மரக்கிளையில் ஒரு கூடு...!
மரக்கிளையில் ஒரு கூடு...!
வீட்டின் எதிரேயோர் குறுமரம்!
வளைந்தும்
நெளிந்தும் சென்ற
கிளைகளினூடேயொரு
சிறு வைக்கோல் கிண்ணம்!
பார்வைக்கே
மெத்தன்ற
மிருதுத்தன்மையுணர்த்தும்
அற்புதம்!
காய்ந்து சறுகாகி
விழும் இலைகள்
அதன் மென்மையை இன்னும்
மேன்மையாக்கிக்
கொண்டிருந்தன!
அருகிலுள்ள
பெரு மரத்திலிருந்து
கீச் கீச்சுடன்
ஒரு சிட்டுக்குருவியின்
நுணுக்கப்பார்வை
கூட்டின் மீது
நிலைத்திருந்தது!
சற்று நேரத்தில் எதிர்வீட்டு
மொட்டைமாடிக்
கைப்பிடிச் சுவரு
க்கு
படபட வென்று பறந்தமர்ந்து
மீண்டும் அதே
நுணுக்கப் பார்வை!
அடுத்தநாள் அன்புடன்
கூட்டிலிருந்த
நான்கு குஞ்சுகளும்
ஆவலுடன் வாய்திறக்கத்
தன் அலகால் ஊட்டிவிடும்
அழகில்
மெய் மறந்திருக்கிறேன்!
இரண்டு வாரங்களில்
ஒவ்வொன்றும்
கூட்டைக் காலிசெய்துவிட்டு
வெவ்வேறு திசையில்
பறந்து சென்றன!
சில அம்மாக்கள்
முப்பது வயதுக்கு மேல் ஆகும்
தன் மகனையோ
அல்லது மகளையோ பற்றிச்
சொல்வதைக் கேட்டிருக்கிறேன்,"இவனுக்கு
ஒன்றுமே தெரியாது!
எல்லாமே நான்தான்
செய்யவேண்டும்!"