அறம் செய்ய விரும்பு
அறம் செய்ய விரும்பு
கதை என் கையில்! முடிவு குட்டிஸ் கையில்! – இரண்டு
அறம் செய்ய விரும்பு!
(கோவை என். தீனதயாளன்)
ஹை விவு, அவி, ரிஷி, சம்மு, ஜெஸ்மிதா மற்றும் மை டியர் குட்டீஸ்!
கதை சொல்ல நான் ரெடி! முடிவு சொல்ல நீங்க ரெடியா?
‘ஓ..’ என்றனர் அனைவரும். கதை ஆரம்பமாயிற்று!
பரீட்சைக்கு பணம் கட்ட அன்றுதான் கடைசி நாள். மாணவர்கள் முட்டி மோதிக் கொண்டிருந்தார்கள்.
கண்ணன் பதற்றத்துடன் நின்று கொண்டிருந்தான். கடைசி நேரம் நெருங்கிக் கொண்டிருந்தது. பணத்துடன் வருவதாக சொன்ன அவனுடைய அப்பா இன்னும் வந்து சேரவில்லை.
பெருமாள் பணத்தைக் கட்டி விட்டு வெளியே வந்து கொண்டிருந்தான். அப்போது நித்தின், பெருமாளிடம் ‘டேய் உங்கிட்ட முப்பது ரூபாய் இருக்கிறதா’ என்றான்.
‘ஓ இருக்கிறதே.. ‘ என்றான் பெருமாள்.
‘என்னிடம் எழுபது ரூபாய் இருக்கிறது. நீ முப்பது ரூபாய் கொடுத்தாயானால், இரண்டையும் சேர்த்து கண்ணனுக்கு பணம் கட்டி விடலாம். அவன் அப்பா வந்தவுடன் திரும்ப வாங்கிக் கொள்ளலாம்.’ என்றான் நித்தின்.
ஆனால் பெருமாள் மறுத்து விட்டான். ‘டேய்.. அவன் அப்பா பொறுப்புடன் வந்து பணத்தைக் கட்டியிருக்கணும். அப்படி பொறுப்பில்லாமல் அவர் இருந்தால் அதன் பலனை அவன் அனுபவிக்கட்டும். நீயும் பணத்தைக் கொடுக்காதே’ என்று கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கூறினான்.
நேரம் போய்க் கொண்டிருந்து! பணம் கட்டும் நேரத்தை இன்னும் ஒரு மணி நேரம் நீட்டித்திருப்பதாக அலுவலகத்தில் அறிவித்தார்கள். கண்ணனுக்கு ஓரளவு நிம்மதி ஆனது. கடைசியில் சுமார் ஐந்து நிமிடம் இருக்கும் போது கண்ணனின் அப்பா வந்து சேர்ந்து விட்டார். பணத்தை கட்டி விட்டு, மகனிடம் வந்து, ‘மன்னிச்சிடு கண்ணா.. கொஞ்சம் பிரச்சினை ஆயிடுச்சி! ‘
‘என்னப்பா பிரச்சினை.. ‘ கண்ணன் பதற்றத்துடன் கேட்டான்.
‘ஒண்ணுமில்லேப்பா.. கார்லே அடி பட்டு ஒருத்தரு ரோட்டில் கிடந்தாரு. அவரைக் கொண்டு போய் ஆஸ்பத்திரிலே சேர்த்துட்டு வர்றேன். சரியான சமயத்துலே கொண்டு போனதுனாலே அவுரு பொழச்சிகிட்டாரு’ என்று கண்ணனின் அப்பா கூறினார்.
அந்த நேரம் பார்த்து நித்தின் அங்கே வந்து ‘ மன்னிச்சிடுங்க சார்.. கொஞ்சம் பணம் பத்தலே. இல்லேன்னா கண்ணனோட பணத்தை நானே கட்டி இருப்பேன்..’ என்றான்.
