Arivazhagan Subbarayan

Others

4.0  

Arivazhagan Subbarayan

Others

ஆடு...!

ஆடு...!

5 mins
116



 "இந்தத் தடவை உனக்குப் ப்ரமோஷன் கிடைக்கும்னு நினைச்சியா, நித்யா?" கேட்ட பிரகாஷிற்கு வயது முப்பத்து இரண்டு. நல்ல களையான முகம். ஆறடி உயரத்தில் அசத்தலான உடல் வாகுடன் இருக்கும் அமைதியான பையன்.

  "வேலையை ஒழுங்காச் செஞ்சேன். ப்ரமோஷன் தானா வந்திச்சு" சாதாரணமாகச் சொன்ன நித்யாவிற்கும் வயது முப்பது. பார்த்தால் இருபத்தைந்திற்கு மேல் சொல்ல இயலாது. அப்படி ஒரு அழகு! இந்த மாதம் ப்ரமோஷனுடன் கிடைக்கும் ஊதிய உயர்வால் இனி அவளது மாதச் சம்பளம் எழுபதாயிரம் ரூபாய்! ஏனோ அந்தச் சம்பள உயர்வு அவளுக்குப் பெரிதாய் ஒன்றும் மகிழ்ச்சி அளிக்கவில்லை!


  "ட்ரீட் எதும் இல்லையா நித்யா?"

  "என்னிக்குன்னு சொல்லு!"

  "வினோத்தும் வர்றேன்னான்!"

  "சரி, சனிக்கிழமை ஈவ்னிங் சங்கீதாஸ் ல வச்சுக்கலாம்!"

  அவர்கள் வழக்கப்படி ட்ரீட் என்பது நித்யா, பிரகாஷ், வினோத் மூவரும் சங்கீதாஸ் ல போய் உலக விஷயங்களை அலசிக்கொண்டே ஒரு ஸ்வீட், ஒரு மசால் தோசை முடிந்தவுடன் பால் சாப்பிட்டுவிட்டு அவரவர் வீட்டுக்குக் கிளம்பிவிட வேண்டியதுதான். 


   சாப்பிட்டு முடித்தவுடன் ஒருவருக்கொருவர் விடை பெற்று, வீட்டிற்குச் செல்ல நித்யா ஆட்டோவிற்காக வெயிட் பண்ணிக்கொண்டிருந்த போது, வினோத் அவளருகே பைக்கை நிறுத்தி, "நான் வடபழனி வழியாகத்தான் போகிறேன். வா உன்னை உன் வீட்டில் விட்டு விடுகிறேன்"

  நித்யா பில்லியனில் தொற்றிக் கொள்ள, பைக் விரைந்து, அவளை வீட்டில் இறக்கிவிட்டு, மீண்டும் விரைந்தது.

  காலிங் பெல் அழுத்திய ஒரு நிமிடத்தில் கதவை அம்மா திறந்தாள்.

  "ஏன் நித்யா லேட்டு? வா பசியோட இருப்பே! எதாவது குடிக்கக் கொண்டுவந்து தர்றேன்!"


உள்ளே விஸ்கி வாசனை லேசாக அடித்தது. ஹாலில் அப்பா தண்ணி அடித்துக் கொண்டிருந்தார்.

  "நைட் தூக்கமே வர மாட்டேங்குதுடா நித்திம்மா, அதான் ரெண்டு லார்ஜ் மட்டும்!"

  தினமும் அதே சோஃபாவில், அதே இடத்தில் அமர்ந்துள்ள அப்பாவின் ஒரே மாதிரியான வார்த்தைகள்.

  "ஏம்மா இவ்ளோ லேட்டு? சரி சரி! நீ டயர்டா இருப்பே! போய் சாப்பிட்டுத் தூங்குடா கண்ணு!" 


  அதே சோஃபாவில் அமர்ந்து ஏழு வருடங்களுக்கு முன் தன்னைப் பெண்பார்க்க வந்திருந்த குடும்பத்தினரின் காட்சி அவள் மனதில் ஓடியது. அந்தப் பையன் அவளைவிட இரண்டு வயது பெரியவன்.


  "நல்ல இடம் மோகனசுந்தரம். பையன் ஐ.டி. கம்பெனில வேலை பார்க்கறான். மாதமானா முப்பதாயிரம் சுளையா வாங்கறான். நம்ம நித்யாவுக்குப் பொருத்தமா இருப்பான்னு கூட்டிட்டு வந்தேன். விசாரித்துப் பார்த்ததுல உமக்கும் தூரத்துச் சொந்தம்!" புரோக்கர் பரமசிவம் கூறியது, அப்பாவிற்கு ஏனோ பிடிக்கவில்லை. 

