உள்ளே உனைப் பார்த்தேன்...!
உள்ளே உனைப் பார்த்தேன்...!


உள்ளே உனைப் பார்த்தேன்!
நீதான் நானென்றுணர
உவகைச் சுழற்சியில் என் உள்ளம்!
பூமியின் ஆதியாய்
மனதினுள் சோதியாய்
உன் பரிமாணம்!
சலசலக்கும் இலைகளில்
கலகலக்கும் நீரோடையில்
பளபளக்கும் உன் உருவம்!
புழுவின் நெளிவிலும்
விழுமிய கதிரவ ஔியிலும்
தழுவிநிற்கும் உன் நிழல்!
நிலமிசை ஊற்று
தழுவும் காற்று
அசையும் நாற்று
அனைத்திலும் நீதான்!
புற்கள் செறிந்த காடு
மேய்கின்ற ஆடு
அனைத்தும் நீ வாழ்கின்ற வீடு!
நிலமோ நீரோ
வயலோ சேறோ
வாய்த்திடும் சோறோ
எதிலும் மாறாது நீதான்!
பஞ்ச பூதங்கள்,
விஞ்சும் வாதங்கள்
எதிலும் உன் நாதங்கள்!
ஐம்புலன் அடக்கி
மனதை மடக்கி
வாழ்வை நடத்த
என் உள்ளே உனைப் பார்த்தேன்!
நீதான் நானென்றுணர
உவகைச் சுழற்சியில் எனதுள்ளம்!