கண்ணுறங்கு இளம் பூவே...!
கண்ணுறங்கு இளம் பூவே...!


கண்ணுறங்கு இளம்பூவே
கண்ணுறங்கு அழகாக!
மண்ணுலகில் பிறந்ததனால்
மாசுக்கள் பலவுண்டு!
எண்ணமதில்திண்மைவைத்து
எழிலாகக் கண்ணுறங்கு!
தப்பாமல் பின்னாளில்
திரண்டுவரும் சங்கடங்கள்
எப்போதும் துயில்போக்கும்
என்கின்ற நிலையுண்டு
இப்போதே கண்ணுறங்கு
இன்மலரே கண்ணுறங்கு!
நடைபயில முயற்சிப்பாய்
நன்மலரே உனையிழுத்து
உடைமாற்றி அனுப்பிடுவார்
ஊர்எல்லைப் பள்ளிக்கு!
விடையின்றி விழித்திடுவாய்
விண்மீனே கண்ணுறங்கு!
பாடங்கள் தந்துன்னைப்
பலவாறு துன்புறுத்தும்
வேடங்கள் போடுமிந்த
விந்தைமிகு உலகம்தான்!
தலையணையாய் பலநூல்கள்
தவறாது தந்திடுவார்!
தலைக்குஅதை அணையாக்கி
தளராது கண்ணுறங்கு!
பள்ளிக்குச் செல்லென்று
பலமுைறை த
ுன்புறுத்தி
துள்ளிடுமுன் விளையாட்டை
தூரத்தில் வைத்திடுவார்!
சிந்தணையில் படிப்படியாய்
சிதறடிக்கும் எண்ணம்பல
வந்துன்னை வாட்டிடும்தான்!
வாடாமல் கண்ணுறங்கு!
வருடங்கள் சிலகடந்து
வாலிபத்தில் நுழைகையிலே
வருந்தாமல் விஷந்தன்னை
விதைத்தே வீணடிக்கும்!
அதற்கெல்லாம் அயராது
அரும்பேநீ கண்ணுறங்கு!
எதற்கென்றே தெரியாமல்
இன்னல்கள் வந்தடங்கும்!
சாதிமத பேதங்கள்
சடுதியில் மனம்நுழையும்!
பாதியிலுன் பாதையினைப்
பறித்தே திசைமாற்றும்!
ஆதியிலுன் உறக்கத்தை
அடிக்கடி மறக்கவைக்கும்!
நீதியைஉன் மனம்கொண்டு
நேர்த்தியாய்க் கண்ணுறங்கு!
ஏற்றங்களும் தாழ்வுகளும்
எதிர்வந்து வதம்செய்யும்!
மாற்றங்கள் எதிலுமுண்டு!
மனமுவந்து கண்ணுறங்கு!