அவர்களுக்கு பிடித்த ஜூஸ் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பது குறித்து மிக மகிழ்ச்சியுடன் சொன்னான். அவர்கள் அனைவரும் எவ்வளவு விரும்புகிறார்களோ அவ்வளவு ஜூஸ் குடிக்கலாம்; யாரும் திட்ட மாட்டார்கள் என்று சொல்லி நண்பர்கள் அனைவரும் சிரித்து கனவில் மிதந்தனர்.


            பிறந்தநாள் கேக் வெட்டிய பின் எல்லோருக்கும் சாக்லேட் கொடுப்பார்கள்; எல்லோருக்கும் பெரிய பலூன் கொடுப்பார்கள்; பலூன்களை ‘டப், டப்' என வெடித்து கொண்டாடுவார்கள்; அதன்பின் ஆதி தன் நண்பர்கள் அனைவருடனும் சேர்ந்து நின்று போட்டோ எடுத்துக் கொள்ளலாம் என்று பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வுகளை பற்றி பேசி மகிழ்ந்து கொண்டிருந்தான்.


            பிறந்த நாள் வந்தது. நண்பர்கள் அனைவரும் வந்து சேர்ந்தனர். வந்ததும் நண்பர்கள் ஆதியிடம் தங்கள் பெற்றோர்கள் 8 மணி வரை தான் இருப்பார்கள்; அதன்பின் நாங்கள் கிளம்பி விடுவோம் என்று சொன்னதும் ஆதியும் 8 மணிக்குள் பிறந்தநாள் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் நடந்து விடும் கவலைப்பட வேண்டாம் என உறுதியளித்தான். ஆனால் நடந்ததோ வேறு. அப்பாவின் உயர் அதிகாரி நேரத்திற்கு வரவில்லை.அவர் வந்த பின்தான் கேக் வெட்ட வேண்டும் என்று அப்பா சொன்னதும் ஆதிக்கும் அவனது நண்பர்களுக்கும் ஏமாற்றம் ஆயிற்று.


நண்பர்களின் பெற்றோர்களும் உறவினர்களும் முணுமுணுக்க ஆரம்பித்தார்கள். எட்டு மணி ஆனதும் நண்பர்கள் புறப்பட ஆரம்பித்தார்கள். ஆதித் தன் நெருங்கிய நண்பன் மகேஷை தன்னுடன் இருக்குமாறு சொன்னான். ஆனால் அவர்கள் வசிக்கும் வீடு வெகு தொலைவில் உள்ளதால் அவனது பெற்றோர் நாளை பள்ளி செல்ல வேண்டும் என்று சொல்லி மகேஷை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டனர். ஆதி அழ ஆரம்பித்தான். கேக் வெட்டாமல் நண்பர்கள் சென்றதால் ஏமாற்றத்திற்கு ஆளான ஆதி தன் அறைக்குள் சென்று அழுது கொண்டே படுத்தவன் தூங்கிவிட்டான். பல நாள் கனவுகள் கானல் நீராய் கலைந்தது.


                 எட்டு மணிக்கு மேல் திரு.படேல் வந்தார். அப்பா உடனே சுறுசுறுப்பாக எல்லோரையும் அறிமுகப்படுத்திவிட்டு ஆதியை கூப்பிட்டார். அம்மா உடனே ஆதியை தூக்கத்திலிருந்து எழுப்பி அழைத்து வந்தார்.படேல் தன் வலது கையை நீட்டி,”ஹேப்பி பர்த் டே டூ யூ!” என்று சொன்னதும், ஆதி முறைத்துக் கொண்டு நின்றானே தவிர தன் கையை நீட்டி குலுக்க மறுத்தான். அப்பாவும் அம்மாவும் மிகவும் சங்கடப்பட்டுப் போனார்கள்.அப்பா அதட்டலாக,” ஆதி, அங்கிளுக்கு தேங்க்யூ சொல்”என்று சொன்னதும் ஆதிக்கு வந்ததோ அழுகையும் கோபமும்.


உடனே அப்பாவைப் பார்த்துக் கத்த ஆரம்பித்தான்,” நான் அங்கிளுக்கு தேங்க்யூ சொல்ல மாட்டேன்; நான் கேக் வெட்ட மாட்டேன்;என் பிரண்ட் மகேஷ் போய்விட்டான்; நான் ஏன் இந்த அங்கிளுக்காக கேக் வெட்டணும்? நான் கேக் வெட்ட மாட்டேன்” என்றான். அப்பா சிறிதும் யோசிக்காமல் பளார் என அவன் கன்னத்தில் அறைந்து விட்டார். ஆடம்பர வாழ்க்கையில் மூழ்கிய அப்பா தன் பையனின் பிறந்தநாள் பரிசாக கொடுத்தது கன்னத்தில் பளாரென்று ஒரு அறை. கன்னம் தடித்துப் போனது. சிவந்த கன்னத்தில் விரல்களின் தடம் தெரிந்தது. ஆதி அம்மாவிடம்,” நான் நாளை ஸ்கூலுக்குப் போகமாட்டேன்” என்று சொல்லி விசும்பினான்.


Rate this content
Log in