ஆறுதல்
ஆறுதல்
'வித்யா' மேல்நிலைப்பள்ளி.
காலை நேர வகுப்புகளின் இரைச்சலில் , அலை கடலாய் இருந்தது.
ஒன்பதாம் வகுப்பு 'அ' பிரிவில் கணக்கு வகுப்பு சற்று பரபரப்பாய்...
கூடவே, படபடப்பாய்.
காலாண்டு தேர்வின், கணக்கு தேர்வுத்தாள் விடை சரிபார்க்கப்பட்டு வகுப்பில் ஒவ்வொருத்தருக்கும் 'அழைத்து ' அளிக்கப்பட,
எல்லோர் எதிர்பார்ப்பும் முதல்நிலை யாருக்கு என ?
வழக்கம் போல் அனைவரின் விழிகளும் அவளின் மேல்..
'ஜெயலட்சுமி.' பெயரைக் கூப்பிட்டதும் சற்றே, அவள் தயங்க...
ஆசிரியை அன்பரசியிடமிருந்து மீண்டும் அழைப்பு.
கையில் " ஜெயலட்சுமி " யின் விடைத்தாள்.
முகத்தில் சற்று கோபம்.
" ஜெயா.. மதிப்பெண் 95 " என அறிவித்தவர், அவளை அருகில் அழைக்க,
தடுமாறியவளாய் ஜெயலட்சுமி.. ஆசிரியை அருகில்.
" நீ ஏன் சதம் எடுக்கலை? அதுவும், ஒரு அஞ்சு மதிப்பு வினா.. இலகுவான வினா. அதுக்கு ஏன் நீ விடை அளிக்கலை? நேரம் வேற போதுமானதா இருந்துச்சே! " ஆசிரியை குரல் உயர்த்தவே,
" அ..அது , மிஸ்..எனக்கு.." குரல் கம்மியது ஜெயலட்சுமிக்கு.
வகுப்பு முழுதும் ஒரே அமைதி மயம்.
" இந்த தடவை ஒரு மார்க் வினாக்கள் பத்துமே மிகக் கடினம். அதிலேயே ஜெயா பத்துக்கு பத்து வாங்கிட்டா. எப்போதும்போல முதல் மதிப்பெண்." சொன்னவர்,
ஒரு வினாடி இடைவெளி விட ,
கைத் தட்டல்களால் வகுப்பே அதிர்ந்தது.
தொடர்ந்து அவளை அருகில் அழைத்த ஆசிரியை,
" நீ ..உணவு இடைவேளையில என்னை நேரில் வந்து பாரு" குனிந்து சன்னமாய்க் கூற,
ஆசிரியை குரலில் தெரிந்த கடுமையில் 'சுருக்' கெனப் பதற்றம் பற்றிக்கொண்டது ஜெயலட்சுமிக்கு.
உணவு இடைவேளை வரக் காத்திருந்தவள்,
வேகமாய் ஓடி ஆசிரியர் அறையை அடைந்தாள்.
அறை வாசலிலேயே தயங்கி நின்ற ஜெயாவை,
" உள்ளே வா. ம்., சொல்லு. அந்த வினாவிற்கு விடை தெரிந்தும் நீ ஏன் எழுதலை? "
" அ.. அது ,அது ஸாரி மிஸ். "
பயத்தில் நாக்கு ஒட்டிக்கொண்டது அவளுக்கு .
" ம்..சொல்லு. என்ன காரணம்? " குரல் உயர்த்திய ஆசிரியைக்
கும்பிட்ட ஜெயலட்சுமி,
" என்னைய, மன்னிச்சிடுங்க மிஸ். எனக்கு ஒரு மதிப்பெண் வினாப் பகுதியில, ஐந்து வினாவுக்கு பதில் தெரியலை . ஆனா, தேர்வறையில இருந்த நிர்மலா மிஸ் எனக்கு மட்டும் பதில் சொல்லி என்னைய எழுத வைச்சிட்டாங்க. அதனால , எனக்கு நல்லா தெரிஞ்ச அஞ்சு மதிப்பெண் வினாவுக்கு விடை எழுத, என் மனசாட்சி இடம் கொடுக்கல . அதான் விட்டுட்டேன். நீங்க எப்போதும் சொல்லுவீங்களே.. நமக்கு உரிமையில்லாததுக்கு, நாம உரிமை கோரக்கூடாதுன்னு. அதான் மிஸ்" அழுத ஜெயலட்சுமியை,
கட்டிப்பிடித்து முத்தமிட்ட ஆசிரியை அன்பரசி,
" உன்னை நினைச்சா எனக்கு ரொம்பப் பெருமையா இருக்கு. உன் நேர்மையை நினைச்சு மகிழ்ச்சியாயிருக்கு. எதிர்க் காலத்துல நீ ரொம்ப பெரிய ஆளா வருவே. உன் படிப்புனால மட்டுமில்ல, உன்னுடைய
நேர்மையான எண்ணங்களால."
அணைத்து, ஆறுதல் சொன்னார், கண்களை மறைத்த கண்ணீருக்கு இடையே ஆசிரியை அன்பரசி.
