CA Manimaran Kathiresan

Children Stories

4.7  

CA Manimaran Kathiresan

Children Stories

பாட்டி வைத்தியம்

பாட்டி வைத்தியம்

6 mins
406



பாட்டி வைத்தியம்

தனக்கு முதல் குழந்தை பிறந்து ஆறுமாதம் முடிந்த நிலையில் தன்னுடைய மனைவி மற்றும் குழந்தையை அவனுடைய சொந்த ஊரான பரமக்குடியிலிருந்து தான் வேலை செய்யும் ஊரான சென்னைக்குக் கூட்டிச் செல்ல வந்திருந்தான். அவனுக்குள் ஏகப்பட்ட மகிழ்ச்சி. தன்னுடைய குழந்தையுடன் நேரங்களைக் கழிப்பது பற்றி கற்பனை வளர்த்துக் கொண்டவனுக்கு இதோ இந்நாள் அவனுக்கு ஒரு பொன்னாள் போலத் தோன்றியது. தன் மனைவி மற்றும் குழந்தையைக் கூட்டிச் செல்வதற்கான அனைத்து வசதிகளையும் முன்னேற்பாடு செய்திருந்தான். அவனுடைய கனவுகள் பழித்தது. அவன் அவனுடைய குடும்பத்தோடு சென்னையில் வசிக்கும் வீட்டிற்குக் காலையில் வந்து சேர்ந்தான். வீட்டிற்கு தன் குழந்தையைக் கூட்டிவருகின்றோம் என்பதனால் அவனுடைய வீடு முழுவதும் வேலையாட்கள் வைத்து சுத்தம் செய்யப் பட்டிருந்தது. சாதாரணமாக வீட்டைக் கழுவி மட்டும் விடவில்லை. முழு வீட்டையும் அங்கிருந்து அத்துணைப் பொருட்களையும் துடைத்து துப்பரவு பணி மேற்கொண்டதைக் கண்டு அவனுடைய மனைவி ஆச்சரியம் கொண்டாள். அவன் மனைவி நானும் ஊரிலிருந்து வரும் போதலாம் செய்யாத இந்த தூய்மைப் பணி இப்பொழுது மட்டும் எதற்காக எனச் சிறு கோபத்துடன் பேச்சை முடித்துக் கொண்டாள். அதற்கோ அவன் அட பைத்தியமே இந்த தூய்மைப் பணி நமக்காக இல்லை நம் குழந்தைக்காக. நாம் இருந்தவரை ஏதும் பிரச்சினை இல்லை. இருப்பினும் தன் குழந்தைக்கு இச்சூழலில் பழகுவது கடினம்தான். ஆகையால் தான் என்றான். அவளும் சமாதானம் ஆனதுபோன்று முனங்கிக் கொண்டே தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள். அவனோ தன்னை மறந்தவாறு தன் குழந்தையிடம் விளையாடிக் கொண்டிருந்தான். அவனுடைய குழந்தையைக் காண அவனுடைய நண்பர்கள் வீட்டிற்கு வந்த வண்ணம் இருந்தார்கள். அவனோ தன் நண்பர்களிடமும் தன் குழந்தையிடமும் மாறி மாறி நேரத்தைக் கழிப்பதைக் கண்டவள். சிறிது சத்தமாக என்னங்க இப்பொழுது மணி ஒன்பதரை ஆச்சு நீங்க இன்னும் குளிக்கவில்லை, உங்களுக்கு இன்னும் நேரம் போவது தெரியவில்லையா அலுவலகத்திற்கு போகனுமேயென்றால். அதைக் கேட்டவன், தான் இன்றும் அலுவலகத்திற்கு விடுமுறை எடுத்ததாகக் குறைந்த சத்தத்தில் அவளுக்கு கேட்காதவாறே தன் வாய்க்குள் முனங்கிக் கொண்டிருக்கையில், அவனின் மனைவி என்ன சொல்கிறார் என்று கேட்டவாறே அவனின் பக்கம் வந்து நின்றுகொண்டு அவனின் நோக்கத்தை அறிந்து கொண்டால். இருப்பினும் அவனோ அலுவலகத்திற்குப் போனால் வீடு வர நேரமாகும் ஆகவே இன்னொருநாளும் விடுமுறை எடுத்ததாகக் கூறினான். அவளும் தன் கணவனின் ஆசையைக் கண்டு மெச்சிச் சிறு புன்னகையுடன் அவனை மோகப்பார்வையிட்டு அடுப்பாங்கரை சென்றால்.


