DEENADAYALAN N

Children Stories Drama

5.0  

DEENADAYALAN N

Children Stories Drama

கொன்னவன் செத்து மூனுமாசமாச்சு

கொன்னவன் செத்து மூனுமாசமாச்சு

2 mins
155




டிசம்பர் 4, 2019




எங்க ஜானகி பாட்டி நெறைய கதைகளை சொல்லும்.. ‘செவிட்டு குள்ளனும் தவிட்டு ரொட்டியும்’ , ‘பத்து விரல் செத்த மாமியார்’ ன்னு ஏதேதோ தலைப்புகள் சொல்லும்!


அதுலே ஒன்னுதான் நான் இப்போ சொல்லப் போற கதையும். கதையோட தலைப்பே ஒரு விடுகதைதான்!


“ கதையெல்லாம் ஒரு விதமாச்சு

 குடும்பம் அது ரெண்டாச்சு

 நேத்து செத்த முயலு இன்னக்கி கொழம்பாச்சு

 அந்த முயலைக் கொன்னவன் செத்து மூனு மாசமாச்சு! ”


இது வரைக்கும் இந்தக் கதையை கேட்டிராதவங்களுக்கு  இந்தக் கதையோட தலைப்பில் இருக்கிற கடைசி வரி ஒரு புதிராகவும்(suspense), கிளர்ச்சியூட்டுவதாகவும் (thrill), மிகுபுனைவாகவும் (fantasy) பலவித உணர்வுகளை தோற்றுவிப்பதாகவும் இருக்கும்!


சரி.. இந்தக் கதையெ எங்க பாட்டி எப்பிடி சொல்லுமோ அப்பிடியே நான் உங்களுக்கு சொல்லப்போறேன். நான் ரெடி! நீங்க ரெடியா?

 

‘ஒரு ஊர்லே ஒரு புருஷன் பொண்டாட்டி இருந்தாங்க, அந்தப் புருஷன் அடிக்கடி வியாபாரம் பண்ண வெளியூருக்குப் போயிடுவான். அப்பொ அந்த பொண்டாட்டிக்கு வேறொருத்தன்

கூட சினேகம் உண்டாச்சு. (அப்போ இந்த வாக்கியத்திற்கு என்ன அர்த்தம்னே எனக்கு தெரியாதுங்க).


ஒரு நாள் புருஷன் வெளியூருக்குப் போயிருக்கறப்போ அந்த இன்னொரு ஆளு செத்துப் போயிட்டான். அந்த பொம்பளைக்கு என்ன பண்றதுன்னே தெரியல, அவங்க வீட்டுக்குப் பின்னாடி வனாந்தரம் மாதிரி ஒரு பெரிய காடு இருந்தது. அந்த காட்டுக்குள்ளே அந்த பொம்பள போனா.. செத்துப் போன அந்த ஆளோட கழுத்துலே ஒரு கயித்தை கட்டி ஒரு மரத்துலே தொங்க விட்டுட்டு வந்துட்டா..’


‘அப்புறம் கொஞ்ச நாள் போச்சு! அவ புருஷன் வியாபாரத்த முடிச்சிட்டு ஊருக்கு திரும்பி வந்தான். “அடியே.. நான் குளிச்சு முடிச்சு சிரமப் பரிகாரம் பண்ணிட்டு வர்றதுக்குள்ளே ஏதாவது ‘கவுச்சி - கிவுச்சி’ பண்ணி வையி’ன்னு சொல்லிட்டு ஆத்துக்கு குளிக்கப் போயிட்டான்.


‘ஊட்டுல கோழி ஆடு ஒன்னும் இல்லே.. சரி.. வனாந்தரம் போயி பாக்கலாம்னுட்டு காட்டுக்குள்ளே அந்த பொம்பள போறா..! அப்பொ ரொம்ப நேரம் ஆகியும் அவளுக்கு ஒன்னும் கிடைக்கலே.. அப்பிடியே தேடிகிட்டே அந்த ஆளெ தொங்க வுட்ட எடத்துக்கு வந்துடறா.. பாத்தா அந்த உடம்பு கீழே விழுந்து கிடக்கு.. அதுக்குப் பக்கத்துலே ஒரு முயலு செத்து கெடக்கு. முயலப் பார்த்தா அது நேத்துதான் செத்திருக்கனும்னு இவுளுக்கு தோணுச்சு.. ஆடி ஓடிகிட்டு அங்க வந்த சமயம் பாத்து அந்த முயல் மேல அந்த உடம்பு விழுந்திடுச்சின்னு அவ புரிஞ்சிகிட்டா..’


‘சரின்னு அந்த முயலே எடுத்துகிட்டு வந்து மசாலா அறைச்சு கொழம்பு வச்சு புருஷனுக்கு ஆக்கிப் போட்டா.. ‘


புருஷன்காரன் ஆஹா ஓஹோன்னு சாப்பிட்டான்’


‘இது தான் அந்தக் கதை’ஆன்னு  சொல்லிட்டு எங்க பாட்டி அந்தக் கதையின் தலைப்பை மறுபடியும் ஒரு தடவை சொல்லும்!


“ கதையெல்லாம் ஒரு விதமாச்சு

 குடும்பம் அது ரெண்டாச்சு

 நேத்து செத்த முயலு இன்னக்கி கொழம்பாச்சு

 அந்த முயலைக் கொன்னவன் செத்து மூனு மாசமாச்சு! ”


என்ன.. இப்போ உங்களுக்கு புரியுதுதானே!





Rate this content
Log in