ஏன் இந்த வைராக்கியம்?
ஏன் இந்த வைராக்கியம்?
காத தூரம் இல்லை...
கடந்து போக வேண்டியதுமில்லை!
மெல்லிய உருவம் உண்டு...
மேன்மை பொருந்திய குணமும் உண்டு!
நீர்....
உணர்ச்சிகளைக் காட்டும் கண்ணாடி!
உண்மையில் நிற்பீர் முகத்தில் முன்னாடி!
எவர் துன்பத்திற்கும் கலங்கிடுவீர்!
நவரசமும் காட்டிடுவீர்!
அபிநயமும் புரிந்திடுவீர்..... _நீர்
கண்டோரை கவரும் காந்தம்!
ஆட்டமே அடங்கினாலும்...
உடல் ஓட்டமே நின்றாலும்... _நீர்
ஆறு மணி நேரம் காத்திருந்து ....
நாடி வந்தவரக்கு ....
வாழ்வு கொடுக்கும் வள்ளல் !
தேகம் முழுவதும் மண்ணில் மடிந்தாலும்
அந்தகனுக்கும் ஒளி கொடுப்பீர்
ஒட்டிப் பிறந்த இரட்டையர்களாய்....
இன்பத்திலும் துன்பத்திலும்
பங்கு பெறும் நீர் ....
சண்டையில்லை... சச்சரவுமில்லை!
போட்டியுமில்லை! பொறாமையுமில்லை!
வம்பு தும்பு இல்லை
வழக்கும் ஒன்றுமில்லை!
ஆயினும் கடைசி வரை....
ஒருவரை ஒருவர் பாராமுகம் ஏனோ?