தான் தன் குழந்தையைக் கூட்டி வருவதை முன்கூட்டியே தன் நண்பர்களிடமும், அக்கம் பக்கத்தில் வசிப்பவர்களிடமும் சொன்னதால் அவனுடைய குழந்தையைப் பார்க்க ஒருவர் பின் ஒருவராக வந்து கொண்டிருந்தார்கள். அவனுடைய குழந்தையை அவனது நண்பர்கள் தூக்கி வைத்துக் கொண்டு குழந்தையைக் கொஞ்ச ஆரம்பித்தார்கள். அக்குழந்தை அவனைப் போலவே இருப்பதாய் சொல்லச் சொல்ல அவனுக்குள் ஒரு மிகப்பெரிய பேரானந்தம் பரவியது. அவனுக்குள்ளே அப்படியொரு இன்பம் அவன் வாழ்நாளில் பார்த்திடாததொரு இன்பம் என்றே சொல்லலாம். இப்படியே அவனுடைய நேரம் கடந்தது. அவனுக்குக் காலை உணவு, மதிய உணவு இவையெல்லாம் இருந்தும் அவனுக்கு எடுபடவில்லை. காரணம் மகிழ்ச்சியின் உச்சம். இவ்வாறே அன்று மாலை நேரம் வந்தது. சரியாக ஆறு மணியளவில் அவனுடைய குழந்தை அழுக ஆரம்பித்தது. அவன் மனைவியும் தன் குழந்தை வழக்கம்போல பசிக்குத்தான் அழுகிறது என்று எண்ணி குழந்தைக்குத் தாய்ப்பால் கொடுத்துப் பசியாற்றிவிட்டு வந்து மீண்டும் அவனிடம் குழந்தையைக் கொடுத்துவிட்டு உட்கிருந்திருந்தாள். ஆனாலும் குழந்தை அழுகையை விட்டபாடில்லை. அவனுக்கும் அவனது மனைவிக்கும் ஏன் இப்படி அழுகிறான் என்பது புரியவில்லை. இதைப் பார்த்த அவனுடைய நண்பனின் மனைவி ஒருவேளை குழந்தைக்கு வயிற்று வலியாகக் கூட இருக்கலாம் என்றாள். ஆகவே அதற்கான மருந்தைக் கொடுங்கள் என்று அறிவுரை சொல்லிவிட்டு வீட்டிலிருந்து நகர்ந்தார்கள். உடனே அவனோ தன் மனைவியை அழைத்து வயிற்று வலிக்கு மருந்து கொண்டு வந்ததை ஞாபகப் படுத்தினான். ஆனால் அவனுடைய மனைவியோ சிறிது நேரம் பொறுத்திருந்து பார்ப்போம் என்றால். அதே நேரத்தில் அவனது குழந்தையும் அழுகையை விட்டதாகத் தெரியவில்லை. இவனுக்கோ ஒருவித பயம் வந்துவிட்டது.


அவன் தன்மனைவியை அழைத்தான், வயிற்றுவலி மருந்தைக் கொடுக்குமாறு அறிவுறுத்தினான். அவளும் அதற்கேற்றவாறு மருந்தைச் சரியாக ஏழு மணியளவில் கொடுத்தாள். குழந்தையும் வயிற்று வலி மருந்தைச் சாப்பிட்ட அடுத்த அரை மணி நேரத்தில் தூங்கி விட்டது. இதைப் பார்த்ததும் அவனுக்கும் அவளுக்கும் ஒருவகையில் நிம்மதி அடைந்தாலும், குழந்தையின் பக்கத்திலேயே குழந்தையை நோட்டமிட்டுக் கொண்டு அமர்ந்திருந்தான். தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சில மணித்துளிகளில் மீண்டும் அழுகத் தொடங்கியது இருப்பினும் தூக்கத்திலிருந்து மீளவில்லை. இவ்வாறிருக்க இவனுக்கும் ஒன்றும் புரியவில்லை செய்வதறியாது அவனுடைய மனைவியை அழைத்து இவ்வாறு என்றாவது செய்திருக்கிறானா என்று வினவினான். அவளுக்கும் இது புதியதாகவும் மேலும் புதிராகவும் இருந்தது. இதைப் பார்த்த அவனுக்குள் ஒருவித பயம்.

 

அவனுடைய அம்மா அவனிடம் சொன்னது ஞாபகம் வந்தது. அவனுடைய அம்மா இன்னும் ஆறுமாத காலம் நம்வீட்டில் இருக்கட்டும் பிறகு நானே கூட்டிவந்து விடுகிறேன். உங்களுக்கு அங்கே உதவவோ அல்லது குழந்தையைக் கவனிக்கவோ பெரியவர்கள் இருக்க வேண்டும். என்னால் தற்பொழுது வந்து இருக்க முடியாது. ஆகவே சிறிது காலம் பொறுத்து போ என்ற அறிவுரை அவனைத் தட்டியெழுப்பியது. அவனுக்கு இதுவே முதல் குழந்தை மேலும் அவள் மனைவிக்கும் அக்காள் தங்கை குழந்தைகளை வளர்த்த அனுபவம் இல்லை காரணம் இவள் ஒருவளே அவள் வீட்டின் வாரிசு. இவற்றையெல்லாம் தாண்டி, அம்மாவை ஒருவகையில் சமாதானப் படுத்தி, அவர்களைச் சென்னைக்கு அழைத்து வந்தான். அழைத்து வந்த முதல்நாளே இவ்வாறு நடப்பதால் அவனுக்குள் மேலும் மேலும் மிகப்பெரிய பயத்தை உண்டு பண்ணியது. இவ்வாறு நடந்தது என்பதை அவன் அம்மாவிடம் சொல்வதற்குத் தயங்கி நின்றான் இருப்பினும் வேறு வழியில்லாமல் நடந்தவற்றை தன் தாயிடம் கூறுவதற்காக தன்னுடைய தொலைப்பேசியில் தொடர்பு கொண்டான்.


