உண்மை உறங்கும்
உண்மை உறங்கும்
ஆணவம் ஆளும் இராவண பூமியில் மனிதம் மரித்து உரிமைகளைப் பறித்து, உடல்கள் துருப்பேறி - தமிழ் சடலங்கள் ஒப்பாரி - செவில் நனைக்கும் போதும் ஊமையான உலகில் எடுப்பார் கைப் பிள்ளையாய் உண்மை உறங்கும் மரணத் தாலாட்டு - ஈழ மயானத்தில் கேட்டு! விண்ணை வலம் வரும் விந்தைப் பெண்டிரை வியக்கும் உலகில், விந்தைச் செலுத்த வெறி கொண்டலையும் விடலை வாலிபர்களிடமிருந்து விடுதலை வேண்டிடும் தையல்களின் அபலக் குரல்கள் மனதைத் தைக்கும் போதும் ஊமையான உலகில் உண்மை உறங்கும் ஓடும் பேருந்திலும் காட்டுப் புதரிலும்! நீதிமன்றமும் நாடாளுமன்றமும் நாவாளுமன்றமான பின் வாதாடுவது கண்ணகியே ஆயினும் நீதிபதி பாண்டிய நெடுஞ்செழியனே ஆயினும் தீர்ப்புகளை நிர்ணயிப்பது கோப்புகளல்ல கோப்பைகள்! உறங்கும் உண்மை விழித்தெழும் நாள் வெகு தொலைவிலில்லை... கண்ணீர் தெளித்தும் செந்நீர் தெளித்தும் எழுந்திடாத உண்மையை எழுப்பிடும் வல்லமை கொண்டதுன் இடக்கை விரல் மை!