  "இப்பதான் எங்க நித்திம்மாவுக்கு இருபத்து மூணு வயசாகிறது. அது ஒரு குழந்தை பரமசிவம்! இன்னும் ஒரு மூணு வருஷம் போகட்டும். ஒரு மெச்சூரிட்டி வந்தவுடன் பார்க்கலாம்!"


  வந்தவர்கள், சம்பிரதாயத்திற்கு ஓரிரு வார்த்தைகள் பேசிவிட்டு விடை பெற்றார்கள். பையனைப் பார்த்தாள். நல்ல உயரத்தில் கம்பீரமாக இருந்தான். அவனும் இவளைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தது போல் தோன்றியது. அந்தப் புன்னகையில் ஓர் ஏமாற்றம் தெரிந்தது. இவளும் தன் உள்ளே ஒரு சின்ன ஏமாற்றத்தை உணர்ந்தாள்! 

   நித்யா அப்போதுதான் ஒரு ஐ.டி. கம்பெணியில் வேலைக்குச் சேர்ந்திருந்தாள். முதல் மாதச் சம்பளம் இருபத்து இரண்டாயிரத்தையும் அம்மாவின் கைகளில் கொடுத்து, பெற்றோரை நமஸ்கரித்து எழுந்தாள். 


  "நல்லா, சந்தோஷமா இரும்மா!" என்று இருவரும் மனதார வாழ்த்தினார்கள். 

  அடுத்தநாள் மாலையில் வேலை முடிந்து வீட்டுக்கு வந்தபோது, 

  "நித்தி, இந்தப் புடவை நல்லாருக்கா? ஆர் எம் கே வி யில வாங்கினோம். ஐயாயிரம்டி. அப்பாவுக்கு ஒரு ரேமன்ட் பேண்ட்டும், ஷர்ட்டும் வாங்கினோம். அதோ அந்த பேக்ல இருக்குபாரு! எல்லாம் உன் சம்பளத்துலதாண்டி!

  மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. 'என் உழைப்பில் பெற்றோருக்கு ஏதாவது வாங்கித்தர முடிகிறதே!' மகிழ்ந்தாள்.


  அடுத்தமாதம் மோகனசுந்தரம் ஒரு ஸ்கூட்டி வாங்கி வந்தார்.

  "மாசா மாசம் ஈ எம் ஐ அஞ்சாயிரந்தாண்டா கண்ணு. அதான் வாங்கிட்டு வந்துட்டேன்"

  "எதுக்குப்பா இது? நான் பஸ்லயே போய்க்கிறேன்!"

  "உனக்கில்லடா, எனக்கு முட்டி வலி வருது. நடக்க முடியல. நீ பஸ்ல போயிட்டு வர்றதுதான் ஸேஃப் டா"

  நித்யா அசடு வழியச் சிரித்துக்கொண்டே,"பாத்து ஓட்டுங்கப்பா! ஹெல்மெட் வாங்கினீங்களா?"

  "வாங்கிட்டேன்டா கண்ணு. சும்மாவா சொல்லுவா, பத்து ஆம்பளைப் புள்ளைங்களைப் பெத்துக்கறத விட ஒரே ஒரு பெண்ணைப் பெத்துக்ககோ. அதுதான் உன்னைக் காப்பாத்தும்னு! எங்க மேல உனக்கு எவ்ளோ அக்கறை!" கண் கலங்கினார்.


  "உங்களுக்கு ஒரு மகன் இருந்தா செய்யமாட்டானா? என்னப்பா இதுக்கெல்லாம் அழுதுக்கிட்டு!"

  "உன்னக் கஷ்டப் படுத்தி உன் உழைப்பில் வாழறமோன்னு ஒரு குற்ற உணர்ச்சி. அதான்டா!"

  "எனக்கு அம்மாவையும் உங்களையும் விட்டா யார் இருக்கா? ஏம்ப்பா இப்படிப் பேசறீங்க? வாங்க சாப்பிடலாம்!"

  நான்கு வருடங்கள் வேலை, வேலையென்றே உருண்டோடியது. மாதச் சம்பளம் ஐம்பதாயிரமாகிய போது, சோளிங்க நல்லூரில் ஒரு அபார்ட்மெண்ட் புக் பண்ணினார் மோகனசுந்தரம். 


   "மாதாமாதம் ஈ எம் ஐ இருபதாயிரம் தான்டா நித்திம்மா. பத்தே வருஷத்தில நம்ம சொந்தமாய்டும். நீ வேலை, வேலைன்னு அலையறதால உனக்குச் சிரமம் இருக்கக் கூடாதுங்கறதுக்காக என் பேர்ல புக் பண்ணிட்டேன். ரெஜிஸ்ட்ரேஷன் அதுஇதுன்னு அலையனுமில்ல!"

