சிங்கப்பூர்
சிங்கப்பூர்


இராமேஸ்வரம் டிரெயின்ல ஏறிட்டோம்டா! ரொம்ப குளிருதுடா!சாதா கம்பார்ட்மெண்டல ஏறியிருக்கலாம்…இது பணமும் அதிகம்தானே!
வெற்றிலையை அம்மா மென்றபடி பேசியது எதிர்சீட்டுக்காரியின் முகத்தை சுளிக்கச் செய்தது. இதைப் பார்த்த ரகு அம்மா! வெற்றிலை நைட் எதுக்கும்மா? பசியை மறக்க இதைப் போட்டே பழகிட்டீங்க……
தனது கணவனிடம் லிப்ஸ்டிக் அணிந்த இளம்பெண் தனது கைக்குழந்தையைத் தூக்கச் சொன்னாள்.
மேடம் நீங்க எந்த ஊரு? நாங்க தஞ்சாவூர் போகணும். இப்பதான் ஃப்ளைட்ல இறங்கி வர்றோம். சிங்கப்பூர்ல ரொம்ப சுத்தம். என் குழந்தைக்கு இந்த ஊர் கிளைமேட்டே ஆகாது. அதான் அவன் விளையாடுற பொம்மை முதற்கொண்டு எல்லாத்தையும் எடுத்துட்டு வற்றேன். இது எல்லாத்தையும் நீங்க லக்கேஜ்ல ஏத்தியிருக்கலாமே!
ரகு கேட்டதற்கு வீணாவிடம் இருந்து புன்சிரிப்பு மட்டும் பதிலாக வந்தது. சிங்கப்பூரின் பெருமைகளை அம்மாவிடம் ஓயாமல் பேசியபடி இருந்த வீணாவை அவள் கணவன் நித்யன் ஆச்சரியத்துடன் பார்த்தபடி .இருந்தான். விழுப்புரத்திற்குப் பக்கத்துல ஏதோ ஒரு குக்கிராமத்துல பிறந்துட்டு என்னமா வாய் கிழியப் பேசுறா! என மனதில் நினைத்தபடி இருந்தான். ரகுவைப் பார்த்து எங்க தம்பி இந்தப் பக்கம்! சொந்த ஊருக்குப் போறீங்களா?
இல்ல அங்கிள் அப்துல்கலாம் பிறந்ததினம் சார்பா எங்கள் அரசு பள்ளியில் ஒரு போட்டி தமிழகம் முழுவதும் வைத்தார்கள். அதில் எனது கண்டுபிடிப்பிற்கு முதல்பரிசு. அதுதான் அப்துல்கலாம் நினைவு மண்டபத்திற்குப் போய்ட்டு இருக்கோம்.அங்கதான் பரிசளிப்புவிழா.
உங்க அப்பா வரலையா? என்ன கண்டுபிடிச்சே?
எனக்கு அப்பா கிடையாது……
வீட்டுக்குப்பைகள் அனைத்தையும் நாம் அரசு வண்டி வரும்போது கொட்டி விடுகிறோம். அவர்கள் அதைப் பிரித்து எருவாக்குகிறார்கள். இது ரொம்ப பெரிய பிராசஸ். இது சமயத்துல சரியா வராததால நம்ம வீட்டுக் குப்பைகளை நாமே உரமாக்குகின்ற இயந்திரம் ஒண்ணைக் கண்டுபிடிச்சேன். ஆனால் இதுல மக்குகின்ற பொருட்கள் மட்டும்தான் போட்டு உரமாக்கமுடியும். இதை நான் வீட்டில் வளர்க்கிற செடிகளுக்கு உரமாக்குகிறேன். என் வீட்டிற்கு வெளியே இருக்கும் மரங்களின் குப்பைகளையும் எடுத்துப்போடுவதால் எனது தெரு முழுவதும் சுத்தமாகிறது. இதற்கு அதிக கரெண்டும் செலவாவது கிடையாது. பேட்டரியிலும் இயங்க வைக்கலாம். நானே தயார் செய்ததால் விலையும் மிக்சி விற்கிற விலைதான்.
உங்க வீடு எங்கப்பா இருக்கு?
பெசண்ட்நகர் பக்கத்துல குடிசை வீடுங்க!
நித்யன் தனது மனைவி ஹேமாவை நினைத்துப்பார்த்தான். பக்கத்து வீட்டுக்காரர்கள் உங்கள் வீடு எங்கே என்ற கேட்டதற்கு குடிசை எனசொல்ல வெட்கப்பட்டு மூன்று அறை கொண்ட அடுக்ககம் என பதில் சொன்னதை நினைத்துப் பார்த்தான்.
ஹேமா நாம இனிமேல் தமிழ்நாட்டில் தங்கிடலாமா?
முகஞ்சுளித்த ஹேமா இங்கே யாருங்க இருப்பா! குப்பைகளைக் கண்ட இடத்தில் வீசி எறிஞ்சுட்டு போவாங்க! ரோடில் அசிங்கம் செய்வாங்க! எனச் சொல்லியபடி குழந்தைக்குப் போட்ட டயபரை சீட்டின் அடியில் போட்டாள். ஏற்கனவே ஆறு பெட்டிகள்.இரண்டு தண்ணீர் பாட்டில்கள். ரகுவும்,அம்மாவும் ஒன்றும் சொல்லாததால் ஹேமா இப்படி செய்கிறாளோ என நித்யனுக்குத் தோன்றியது. நம்ம பேசினால் மேலேயிருந்து விழுந்து தற்கொலை செஞ்சுப்பேன்னு மிரட்டுவாளே! என பயந்து வாயை மூடியபடி நடப்பதை வேடிக்கை பார்த்தான்.
அட! இந்த பொண்ணு என்ன குப்பைகளைப் பக்கத்துல போட்டுட்டு கதை பேசுது! அவ புருஷனும் வாயை மூடிட்டு வர்றான் என அம்மா முணுமுணுத்தாள். சிங்கப்பூர் கதைகளை வேற பேசுது!
ரகு கண்ணாலே பேசாமல் இருங்கள் என சைகை செய்தான்.
தொங்க விட்டிருந்த திரைச் சீலைகளில் உணவுகளைத் தின்றுவிட்டு கை துடைத்ததை அங்கு வந்த டிடிஆர் பார்த்துவிட்டார்.
மேடம்! நீங்க எங்கே இருந்து வர்றீங்க?
சிங்கப்பூர் சார்..
அங்கே இப்படி பொதுவில் குப்பைபோட்டு இடத்தை அசிங்கம் செய்தால் எவ்வளவு ஃபைன் மேடம் என்றார்.
நித்யனும்,ரகுவும் சிரிப்பை அடக்கியபடி தலைகுனிந்து கொண்டனர்.