VAIRAMANI NATARAJAN

Children Stories

4.9  

VAIRAMANI NATARAJAN

Children Stories

10 ரூபாய் நோட்டு

10 ரூபாய் நோட்டு

2 mins
131



“டேய் சோமு! அங்க பாருடா ஒரு பத்து ரூபாய் நோட்டு கீழே கிடக்கு. நாம எடுத்து ஆளுக்கு ஒரு அஞ்சு ரூபா லேஸ் சிப்ஸ் வாங்கி சாப்பிடுவோம்“ என்றான் ராமு.

ராமுவும் சோமுவும் அரசு உயர்நிலைப்பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவர்கள்.

ராமு, “சோமு! நம் தமிழ்ஆசிரியர் என்ன கூறினார்? ஞாபகமில்லையா? பிறருடைய பொருளை மனதால் தீண்டுவதும் பாவம் என்று சொல்லியிருக்கிறார் இல்லையா? இந்த பத்து ரூபாய் நோட்டை யார் தொலைத்து கஷ்டப்படுகிறார்களோ? நாம் இதை எடுத்து உரியவர்களிடம் சேர்த்தால் சந்தோஷப்படுவார்கள். எடு அந்த ரூபாயை!” என்றான்.

சோமு, “ராமு! இந்த ரூபாய் நோட்டைப் பார்த்தாயா? இதில் வெற்றிலை பாக்கு கறை இருக்கிறது. அதனால் இந்த நோட்டைத் தொலைத்தவர் வெற்றிலை பாக்கு போடும் பழக்கம் உள்ளவராக இருக்கும். வா தொலைத்தவரை தேடுவோம்“.

இருவரும் நடந்து கொண்டே சென்றனர். செல்லும் வழியில் ஒரு பாட்டி கையில் கோல் ஊன்றி தலையில் புடவையை வெயிலுக்கு மறைப்பாய் போட்டு மெல்ல மெல்ல நடந்து கொண்டிருந்தாள்.

ராமு, “சோமு! இந்தப் பாட்டியிடம் அவர் ஏதும் பணத்தைத் தொலைத்தாரா? என கேட்டுப் பார்ப்போம்“ என்றான்.

சோமு, “பாட்டி! நீங்கள் எதுவும் பணத்தைத் தொலைத்து விட்டீர்களா?“ என அந்தப் பாட்டியிடம் கேட்டான்.

பாட்டி தன்னுடைய சுருக்குப்பையை எடுத்துப் பிரித்துப் பார்த்தாள். அதில் காய்ந்து போன வெற்றிலை, கொட்டைப்பாக்கு, சுண்ணாம்பு டப்பி, புகையிலை எல்லாம் இருந்தது. அவள் வைத்திருந்த பத்து ரூபாய் நோட்டை மட்டும் காணவில்லை. 

பாட்டி, “தம்பி! நான் வைத்திருந்த பத்து ரூபாயைத் தொலைத்து விட்டேன். யார் எடுத்தார்களோ தெரியவில்லை! நான் எப்படி என் கிராமத்திற்கு செல்வேன். டவுண் பஸ்க்கு டிக்கட் எடுக்க காசு இல்லையே?“ என்றாள்.

சோமு, ”பாட்டி இந்த பத்து ரூபாய் நோட்டைப் பாருங்கள் இது உங்களுடையதா?“ என கேட்டான். 

பாட்டி அதைவாங்கி பார்த்துவிட்டு, “இது என்னுடைய பணம் தான் பேரா!“ என்றாள்.

ராமு, ”பாட்டி நீ சொல்வதை நாங்கள் எப்படி நம்புவது?“

பாட்டி, “நான் சற்று முன் அங்குள்ள வேப்பமரத்தினடியில் நிழலுக்கு உட்கார்ந்து சிறிது இளைப்பாறி விட்டு வெற்றிலை உலக்கில் வெற்றிலை பாக்கு சுண்ணாம்பு புகையிலை எல்லாம் போட்டு இடித்து வாயில் போட்டு விட்டு கிளம்பி வந்து விட்டேன். அப்போது சுருக்குப்பையில் இருந்த இந்த பணம் தவறி விழுந்திருக்கும்” என்றாள்.

“அப்போ அது உங்கள் பணம் தான்“ என்று ராமு கூற, பாட்டி இப்போது எப்படி என்னை நம்பினாய்? என கேட்டாள்.

“நானும் என் நண்பன் சோமுவும் வரும் போது அந்த வேப்பமரத்தினடியில் தான் இந்த பத்து ரூபாய் நோட்டை கண்டெடுத்தோம். மேலும் அந்த நோட்டில் வெற்றிலை பாக்கு கறை படிந்திருந்ததை கண்டோம். அதனால் அந்த முடிவுக்கு வந்தேன்“ என்றான்.

“நீங்க இரண்டு பேரும் புத்திசாலிகள்! மேலும் பிறர் பொருளுக்கு ஆசைப்படாதவர்கள்! நீங்க நல்லா இருக்கணும்!“

“நாங்க வர்றோம் பாட்டி. எங்க ஸ்கூலுக்கு மணியாச்சி. ஜாக்கிரதையா பார்த்து போயிட்டு வாங்க பாட்டி“ என்று கூறிச் சென்றனர் ராமுவும் சோமுவும்.







Rate this content
Log in