பந்தம் போற்றும் பெருநாள்
பந்தம் போற்றும் பெருநாள்


கூட்டுக் குடும்பங்களில் வளர்ந்த குழந்தைகள்...
இன்று தனித் தீவுகளில்!
தனித்து வளரும் அவர்கள்
அன்பெனும் நீரூற்ற....
பாசமெனும் பந்தலிட...
அறிவெனும் வெளிச்சம் பெற....
பகுத்தறிவை பரப்பி விட....
தீயொழுக்கம் எனும் களையெடுக்க......
நல்லொழுக்கம் எனும் உரமிட....
நாதியற்று....
கூண்டுக்குள் சிக்கி வாழ்கின்றனர்!
அழும் போது ஆறுதல் சொல்ல ஆட்கள் இல்லை!
உண்ணும் போது வேடிக்கைக் காட்ட விரல்கள் இல்லை!
உறங்கும் போது கதைகள் சொல்ல உறவுகள் இல்லை!
எந்திரங்களோடு எழுந்து....
அவற்றோடே உறவாடி..... உறங்கி.....
விளையாடி.... வாழ்நாளை நகர்த்துகின்றனர்!
எந்திரங்கள் சொல்வதில்லை!
எது சரி? எது தவறு? என்று!
ஈன்று புறந்தள்ளுதல் எங்கள்கடன்!
ஈட்டிப் பொருள் சேர்த்தல் எங்கள் கடனே! என்றே ....
பெரிதும் பிள்ளைகள் நலனைப் பேண வேண்டிய பெற்றோர்கள் ....
தன் நலம் காக்கவே தடுமாறி
தளர்ந்து விடுகின்றனர்!
இன்றைய குழந்தைகள் நாளைய தலைவர்கள்!
காலத்தோடு கலாச்சாரங்களும் மாறிக் கொண்டே செல்கின்றன!
சுதந்திரம் என்னும் பெய
ரில் எல்லாமே மாறிக் கொண்டே இருக்கின்றன!
நல்ல பண்புகளை இளம் மனதில் விதைத்து விட்டால்
நல்லதொரு சமுதாயம் அமைந்து விடும்!
எத்தனையோ குற்றங்கள் இங்கே மலிந்து கிடந்தாலும்....
பாலியல் குற்றங்களுக்கு குறைவில்லை!
இளமையில் பக்கத்தில் வைத்து பராமரித்து....
கக்கத்தில் வைத்து காப்பாற்ற முடியாமல் காப்பகத்தில் கொண்டு விடுகிறோம்!
காக்க மறந்த நாம் அவர்களைத் தாக்க முயற்சித்தால் பலன் கிட்டுமா?
அவர்கள் புத்திக்கு எட்டுமா?
பந்த பாசங்களின் மேன்மையை மதிக்க....
அதன் பெருமையைப் பாதுகாக்க....
சகோதரத்துவத்தின் புனிதத்தைப் போற்றிப் பாதுகாக்க....
உணர்வுகளை அடக்க.... உணர்வுகளை மதிக்க....
உறவுகளைப் பேண... குற்றங்களுக்கு நாண......
பிள்ளைகளுக்குச் சொல்லித் தருவோம்!
அன்பை அள்ளித் தருவோம்!
நல்ல கதைகளை நாமே சொல்லி வளர்ப்போம்!
நேரம் ஒதுக்குவோம்! நல்ல சமுதாயம்
நம்மால் மட்டுமே உருவாக்க முடியும்!
எந்த குழந்தையும் நல்ல குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே!
அவர் நல்லவர் ஆவதும்.... தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே!
இந்த ரக்ஷா பந்தன்.... அனைத்துப் பந்தங்களையும் ரக்ஷிக்கும் நாளாக அமையட்டும்!