  "சரிப்பா நல்லதுதானே!"

  "உனக்கு ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சிட்டா எங்க கடமை முடிஞ்சுதுடா!" கேட்டவுடன் வெட்கப்பட்டாள்.


  அடுத்தநாள் சொல்லி வைத்தது போல் புரோக்கர் வந்தார். 

  "மோகன சுந்தரம், உங்க அதிர்ஷ்டம்னு தான் சொல்லணும். நாலு வருஷத்துக்கு முந்தி வந்த அதே வரன். பையனுக்கு நம்ம நித்யாவைப் பார்த்ததிலிருந்து எந்தப் பெண்ணையும் பிடிக்கலை. உமக்கு எந்த வேலையும் இல்லைன்னு சொன்னதுக்கு,கல்யாணத்துக்குப் பிறகு, நித்யாவோட சம்பளம் முழுவதையும் அவ உங்களுக்கே கொடுத்துடலாம்னு சொல்லிட்டார்.

நீங்க ஒரு வார்த்தை சொன்னா நாளைக்கே வரச்சொல்றேன், பேசிடலாம்!"

  நித்யா உள்ளிருந்து ஆர்வத்துடன் உரையாடலை ஊன்றிக் கவனித்தாள்.

  "இவ்வளவு நாள் அந்தப் பையனுக்குக் கல்யாணம் ஆகலைன்னா, ஏதாவது குறையிருக்கும் பரம சிவம்! நித்திம்மாவுக்கு நான் சொல்றப்ப வரன் பார்த்தாப் போதும்!"


  அன்று ஒரு மத்யமான ஏமாற்றம் ஏற்பட்டது நித்யாவுக்கு! அன்று இரவு எதன் காரணத்தாலோ விழித்துக் கொண்ட நித்யாவின் காதுகளில் தெளிவாக அவளது பெற்றோரின் சம்பாஷணைகள் விழுந்தது!

   "ஏங்க, நமக்கிருக்கிறது ஒரே பொண்ணு. காலா காலத்துல அவ கல்யாணத்தைப் பார்க்க வேண்டாமா? அந்தப் பையனும் நித்யாவோட சம்பளத்தை நமக்கே குடுத்துடலாம்னு சொல்றாரே. செஞ்சிடலாங்க!"

  "மரகதம், உனக்குப் புரியாது. கல்யாணம்னு பண்ணினா, குழந்தை உண்டாகும். அப்ப வேலைக்குப் போக வேண்டாம்னு முடிவெடுத்தா எப்படி நித்திம்மா சம்பளம் நமக்குக் கிடைக்கும்? எப்படி வீட்டிற்கு ஈ எம் ஐ கட்டுவே? அதனால கொஞ்சம் பொறு!"

  "அதுக்கு இன்னும் ஆறு வருஷம் இருக்குங்களே! முப்பத்து மூணு வயசிலயா கல்யாணம் பண்ணுவீங்க?"


  நித்யாவிற்குத் தலை சுற்றியது. 

 அடுத்த நாள் தன் தோழி தேவியிடம் ஆலோசனை கேட்டாள்.

  "பேசாம நேரா சொல்லிட வேண்டியதுதானே அதே பையனைக் கல்யாணம் பண்ணி வச்சிடுங்கன்னு! நானாக இருந்தால் அதைத்தான் செய்வேன்!"

  "இல்லை நித்யா, அவர்கள் என் பெற்றோர்கள். என்னிடம் அன்பாக இருப்பவர்களிடம் எப்படி உறுதியான வார்த்தைகளில் பேச முடியும்?"

  "நீயும் அன்பாகவே கேள்!"

  "அவர்களும் அன்பாக மறுத்து எதாவது பதில் சொல்வார்கள் தேவி!"

  "அப்ப என்னதான் செய்யப் போறே?"

  "எனக்கு இன்ஃபோசிஸ்ல வேலையும்,.யு.எஸ் போகிற சான்ஸூம் கிடைச்சிருக்கு. மூணு வருஷம் கஷ்டப்பட்டு அபார்ட்மெண்ட் லோனைக் கட்டிவிட்டுப் பிறகு திருமணம் பற்றிப் பேசுகிறேன்!"