‘பரவாயில்லே தம்பி.. நாம் ஒரு நல்ல செயலில் ஈடு பட்டிருக்கும்போது, நமக்கு நடக்க வேண்டிய நல்லதை கடவுள் கவனிச்சிக்குவார்னு பெரியவங்க சொல்லுவாங்க. பாரு… அதனாலேதான் பணம் கட்ட வேண்டிய நேரத்தை ஒரு மணி நேரம் தள்ளிப் போட்டுட்டாங்களே..!’
அப்போது அங்கே திடீரென்று ஒரு சல சலப்பு உருவானது!
சரி! இப்பொ யாரு இந்த கதையை முடிக்கப் போறீங்க?
‘நானு’ என்று அவி முன் வந்து சொல்ல ஆரம்பித்தான்:
கண்ணனுக்கு பணம் கட்ட மறுத்து, கண்ணனின் அப்பா பொறுப்பற்றவர் என்று குற்றம் சாட்டிய பெருமாள் பதற்றத்துடன் வந்து கொண்டிருந்தான். அவனை நிறுத்தி ‘என்னடா ஆச்சு?’ என்று சில மாணவர்கள் கேட்க, ‘எங்க அப்பாவுக்கு விபத்து ஆயிருச்சிடா பள்ளி அலுவலகத்துக்கு போன் வந்திருக்கு’ என்று அழுதான்.
அதைக் கேட்டுக் கொண்டிருந்த கண்ணனின் அப்பா, ‘உங்க அப்பா பேரு என்ன தம்பி’ என்று கேட்க, ‘ராமசாமி’ என்றான் பெருமாள். ‘பயப்படாதப்பா.. ரெண்டு மணி நேரமா அவரு கூட ஆஸ்பத்திரியிலே இருந்துட்டு இப்பொதான் வந்தேன். அவர் உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லே..’. என்று கண்ணனின் அப்பா சொன்னார்.
‘சார்.. நீங்க..’ பெருமாள் தடுமாற ‘ இவுருதாண்டா கண்ணனோட அப்பா..’ என்று அவனை நெருங்கி கூறினான் நித்தின்.
‘டேய்.. ‘பொறுப்பில்லாதவர்’னு பட்டம் குடுத்தியே.. அவர் மகனுக்கு கொஞ்ச நேரத்துக்கு உன் பணத்தை குடுக்க மாட்டேன்னியே.. என்னையும் குடுக்க வேண்டாமின்னு தடுத்தியே.. அவருதாண்ட உங்க அப்பா பொழைக்கறதுக்கு காரணமா இருந்திருக்கார்’.
பெருமாளுக்கு கண்ணீர் பெருகியது. அவரைக் கையெடுத்துக் கும்பிட்டான். ‘டேய் ஒரு நல்ல காரியத்தை நீயும் செய்யலை.. அதை செய்யற என்னையும் தடுக்கப் பார்த்தே.. அது எவ்வளவு பெரிய தவறு...?’ என்றான் நித்தின்.
பெருமாள் வெட்கித் தலை குனிந்தான்!
‘அப்பொ இந்தக் கதையிலிருந்து நாம் அறியும் நீதி என்ன..?’ என்று சம்மு கேட்க:
‘அறம் செய்ய விரும்பு என்பதுதான். அறம் செய்யாமல் இருப்பது பெரிய தவறு. அதைவிடப் பெரிய தவறு அந்த அறத்தை செய்யும் மற்றவர்களைத் தடுப்பது!’ என அவி முடித்து வைத்தான்.
குட்டீஸ்! இந்தக் கதையை வேறு விதமாகவும் முடிக்கலாம்! உங்களில் யாராவது உங்கள் கற்பனைக் குதிரையைத்தட்டி விட்டு, முயன்று, வேறு முடிவுகளை எழுதி, அதை கருத்துப் பெட்டகத்தில் (comment box) பகிர்ந்து கொள்ளுங்களேன்.
மீண்டும் அடுத்த கதையில் சந்திப்போமா?
அன்புடன்
கோவை என். தீனதயாளன்
