அமுக்கும் ஆவி-2
அமுக்கும் ஆவி-2


செந்தமிழ் தலைவலி தாங்காமல் மாத்திரையை போட்டுவிட்டு படுத்தாள்.
சிறிது நேரத்தில் டமார் டமார் என பெரிய சத்தம் அவள் காதுகளைக் கிழிக்க, எழுந்துப் பார்த்தாள்.
அவள் அறையே ஆடிக் கொண்டிருந்தது, நில நடுக்கமா என பார்ப்பதற்குள், அவள் கை கால்கள் அவள் கட்டுப்பாடின்றி இயங்கியது. அவள் உடல் பெருத்துப்போய் பூதம்போல இருந்தாள்.அவள் தோள்பட்டைகளில் ஊசிகளை இறக்குவதுப்போல் வலித்தது.
பதறிப்போய் அந்த அறையை விட்டு வெளியே வர முயற்சித்தாள், கால்கள் தள்ளாடி தரையில் வீழ்ந்தாள். அவள் பார்க்கும் இடமெல்லாம் வரி வரியாய் கோடுகளும் புள்ளிகளும் இருந்தன.
அவளை நோக்கி இரு உருவங்கள் நடந்து வந்தது,
இரு வரேன் ஹாஹாஹா ம்ம்ம் ம்ம்ம் என மரண ஓலமிட்டபடி அவை அவளை நெருங்கியது.
ஒன்று மேல் சுவற்றை இடிக்குமளவு உயரமாகவும், ஒன்று குட்டையாக பெருத்த பரங்கிக்காய் போல இருந்தது.
அவள் எழுந்து இரண்டு அடி நடப்பதற்குள் ,அவை அவளை கைகளை ஒன்றும் கால்களை ஒன்றுமாக பிடித்து தூக்கிச்செல்ல அவளுக்கு எல்லாம் இருட்டாகியது.
அவள் கண் விழித்து பார்த்த போது மருத்துவமனையில் இருந்தாள் அவள் பெருத்த உடல் நார்மலாகி இருந்தது. அவள் தான் கண்டவற்றை சொன்னால் நம்பவார்களா என யோசித்தபடி அமர்ந்திருந்தாள்.
அவள் தலைவலி தாங்க முடியலனு
மருத்துவரிடம் கூறினாள்.
இது ஒற்றை தலைவலியின் அறிகுறிகள்தான் என்று கூறி, அதன் பாதிப்பை குறைக்க சில மருந்துகளை கொடுத்தனுப்பினார்.
வெகு நாட்களாகவே அவளுக்கு ஒற்றைத் தலைவலி உள்ளது.
சில நாட்கள் சென்றும் ,அவள் கண்ட கோரக்காட்சி அவள் மனதிலேயே இருந்தது. வீட்டில் பேய் இருக்குமோ என அங்கு தனியே செல்லவே தயங்கினாள். அவள் கண்ட காட்சியை தன் தோழி கலையிடம் கூறினாள்.
இவளின் நிலையை அறிந்த கலை நம்ப ராக்ஸ்டார் பாட்டி பூமாதுவிடம் நடந்ததைக் கூறி ,அவளைக் காண கூட்டிச் சென்றாள்.
அங்கு சென்று என்ன தாயி எதுக்கும் பயப்படாத ஒத்த தலவலி வந்தா பித்து புடிச்ச மாதிரி ஆகிரும்.
சிறுசு பெருசா தெரியும், பெருசு சிறுசா தெரியும். தோள்பட்டை இருக்கி புடிச்ச மாதிரி இருக்கும், உன் உடம்பு உனக்கு ஒத்துழைக்காது.
எதாச்சும் சின்ன சத்தம் கேட்டாலும் மண்டைய பொலக்குறாப்புல இருக்கும். அதெல்லாம் சீக்கிரம் சரியா போயிரும் நீ உன் புருசன் உன்ன விட்டு போய்ட்டானு நினைச்சு வருத்தப்பட்டு, வேதனை பட்டு சரியா தூக்கம் இல்லாம இருந்துருப்ப அதான்
அதிகமாக பாதிச்சுருக்கு.
நான் விசாரிச்சேன், நீ மயங்கி விழுந்தப்ப பக்கத்துல இருந்த ஆளும், அவர் சின்ன பொண்ணும் தான் உன்ன வந்து தூக்கி உட்கார வச்சிட்டு ஆஸ்பத்திரிக்கு போன் பன்னிருக்காங்க. பக்கத்துல குறுவம்மா துனி துவச்சுக்கிட்டு இருந்துருக்கா அந்த சத்தம் தான் உன்ன எழுப்பியிருக்கனும்.
உன் புருசன் உன்டயே திரும்பி வந்துருவான் வருத்தப்படாத என்றார், பாட்டி.
சரி பாட்டி என்றவள், அந்த காட்சியையும் பாட்டி சொன்னதையும் இணைத்துப் பார்த்து, பாட்டி சொல்வது சரிதான்னு புரிந்துக் கொண்டாள்.அவள் பயமும் விலகியது .
கலை, இது பத்திலாம் எப்புடி பாட்டி உனக்கு தெரியும் என ஆர்வமா கேட்டா....
ஆலிஸ் இன் வொன்டர்லேன்ட் படம்
பாத்துருக்கியா டி? அத பார்த்துட்டு
தான் அவ எப்புடி பெருசா சிறுசா மாறுறானு அத பத்தி படிச்சேன்.
கடைசில இந்தமாதிரி மனவியல் பிரச்சனைக்கு பெயரே ஆலிஸ் இன் வொன்டர்லேன்ட் சின்ட்றோம் னு போட்டுருந்துச்சு.
ஒத்த தலவலி , செரட்டோனின் குறைபாடு, மன அழுத்தம் எல்லாம் AWS க்கு கீழதான் வரும். இதெல்லாம் நீயும் படுச்சு தெரிஞ்சுக்கோடி...
நீ சொன்னா சரிதான் பாட்டி இனி நானும் படிக்கிற பழக்கத்த வளர்த்துக்கிறேன்...
ராக்ஸ்டார் பூமாது வாழ்க வாழ்க!!!