STORYMIRROR

Uma Subramanian

Others

4  

Uma Subramanian

Others

பதில் தருவீரோ?

பதில் தருவீரோ?

1 min
361

காடு மேடெல்லாம் சுற்றி வந்தேன்...

கழனியோரங்களில் மேய்ந்து நின்றேன்!

கனவிலும் துன்பம் நினைத்ததில்லை....

கண்ட இன்பம் நிலைக்கவில்லை!

கட்டியப்பா! நான் செய்த பாவம் என்ன?

எங்கோ ஓர் வீட்டில் தாய் எனை ஈன்றாள்! 

தன் கண்ணில் வைத்து எனைக் காத்தாள் !

வாயில்லா ஜீவன் எனை வயிற்றுக்காக 

வளர்த்தவர் எனை விற்றார்!

வளர்த்தப் பாசம் வாய்விட்டு அலறினேன்!

பெற்றப் பாசம் மனமில்லாமல் பிரிந்தேன்! 

இலை தழையிட்டு இரவெல்லாம் மேயவிட்டு

காலையில் களைப்பாற குடநீர் கொண்டு 

கருமேனியெல்லாம் தேய்த்து கழுவி....

கழுத்திலே மலர்மாலையிட்டு....

நெற்றியில் ஒரு மங்கலத்திலகமிட்டு.... 

மேள தாளங்கள் மண்ணில் முழங்க....

வானவேடிக்கைகள் விண்ணைப் பிளக்க...

சுற்றமும் நட்பும் சூழ நின்று....

கோவிந்தா கோவிந்தா கோஷம் எழுப்ப 

ஊர்வலமாய் ஊரைச் சுற்றி வந்தேன்!

உன் ஆலயம் வந்தேன்... ஒரு சுற்று சுற்றி 

படைத்தவன் உன் முகம் கண்டேன்....

பெற்று வளர்த்த தாயை மறந்தேன்! 

பேணி வளர்த்த மாந்தனை துறந்தேன்! 

கற்பூர ஆராதனைக் காட்டி... 

கோயில் மணி ஒலிக்க....

உன் முன்னே எனை மண்டியிட வைத்து....

கழுத்தைக் கட்டையிலே வைத்து...

வாயைக் கையிலே பிடித்து....

கத்தியை மேலே உயர்த்தி.... ஒரே போடு! அய்யகோ!!! என் தலை துண்டானது!

உடல் இரண்டானது.... ஈரக்குலை நடுங்கியது.... 

அங்கம் பதறித் துடித்தது.... இரத்த ஆறு 

உன் பாதம் நோக்கி பாய்ந்தது!

ஆவி அலறித் துடித்தது.... 

ஆன்மா உன்னடி சேர்ந்தது!

பாவியவன் உன் கண்ணை திரையிட்டு மூடிவிட்டான்.... 

பார் ! கண் திறந்து பார்! எத்தனை வெறிச்செயல்!

படையலிட்ட மதுவின் வாடையில் மயக்கம் கொண்டனையோ? 

அய்யனாரப்பா என் அங்கம் துடிப்பதை பார்க்கலையோ?

வீரனாரப்பா பாய்ந்தோடும் குருதியாறு காணலயோ? 

குள்ளக் கருப்பு அப்பா ஈரக்குலை நடுங்குவது தெரியலையோ?  

என் அபயக்குரல் உங்கள் செவிகளை எட்டலையோ? 

என் மரண ஓலம் உங்கள் மனதை இரங்கச் செய்யலையோ? 

மனிதனிவன் ஆளுமை கொண்டு பலியிடும் பாதகம் தடுப்பீரோ?

பதில் தருவீரோ? 

 எளிய உயிர்களாம் எங்களைக் காப்பீரோ?

எங்கள் வாழ்வு நிலைக்குமோ? 

வசந்தம் தனை கொடுக்குமோ? 


 

 


Rate this content
Log in