Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer
Become a PUBLISHED AUTHOR at just 1999/- INR!! Limited Period Offer

தாமோதரன் சாது

Children Stories Drama Inspirational

4.3  

தாமோதரன் சாது

Children Stories Drama Inspirational

நண்டு - கொக்கைக் கொன்ற கதை

நண்டு - கொக்கைக் கொன்ற கதை

2 mins
275



ஒரு குளக்கரை.

கரையோரத்தில் கிழக்கொக்கு ஒன்று விசனமுடன் ஒற்றைக் காலில் நின்று கொண்டிருந்தது.

துள்ளிக் கொண்டிருந்த மீன்களில் ஒன்றுக்கு சந்தேகம் வந்தது. “நம்மைச் சும்மாவிடாதே, ஆனால் செயலற்று நின்றுள்ளதே என்னவாக இருக்கும்” என்று. “நமக்கேன்” என்று இராமல் அதன்முன் வந்தது. “என்ன கொக்காரே! உன் ஆகாரத்தைக் கொத்தாமல் சும்மா நிற்கிறீர்?” என்றது.

“நான் மீனைக்கொத்தித் தின்பவன்தான், ஆனாலும் இன்று எனக்கு மனசு சரி இல்லை” என்றது கொக்கு.

“மனசு சரி இல்லையா… ஏன்?’ என்றது மீன்.

“அதைஏன் கேட்கிறாய்…” என்று பிகு பண்ணியது கொக்கு.

“பரவாயில்லை சொல்லுங்களேன்”

“சொன்னால் உனக்குத் திக் என்றாகும்.”

மீனுக்குப் பரபரத்தது.

“சொன்னால்தானே தெரியும்”

“வற்புறுத்திக் கேட்பதாலே சொல்கிறேன். இப்போது ஒரு செம்படவன் இங்கே வரப்போறான்…” என்று இழுத்தது கொக்கு.

“வரட்டுமே”

“என்ன வரட்டுமே? உங்களையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பிடித்துச் சென்றுவிடப் போகிறான்.”

“அய்யய்யோ!”

உடனே அம்மீன் உள்ளே சென்றுவிட்டது.

சில நிமிடங்கள் ஆகி இருக்கும்; பல மீன்கள் அதன்முன் துள்ளின.

அதுமட்டுமா! ஒட்டுமொத்தமாக “நீயே எங்களையெல்லாம் அந்த அபாயத்திலிருந்து காப்பாற்றேன்” என்று கெஞ்சின. அபாயம் சொன்னவனே உபாயமும் சொல்வான் என்று அவைகள் யோசித்து கொக்கிடம் உதவி கேட்டன.

“நான் என்ன செய்வேன்? என்னால் செம்படவனோடு சண்டை போடா முடியாது. கிழவன் நான். வேண்டுமென்றால் உங்களை இக்குளத்திலிருந்து வேறொரு குளத்துக்குக் கொண்டு போகலாம். அதனால் எனக்கும் இந்தத் தள்ளாத வயதில் பரோபகாரி என்ற பெயரும் வரும்; நீங்களும் பிழைத்திருப்பீர்கள்” என்றது கொக்கு மிகவும் இறக்கம் கசிய.

மீன்கள் எல்லாம் தம் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அதன் பேச்சை நம்பின.

“அபாயத்தை அறிந்து சொன்ன நீங்களே உபாயத்தையும் தெரிந்து சொல்கிறீர்கள்; அப்படியே செய்யுங்கள்” என்றன ஒருமித்தக் குரலில்.

கொக்குக்கும் கசக்குமா காரியம்?

நடைக்கு ஒவ்வொன்றாக குளத்திலிருந்த மீன்களையெல்லாம் கௌவிக் கொண்டுபோய் சில மீன்களைத் தின்று, மற்ற மீன்களை ஒரு பாறையில் உலரவைத்தது.

குளத்திலிருந்த நண்டு ஒன்று இதை கவனித்தது. அதற்கும் வேறு குளத்திற்குச் செல்ல உள்ளுக்குள் ஆசை சுரந்தது.

“ஓ சீவகாகுண்யனே! என்னையும் அவ்விடத்திற்குக் கொண்டுபோங்கள்” என்று கெஞ்சியது.

வருங்காலத்தில் எதுவும் வழிய வரும் – என்று உள்ளுக்குள் துள்ளிக் கொண்ட கொக்கு, நண்டையும் கௌவிக்கொண்டு பறந்தது.

பறக்கும் பொது வழியில் மீன்களின் முள்ளுடல்கள் ஆங்காங்கே சிதறி இருப்பதைக் கண்டது நண்டு.

அதற்க்கு “பக்”கென்றது. அத்துடன் வேறு நீர்நிலைக்குக் கொண்டுச் செல்வதாகக் கூறி மீன்களைத் தின்றுவிடும் கொக்கின் வஞ்சகம் நண்டுக்குச் “சட்”டென்று புரிந்துவிட்டது. தன் நிலையம் அப்படித்தானா?

உயிராசையால் நண்டுக்கு ஒரு உபாயம் தோன்றியது. வைரத்தை வைரத்தால் அறுப்பதுபோல் அதற்கு மூளை வேலை செய்தது.

“கொக்காரே! நீங்கள் என்மேல் இரக்கப்பட்டு எடுத்துக்கொண்டு வந்தீர்கள். அங்கே என் உறவினர்கள் பலர் இருப்பதால், என்னை மீண்டும் அங்கே கொண்டு சென்றால் அவைகளையும் காண்பிப்பேன்” என்றது நண்டு.

“அப்படியா? இன்னும் இருக்கிறதா நண்டுகள்?”

“எனக்கு உறவினர்கள் அதிகம்; பல இருக்கின்றன.”

“ஆஹா! அதிர்ஷ்டம் என்றால் இப்படித்தான் வரவேண்டும்; நம்பாடு யோகம்தான்” என்று மகிழ்ந்த கொக்கு மீண்டும் நண்டைக் கௌவிக் கொன்று பழைய குளத்தை நோக்கிப் பறந்தது.

குளத்துக்கு நேராக வரும்போது

அதுவரை மண்டுபோலிருந்த நண்டு தன் கொடுக்கினால் கொக்கின் கழுத்தை இரண்டு துண்டாக்கிவிட்டு குளத்து நீரில் விழுந்து உயிர் பிழைத்துக் கொண்டது.

அபாயம் சொன்னவனிடமே உபாயம் கேட்ட மீன்கள் செத்தன.

வஞ்சமனத்தானின் உபாய மும் அபயாமே என்றறிந்து கொன்றுவிட்ட நண்டு பிழைத்தது.


Rate this content
Log in