Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!
Unlock solutions to your love life challenges, from choosing the right partner to navigating deception and loneliness, with the book "Lust Love & Liberation ". Click here to get your copy!

Arivazhagan Subbarayan

Others

3.0  

Arivazhagan Subbarayan

Others

கேள்விகளும் பதில்களும்...!

கேள்விகளும் பதில்களும்...!

2 mins
41


கேள்விகள் உள்ளே...!

பதில்களும் உள்ளே...!


இரவின் அமைதி! இனிய ஓசை!

உருவம் ஒன்று! ஆன்ம தேவதை!

கருத்தை வைத்தேன்! கவனம் கொண்டேன்!

பரவசம் ஒன்று புதிராய் உள்ளே!

விழிகளில் கண்ணீர் வியப்புடன் பார்த்தேன்!

அழகுப் புன்னகை! அன்பின் ஆழம்!

அழுதவுன் ஆன்மா, ஆற்றல் கண்டு

தழுவித் தேற்றிட தென்றலாய் வந்தேன்!

உனது உள்ளம் உவகை பொழிய

தினமும் நெஞ்சம் துவளா தியங்க

மனதும் உடலும் மயங்கா துலவ

வினவு கேள்வியை! விடைகள் தருவேன்!

ஆன்ம தேவதை அன்புடன் கேட்க

ஏன்எனக் கேட்க என்னுள் கேள்விகள்!

அனைத்தும் கொட்ட ஆயத்த மானேன்!

நினைவில் வந்தன நெஞ்சின் நிலைகள்!


அகன்று விரிந்த அண்டம் எதற்கு?

அகிலம் ஒன்றுஅண்டத்திலெதற்கு?

அகிலம் வாழும் அடியேன் எதற்கு?

உகந்த பதிலைஉதிர்ப்பாய் அன்னை!

கடவுள் கொடுத்த கண்கள் கொண்டு

உடலும்உயிரும்உணர்வும்கொண்டு

பார்க்கும் உலகம்புரிய முடியுமா?

ஈர்க்கும் புலன்கள்அகற்றப் புரியும்!


எல்லையில்லா எண்ணம் எழுத்து!

நில்லாதியங்கும் நதிபோல்

எண்ணம்!

வியப்பு,விநோதம்விளங்கவில்லை!

மயக்கம் தொலைய மருந்துகள்

தருவாய்!

அலையாய் ஆசை அகற்றும் வழிகள்,

நிலையிலா வாழ்க்கை! நிம்மதி காட்டு!

மகிழ்வும் சோகமும் மாற்றி மாற்றி

அகத்தில் நெளியும் இம்சை எதற்கு?

  

எழுத்தும் எண்ணமும் ஆன்மா நல்கிய

வழித்துனையவைதான்வகுத்திடும் பாதை!

இன்னல்கொடுக்கஇழுக்கும்ஆசை!

திண்ணிய மனதால் தொலைத்திடு அதனை!

மகிழ்வும் சோகமும் மாறா விட்டால்

அகிலம் இயங்குமா? அன்புடன் எண்ணு!


சாதிகள் மதங்கள்சண்டை எதற்கு?

ஈதலின் இன்பம்அழிந்த தெதற்கு?

ஆதியும் அந்தமும்அறிவ தென்று?

ஏதுவாய் எனக்கொரு எளிய பதில்சொல்!


மதத்தின் அறவுரை மாபெரும் பெரியோர்

இதமாய் மனிதன் இனிதே வாழ,

பதமாய்ப் படைத்த பல்சுவை விருந்து!

மிதமாய் அதனை மதித்திடு நன்றே!

சாதியை நீங்கள்சண்டை போடவே

ஓதியே தூண்டிஉண்மை மறந்தீர்!

ஆதியும் அந்தமும் அறிந்தால் வாழ்வின்

சோதி நீங்கிடும்! சிவமே பதிலாம்!


ஒன்றே எல்லாம்! உண்மை உணர

நன்றே நல்கிடுநல்லதோர் பதிலை!


ஒன்றே எல்லாம்!உண்மையை உனக்கு

நன்றே யுரைக்க நல்ல கதையிது!

பரந்த கடலில்விரிந்த அலையொன்

றுயர்ந்து மேகம் பார்த்து வியந்தது!

அந்தி ஞாயிறின் சுந்தரம் பார்த்து

அழகை வியந்தது!

மயக்கும் மாலைக் கதிரவன் ஔியை

மின்னும் அணியாய் மேனியி்ல் கொண்டு

தென்றல் தழுவ தேன்மழைச் சாரலில்

இன்பச் சந்தம் இசைத்துக் கொண்டு

துள்ளும் மீன்களை

உள்ளே கொண்டு

ஆடி ஓடித் தாவி வந்தது!

முன்னே செல்லும் மற்றொரு அலையோ

முகத்தில் சோகம் முழுவதும் பூசி

அகத்தில் இன்பம் அறவே இன்றி

அடிமே லடியாய்மெதுவே ஊர்ந்தது!

அதனைக் கண்ட நற்பெரும் பின்னலை

நண்பா ஏனுந்தன் நன்முகச் சோகம்?

என்றே வினவ,

சோக முன்னலை,

முன்பார் நண்பா!

