தாய் வடிவில் தமக்கை
தாய் வடிவில் தமக்கை


டேய்! வாங்கடா அது வருதுடா நம்ம போய் விளையாட்டுக் காட்டலாமா? என்று பாபு அழைத்ததும் அந்த தெருவில் உள்ள பையன்கள் அனைவரும் வெளியே வந்தனர்.
அந்தத் தெருவில் வாசுகியும் அவளின் தம்பி மாணிக்கமும் நடந்து வந்துக் கொண்டிருந்தனர். மாணிக்கம் மற்ற பிள்ளைகள் போன்று சாதாரணமானவன் கிடையாது. அவன் கடவுளின் குழந்தை. மற்றவரின் உதவியில்லாமல் அவனால் தன்னிச்சையாக இயங்க முடியாது.
தெருவில் உள்ள பையன்கள் அவனைப் பார்த்து சிரிப்பதும், அவனைப் போலவே சைகைகள் செய்வதும் என்று அவனை வைத்து விளையாடுவார்கள். ஒன்றும் அறியாத மாணிக்கம் அவர்களுடன் சேர்ந்து சிரிப்பான்.
இந்தச் செயல் தவறானது என்று அறிந்து கொள்ளாமல் பையன்கள் மாணிக்கத்திடம் தொடர்ந்து சேட்டை செய்து கொண்டிருந்தனர். மாணிக்கத்தின் அக்கா வாசுகி புத்திசாலியானவள்.
அவளுக்கு எப்போதும் இப்படி நடப்பது தெரியாது. இன்று தன் தம்பியுடன் வரும்போது அந்த பையன்கள் மீண்டும் சேட்டை செய்தனர். மாணிக்கத்தின் பின்னால் அவனின் சட்டையில் தகர டப்பாவைக் கட்டிவைத்து ஓட விட்டுச் சிரித்தனர்.
ஒன்றும் அறியாத மாணிக்கமும் அவர்களுடன் சேர்ந்து கைத்தட்டி சர் சிரித்துக் கொண்டே இருந்தான். இதைப் பார்த்துக் கொண்டிருந்த வாசுகிக்கு அழுகை வந்தது. அவள் இந்தச் சிறுவர்களை எவ்வாறு தடுப்பது? என் று சிந்தித்துக் கொண்டே தம்பியை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு நடந்து சென்றாள்.
மறுநாள் காலையில் வாசுகி அந்தத் தெருவிலுள்ள அனைத்து சிறுவர்களையும் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்றாள். சிறுவர்களை அமரச் செய்தாள். அவள் வீட்டிலுள்ள டிவியில் ஒரு படம் போட்டு அச்சிறுவர் களைப் பார்க்கும்படிக் கூறிவிட்டு அனைவருக்கும் தேநீர் கலக்க உள்ளே சென்றாள்.
வாசுகி டிவியில் போட்ட படத்தில் மாணிக்கம் போலவே ஒரு சிறுவன் இருப்பதையும் அவன் படும் துன்பங்களையும் பார்த்து அனைவரின் கண்களிலும் கண்ணீர் வந்தது. படமும் முடிந்தது. வாசுகி அனைவருக்கும் தேநீர் கொடுத்தாள். படம் நன்றாக இருந்ததா? என்று வாசுகி கேட்டாள்.
அனைவரும் அழுது கொண்டே அக்கா எங்களை மன்னிச்சுடுங்க நாங்க தப்பு பண்ணிட்டோம், இனிமே மாணிக்கத்தை விளையாட்டுப் பொருளா பார்க்காம எங்க ப்ரண்டா ஏத்துக்கிட்டு அவனுக்கு உதவி செய்வோம் என்றனர்.
வாசுகி புன்னகையுடன் நம்ம எல்லாருக்கும் நாம் செய்தது, செய்துகிட்டு இருக்கறது, செய்யப்போவது எல்லாம் தெரியும். ஆனா மாணிக்கம் அப்படி இல்லப்பா அவனுக்கு மூன்று காலமும் ஒன்றுதான் அவனுக்கு என்ன செய்யறம்னுகூட தெரியாது.
அவன் கடவுளோடு குழந்தைபா நீங்க எல்லாம் அவன்கூட நல்லவிதமாக பழகினா அதுவே அவனுக்கு சந்தோஷத்தை குடுக்கும் செய்விங்களா என்றாள்.
அனைவரும் குனிந்த தலையுடன் சரிக்கா ஏன்று கூறிவிட்டு வீட்டிற்குச் சென்றனர்.
நீதி: தாய் மட்டுமே தாயல்ல
தமக்கையும் தாயே !!!