நினைவுகள்...!
நினைவுகள்...!
எண்ணத் தொகுப்புகளில்
சிந்தனை அடுக்குகளில்
தொலைத்ததைத்
தேடிப்பார்க்கிறேன்.
நீண்ட நெடும் பயணத்தில்
காலடிச் சுவடுகளைப்
பின்னோக்கிப் பார்க்கிறேன்!
ஒவ்வொரு சுவடும்
சொல்லும் கதைகளுக்குச்
செவி மடுக்கிறேன்!
கதைகளைக் கேட்கும் போது
ஏனோ ஆனந்தப் பிரவாகம்!
மகிழ்ச்சியின் ஆரவாரம்!
கல்லூரியின் முதன்
நாட்களில் சீனியர்கள்
அணிவகுப்பு நடத்தியதை
நெஞ்சம் நினைக்கிறது!
வெட்கம், பயம் அனைத்தும்
அகன்று நெஞ்சில்
தைரியம் நிறைந்த நாள் அது!
பழைய நினைவுகளை
நெஞ்சில் நிறைக்கும் போது
செய்த குறும்புகளும்
மனதில் வந்து சிலிர்ப்பூட்டும்!
நடந்த பாதைகளை
நினைவில் கொண்டால்
நட்பின் பரிமாணம் புரியும்!
விடுதி அறைகளில்
வித்தியாசச் சிரிப்புகள்!
வராண்டாக்களில்
விளையாட்டுச் சண்டைகள்!
உணவகத்தில் உரிமையுடன்
பரிமாற்றம்!
சினி
மா தியேட்டரில்
சில்லென்ற காற்றோட்டத்தில்
சந்தோஷ நடமாட்டம்!
ஒரு வீட்டிலிருந்து பிரியாணி
ஒரு வீட்டிலிருந்து சீடை, முறுக்கு!
வந்தவுடன் அனைத்தும்
காணாமல் போகும் அதிசயம்!
எதைக் கண்டும்
பயப்படாத இளமைக் காலம்!
படிப்பதற்காக வந்துவிட்டு
லெக்சர் ஹாலைச் சுற்றி
வாக்கிங் போய்விட்டுத்
திரும்பும் அபத்தம்!
மணி பேக்கரியின்
தேநீர்ச் சுவை இன்னும்
மூளையின் நியூரான்களில்
பதிந்துள்ள அதிசயம்!
சென்ட்ரல் தியேட்டரில்
போல்ட்டர்கீஸ்ட் படம் பாரத்துப்
பயந்த பரிதாபம்!
ஒரே நாளில் அரச்சனா, தர்சனாவில்
கான்டோர் மேனும், ஏலியன்
முதலாம் பகுதியும் பார்த்துவிட்டு
தலைவலியைத் தாங்கிக்கொண்ட தில்லு!
அந்தக்கால
இளமை நினைவுகளை
இதயம் உணரும்போது
இந்தக் காலத்திலும்
இளமையாய் உணர்கிறேன்!
இதுவன்றோ
மலரும் நினைவகளால்
மலரும் அதிசயம்!