நேர்மை
நேர்மை


கையில் என்ன வைத்திருக்கிறாய்? என்றாள் சரஸ்வதி.
மழையில் இந்த நாய் நனைந்து கொண்டிருந்தது அம்மா.
இது பெண்நாய். வீட்டிற்கு வேண்டாம்.
ஏன்?
நீங்களும் பெண்தானே?
சுள்ளென அம்மாவிற்கு கோபம் வந்தது.
வேண்டாம் என்றால் விடவேண்டியதுதானே! அப்பாவிடம் சொல்லி நல்ல சாதி நாயை வாங்கித்தரச் சொல்றேன்.
எல்லோரும் சாதி நாயை வாங்கி வைத்தால் இந்த நாயை யார் வளர்ப்பார்களாம்…..
சரி! அவுட்அவுஸ்சில்தான் வச்சக்கணும். அதுக்கு ஃபெடிக்ரியெல்லாம் கேட்கக்கூடாது. அதெல்லாம் உயர்ந்தசாதிநாய்தான் சாப்பிடணும். இதுக்கு பழையசோறு போதும்.
அம்மா! நீங்க சொல்றது எப்படி இருக்கு தெரியுமா? பணக்காரன் தான் நல்ல உணவு சாப்பிடணும், நல்ல பள்ளியில் படிக்கணும், கரரில் போகணும், ஏழை நடந்துதான் போகணும், கூழ்தான் குடிக்கணும், அரசு பள்ளியில்தான் படிக்கணும்னு சொல்றமாதிரி இருக்கு.
டேய்! நானே அரசு பள்ளி ஆசிரியர்தானேடா!
அப்ப என்னை அரசு பள்ளியில் சேர்க்ககவேண்டியதுதானே!
ஏண்டா! காமராசர் வம்சம்னு மனசில் நினைப்பா? பத்து இலட்சம் கொடுத்து இந்த வேலை வாங்கி இருக்கேன். எதுக்கு? உன்னை நல்ல பள்ளியில் படிக்க வைக்கணும்னுதான்.
அப்ப உங்க பள்ளி நல்ல பள்ளி இல்லையா? எனக்கு ஏன் சொல்லித் தர மாட்டீங்களா?
யாருடா உனக்கு இதையெல்லாம் சொல்லித்தந்தது?
எங்க தமிழாசிரியர்தான். இலஞ்சம் வாங்கக்கூடாதுன்னு உறுதியா இருந்து தனியார் பள்ளியில் வேலை பார்த்து வருகிறார். உங்களைமாதிரி இல்லை….
அழுத்தமாகச் சொன்ன மகனை உற்றுப் பார்த்தபடி ராஜா..இது 2019டா! காந்தி காலமோ,காமராசரோ,கக்கன்காலமோ இல்லைடா இது..காலத்துக்கு ஏற்றமாதிரி மாறக் கத்துக்கோ! உங்க பள்ளிக்கு நான் வந்து பேசறேன். அந்த ஆசிரியரிடம் பேசவேண்டும்…..
உங்களை மாதிரி என்னகேட்டாலும் பணம் தருகிற மனப்பாங்கு என்று மாறுமோ அன்றுதான் இலஞ்சம் ஒழியும்..இல்லையா அம்மா!…நீங்கள் எப்படி அம்மா உங்கள் மாணவர்களுக்கு உண்மையுடன் நட என போதிப்பீர்கள் என சிரித்தபடி கேட்ட மகனைப் பார்க்க திடமின்றி வெட்கத்தில் தலைகுனிந்தாள் சரஸ்வதி.