கடவுள்
கடவுள்


பிஞ்சுவிரல்களால் தன்னை வணங்கும் குழந்தையை நோக்கி, தன் வேண்டுதல் யாவும் நிறைவேற பக்தியோடு பிரார்த்தனை செய்துகொண்டிருந்தார் கடவுள். வீட்டுப்பாடம் செய்யாத குழந்தைகளின் தாய் தகப்பனுக்கு விடிந்ததும் கடவுள் அளிக்கும் வரம்...
அக்குழந்தைகளின் கையெழுத்து. புறங்கைகளில் வழியும் ஐஸ்கிரீமை தானும் நக்கித் தின்ன வேண்டுமென கடவுள் வருவதாலேயே.. பாவம் குழந்தைள்.! இன்னொரு ஐஸ்கிரீம் கேட்கின்றன. குப்புறப் படுக்க குழந்தை திணறும் போதெல்லாம் “ஓ மை காட்” எனப் பதறும் கடவுள் இப்படியோ அப்படியோ விழுந்து அது சிரித்தவுடன் “காட் இஸ் கிரேட்” எனக் கண்களை மூடுகிறார்.
அவசர அவசரமாய் அலுவலகம் ஓடுபவன்/ள் மீது கருணைகொண்ட கடவுள் குழந்தையை அவன்/ள் மடியேற்றி நிறுத்தி நிதானமாக உச்சா போக வைக்கிறார். அம்மா மடியில் நான்தான் படுப்பேனென அடம் பிடிக்கும் குழந்தைகளிடம் 'இன்றைக்கு அவன் நாளைக்கு நீ" சொல்லச் சமாதானம் அடையும் குழந்தையின் மடியில்தான் என்றைக்குமே படுத்துக் கொள்கிறார் கடவுள்.