  இன்ஃபோசிஸில் வேலைக்குச் சேர்ந்து, அங்கு தன்னைப் பெண்பார்க்க இரண்டுமுறை முயற்சி செய்த பிரகாஷைச் சந்தித்து, ஆச்சரியப்பட்டுப் பின் அவன் இன்னும் திருமணம் செய்து கொள்ளாததை அறிந்து காதலித்து, அவனிடம் மூன்று வருடம் அவகாசம் கேட்டு, யு.எஸ் சென்று, இரவு பகலாய் உழைத்து, அபார்ட்மென்ட் லோன் முடிந்த பின் இப்பொழுதுதான் நிம்மதியாய் மூச்சு விடுகிறாள்! 

  அடுத்தநாள் ஆஃபீஸ் முடிந்து வீட்டுக்கு வந்ததும், 

  "நம்ம தேவியோட அப்பா பரந்தாமன் சொன்னார். உனக்குப் புரமோஷன் கிடைச்சிருக்காமே! கன்கிராட்ஸ் மா!"


  "சாரிப்பா, நேத்தே நான் சொல்ல மறந்துட்டேன்!"

  "பரவால்லைடா! உனக்கிருக்கிற அலைச்சல்ல இதெல்லாம் எப்படி ஞாபகம் வச்சிருக்க முடியும்? வீட்டு லோனும் முடிஞ்சிருச்சு! புரமோஷனும் வந்திருச்சு. அதனால ஒரு ஸ்விஃப்ட் டிசையர் புக் பண்ணியிருக்கேன். நம்ம கிட்ட கார் இருந்தால்தான் நல்ல வசதியான வரனெல்லாம் வரும்!"

  அடுத்த நாள் லஞ்ச் டைமில் தேவியும் நித்யாவும் கேண்டீனில் எதிரெதிரே!

  நேற்று நடந்தது முழுவதையும் நித்யா தேவியிடம் கூறினாள்!

  "பிரகாஷிற்கு இது தெரியுமா?"

  "எதையும் பிரகாஷிடம் நான் சொல்லவில்லை! என் பெற்றோரைத் திருமணத்திற்குப் பிறகு குறைவாக மதிப்பிட்டால் என்னால் பொறுத்துக் கொள்ள முடியாது!" 

  "இனியாவது உன் தந்தையிடம் உன் விருப்பத்தைச் சொல் நித்யா!"

  "எது சொன்னாலும் அன்பாகத் தட்டிக்கழித்து விடுவாரோ என்று எண்ணுகிறேன்!"

  "அப்ப இதுக்கு என்னதான் வழி?"

  "அவர்கள் மனம் கோணாது அவர்களாகவே எனக்குத் திருமணம் செய்து வைக்க ஒரு வழி இருக்கிறது!"

  மாலை அலுவலகம் முடிந்தவுடன்,"வினோத், என்னை உன் பைக்ல என் வீட்ல ட்ராப் பண்ணிடு!"

  "அவன் போற ரூட் வேற! நீ போற ரூட் வேற! அவனை ஏன் சிரமப் படுத்தறே!" என்றான் பிரகாஷ்.

  "எல்லாம் ஒரு காரணமாத்தான்.


வினோத் உனக்குச் சிரமமில்லையே! ஒரு நாலுநாள் உன் ஹெல்ப் வேணும்!"

  "ஒண்ணும் கஷ்டமில்லை! வா!"

 ஐந்தாம் நாள் இரவில் நித்யாவின் அம்மா,"காலா காலத்துல நம்ம பொண்ணுக்கு ஒரு கல்யாணம் பண்ணிவைக்கச் சொல்லிக்கிட்டேயிருந்தேன். கேட்டீங்களா? இப்ப யாரோடவோ தினமும் பைக்ல வந்து இறங்கறா! பக்கத்து வீட்லயெல்லாம் என்ன நினைப்பாங்க!"


   "நாளைக்கே அந்த புரோக்கரைப் பார்த்து, நித்யாவை முதல்ல பொண்ணு கேட்டு வந்தவங்களை வரச்சொல்வோம்!"

  "என்ன இப்படிப் பேசறீங்க! நித்யா இப்ப பைக்ல வந்த பையன் மேல் காதல் வைத்திருந்தால் என்ன செய்வது? அவளிடம் ஒரு வார்த்தை கேட்டுவிட்டு முடிவெடுங்கள்"


  "மரகதம், அந்தப்பையன் தான் நித்யாவின் சம்பளம் முழுதும் கல்யாணத்திற்குப் பின் நமக்கே தருவதாக ஒப்புக் கொண்டான். அதனால், நான் முடிவு செய்து விட்டேன், அந்தப் பிரகாஷ்தான் என் மாப்பிள்ளை!"

  நித்யாவின் உதடுகளில் ஒரு புன்னகை தவழ்ந்தது. உள்ளத்திலும்தான்!  

         



Rate this content
Log in