எல்லா அலைகளும்

எதிர்கொள் கரையினில்

எப்படிச் சிதறுது என்றே நீபார்!

வாழ்வே முடியும் நேரம் வந்தால்

வருமா மகிழ்வு?வாய்திற நண்பா!

என்றே எதிர்த்துமுன்னலை கேட்க

நன்றாய்ப் பின்னலை நல்கிய தோர்பதில்!

அலையென நினைத்தால் அகலும் வாழ்வு!

கடலென உனைநினை! காலம் முழுதும்

அழியா நிலையில் அற்புதம் காண்பாய்!

முழுமையின் மகத்துவம் முழுதாய் உணர்வாய்!


வெள்ளம் எதறகு? வீண்பசி எதற்கு!

உள்ளம் முழுதும்உண்மை யில்லை!

கள்ள மனது கருத்துச் சிதறல்!

உள்ள உண்மைஉரைத்திடு தாயே!


இயற்கை மாற்றி இன்னல் பெற்றதும்

செயற்கை முறையை சிந்தை நுழைத்ததும்

இறையா? பதில்சொல்!இயற்கை அழிக்கும்

முறையற்ற செயலை மறந்தால் நலந்தான்!


பிறப்பும் இறப்பும் பாடாய்ப் படுத்த

சிறப்புடன் வாழசிந்தை கலங்குதே!

அறத்தை மனிதன்அன்றே விட்டு

திறத்தில் வாழ்வே தொலைந்தது ஏனோ?


கவின்மலர் அருகேகருவண் டாடும்!

புவியின் உயரேபுயலாய்ச் சுற்றும்

கழுகைக் கண்டு கவலை பயத்தில்

உழலும் வண்டு உயிர்த்தேன் மறக்கும்!

விளக்கொளி பார்த்து வியக்கும் குழந்தை,

உளத்தில் பயமது அறவே யின்றி

ஆடும் சுடரில் அழகைக் காணும்!

வண்டின் பயத்தில் வாழ்க்கை தேயும்!

குழந்தைச் சிரிப்பில் வாழ்க்கை வளரும்!


உள்ளொளி பற்றி உரைத்திடு தாயே!

கள்ளம் மறந்து கவியில் கரைய

உள்ளத் லென்றும் உண்மை உறைய

வெள்ளை வழியினை வகுத்திடு தாயே!


மேக மிதத்தலில் மலையின் முகட்டினில்

தோகை விரித்த தேன்மலர்ச் செடிகளில்

இறங்கி யோடும் எழில்பள் ளத்தில்

கிறங்க வைக்கும் கவின்பூஞ் சாரலில்

இறகு முளைத்த இலவம் பஞ்சாய்

பறக்கும் மனதைப் படைத்த துயார்?

விண்ணில் வாழும் விண்மீன் கள்போல்

மண்ணில் மின்னமலர்கள் தூவியே

பொன்னாய் பூமியைப் படைத்த துயார்?

ஆடிடும் அலைகள் அசைந்திடும் தென்றல்

ஊடுரு வும்பனி உறைந்த மலைகள்

ஓடிடும் மான்கள் ஓசைக் களிறு

பாடிடும் புல்லினம் படைத்த துயார்?

விடைதெரி யாமல் விழிக்கிற மனதின்

இடையே தோன்றும் உள்ளொளி பதிலாம்!


குறிக்கோ ளின்றேல் குன்றுமா வாழ்வு?

உரிய பதிலினை உயரத் தருவாய்!


குறிக்கோளை அடைவதுதான்

கருத்துள்ள வெற்றியா?

குறிக்கோளை அடையாவிடில்

குற்றமுள்ள தோல்வியா?

குறிக்கோளை அடைந்தபின்

மற்றுமொரு குறிக்கோளா?

குறிக்கோளே வாழ்வென்றால்

குன்றிடாதோ வாழ்வு?

எண்ணத்தின் ஆழத்தில்

என்னவுண்டு அறிவாயோ?

உண்மையாய் உள்மனதை

உணர்ந்துநீ பார்த்தாயோ?

உண்ணாடி ஓட்டமதை

உள்நோக்கி உணர்ந்தாயோ?

கண்ணாடி பிம்பங்கள்

கல்லெறிந்தால் கலையாதோ?

குறிக்கோள்கள் குறையாமல்

குறிவைத்து செயலாற்றின்

சிறப்புடைய வாழ்க்கையின்

சீரியல்பு மாறாதோ?

அடுத்தது என்னவென்று

அறிந்திடாத நிலைதானே

கொடுக்கப்பட்ட வாழ்வின்

கொஞ்சுகின்ற அழகு!உண்மையான குறிக்கோள்

உலகத்தில் என்னதான்?திண்மையான மனதினில்

தவழுகின்ற எண்ணத்தைத்

திறம்படவே எதிர்நோக்கி

திமிரறுக்க முடிந்திட்டால்

அறம்வளரும் அகத்தினில்!

அதுவேஇன் குறி்க்கோளாம்!


கனவின் ஒட்டம் கலைந்தது உடனே!

ஆன்ம தேவதை அருகில் இல்லை!

வாழ்வின் இனிமை விரிந்தது நெஞ்சில்!

ஆழ்ந்து உள்ளே அமிழ்தாய் இனிப்பு!

        -arivu



Rate this content
Log in