வெள்ளை மரம்
வெள்ளை மரம்
வெண்ணாடை உடுத்தி
விண்வெளி சென்றேன்.
மூச்சு திணறாது
முழு நிலவையும் சுற்றி திரிந்தேன்.
வெண்மை நிறைந்த மண்ணில்
சிறிதளவு ஈரப்பதமிருக்க
மண்ணுலகிலிருந்து கொண்டுவந்த
விதை ஒன்றை
அதனுள் புதைத்து வைத்தேன்.
நிலாவில் ஒருவேளை
பாட்டி வடை சுட்டால்
அதை குத்தி செல்ல நினைக்கும்
காகம்
அமர்ந்து காத்திருக்க
அவ்விதை மரமாகி உதவும் என்று நம்புகிறேன்.
வீட்டிற்கு வந்தவுடன்
எதிர்வீட்டில் தொலைநோக்கி வைத்திருந்த என் நண்பனிடம்
நிலவை இரவில்
அதனில் பார்க்க அனுமதி கேட்டேன்.
அவன் மறுத்து விட்டான்
ஆதலால் மொட்டை மாடியில் படுத்தவாறு
திறந்தவெளியை தினமும் பார்க்கிறேன்.
அன்றோடு ஆறு ஆண்டுகள்
கடந்து போய் விட்டது.
நிலவில் நான் புதைத்த விதை
இந்நேரம் மரமாகியிருந்தால்
இலை உதிர்த்திருக்கும்,
வெள்ளை வெள்ளையாக.
இன்று மீண்டுமொரு
இலை உதிர் காலத்தைக் கடக்க போகிறேன்.
இப்போது நான் என்னறையில்
என் கட்டிலில்தான் படுத்திருக்கிறேன்.
இரவின் இடைவெளியில்
மின்சாரம் போக
உடல் வேர்வையை உணர
ஜன்னலை திருத்தேன்
ஜொலித்துகொண்டே உள்வந்தது வெள்ளை சறகொன்று.
ஓர் வித இன்பத்தோடு
படியேறி மொட்டை மாடியை அடைந்து
நிலவை பார்த்தேன்.
அங்கு நிலவோடு
உறவாடிய படி
சாய்ந்து நிற்கிறது
இலைகளை இழந்த
வெள்ளை மரம்.
