ஏ மனமே!
ஏ மனமே!
உண்ண நேரமில்லை… உறங்க நேரமில்லை!
உட்கார நேரமில்லை….. உடுத்த நேரமில்லை!
ஓய்வெடுக்க நேரமில்லை! ஓடுகிறாய்……
ஓடிக்கொண்டே இருக்கிறாய்!
கடிகார முட்களோடு….. கடிவாளம் கட்டிய குதிரையாய்….
அடிமாடாய் உழைத்து….. பொதிமாடாய் தேய்ந்து….
இடிபாடுகளைத் தாங்கி…. வடிகாலை நோக்கி ஓடுகிறாய்!
செல்லும் இடமெல்லாம் செல்வங்களையேத் தேடுகிறாய்!
செல்வங்களையே நாடுகிறாய்….
நானோ உழைத்து உழைத்து… அலுத்து…. களைத்து…..
இதற்கு மேல் இயங்குவதற்கு பலமின்றி நிற்கிறேன்!
எதைச் சாதித்தாய்? கேள்விகள் உம்மை கேட்கிறேன்!
ஆரோக்கியத்தை தொலைத்துவிட்டு….,…
ஆஸ்திகளைத் தேடுகிறாய்!
இன்று ஆஸ்திகளைத் தொலைத்து விட்டு….
ஆரோக்கியத்தைத் தேடுகி
றாய்!
ஆஸ்திகளும் நிலைத்த பாடில்லை!
ஆரோக்கியமும் திரும்பிய பாடில்லை!
எதிர்காலத் தேவைகளுக்காக…..
நிகழ்காலத்தைத் தொலைத்தாய்!
நிகழ்காலத்தில் இருந்து கொண்டு……
இற(ழ)ந்த காலத்தை எண்ணி வாடுகிறாய்!
ஏ…. மனமே…. ஆசைகள் உன்னைத் துரத்தியது!
ஆசை என்னும் பொதியை நீ தூக்கித் தூக்கித்
தோளில் சுமந்து…. சுமந்து…
ஆயுள் முழுவதும் அலைந்து திரிந்து….
வாழ்க்கையெல்லாம் ஓட்டத்திலேயே கழித்து….
வாட்டமுடன் நிற்கிறாய்! நான் என் செய்வேன்?
எஞ்சிய காலத்தை எனக்கு நீ விட்டு விடு!
இருக்கும் பலத்தையாவது என்னிடம் தந்து விடு!
ஆசையே துன்பத்திற்கு காரணம்!
ஆசையை விட்டு ஒழித்துவிடு!
துன்பம் இன்றி வாழ்ந்துவிடு!