அம்மாவின் தொலைபேசி எண்ணுக்கு அழைத்து தன் அம்மாவிடம் நடந்ததைக் கூறினான். தன் அம்மா பயணப்பட்டு வந்ததால் குழந்தைக்கு உடல்வலியாக இருக்கலாம் எனவும் , அதைப்பற்றி கவலை வேண்டாம் எனக்கூறி தொலைபேசியை தன் மருமகளிடம் கொடுக்கச் சொன்னாள். இவனும் ஒருவித கலக்கத்துடனும், குற்றம் புரிந்துவிட்டோமோ என்ற மன உளைச்சலிலும் மேலும் தன் கேள்விக்கு விடை கிடைக்காதவனுமாய் தொலைபேசியை தன் மனைவியிடம் கொடுத்தான்.


அவன் மனைவி தொலைபேசியை வாங்கியவுடன், அவனுடைய தாய் சில கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தாள். குழந்தை சரியாகப் பால் குடித்தானா, மலம் சரியாகக் கழித்தானா, சிறுநீர் சரியாகக் கழித்தானா இப்படியாக சில கேள்விகளுக்குப் பதிலும் சொன்னாள். மேலும் குழந்தையை மற்றவர்கள் தூக்கினார்களா என்றாள் அவள் அம்மா, அவளும் ஆமாம் அவருடைய நண்பர்கள் வந்ததாகவும் மேலும் அவர்கள் குழந்தையைத் தூக்கி வைத்து விளையாண்டதாகவும் சொன்னாள். அதன்பின் அவனுடைய அம்மா குழந்தையைத் தூக்கினால் அழுகிறானா இல்லை படுத்திருக்கும் போதே அழுகிறானா என்றாள். அவளும் தன் குழந்தை தூக்கத்திலிருக்கும் போதே அழுகிறான் எனவும் இருப்பினும் தூக்கத்திலிருந்து விலகவில்லை என்றும் கூறினாள். இதைக் கேட்டதும் அவளுடைய அம்மா குழந்தைக்குக் கழுத்தில் உரை (சுளுக்கு) விழுந்திருக்கிறது என்று கூறினாள். குழந்தையைத் தூக்கத் தெரியாதவர்கள் தூக்கினால் இப்படி நடக்க வாய்ப்புண்டு என்றும் சொன்னாள். ஆகவே குழந்தையைத் தூக்கத் தெரியாதவர்களிடம் தூக்கச் சொல்ல வேண்டுமென்றும் அறிவுரை கூறினாள். மேலும் யாரேனும் வயதானவர்கள் இருந்தால் அவர்களிடம் கூட்டிச் சென்று உரை (சுளுக்கு) எடுக்குமாறு கூறினாள்.


அவனுக்கோ பலநிமிடமாக அவர்களின் உரையாடல் தொடர்ந்ததால் என்ன ஏதென்று தெரியாமல் மனதளவில் பலவித கேள்விகளுடன் தனக்குத்தானே கேட்டுக் கொண்டு பதிலும் சொல்லிக் கொண்டிருந்தான். தன் மனைவி தொலைபேசியை துண்டித்தவுடன் சிறிதும் தாமதிக்காமல் என்ன சொன்னார்கள் என்று வினவினான். அவளும் தன் மாமியார் சொன்னதைச் சொல்லி தன் கணவரிடம் யாரேனும் வயதானவர்கள் இருக்கிறார்களா என்று வினவினான்.

அவனுக்கு உடனே ஞாபகம் வந்தது. அவன் அவனது நண்பனுக்கு தொலைபேசியில் அழைத்து, நண்பா உன் வீட்டில் உன்னுடைய பாட்டி இருக்கிறார்களா என்றான். அதற்கு மறுமுனையில் அவன் இல்லையடா ஏன் தீடிரென என் பாட்டியைப் பற்றிக் கேட்கிறாய் என்றதும், அவன் நண்பன் எனக்குத் தெரிந்து நாங்கள் இதுவரை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றே பார்த்திருக்கிறேன் மாறாக என் பாட்டியும் இதுபற்றி சொன்னதில்லை நானும் கேள்விப் பட்டதில்லை என்றான். எனக்குத் தெரிந்து நீ உடனடியாக மருத்துவமனைக்குக் கூட்டிச்செல் என்று சொன்னதோடு மட்டுமில்லாமல் குழந்தைகளுக்கான மருத்துவமனை எங்கு உள்ளது என்றும் சொன்னான்.


அவனும் அவன் மனைவியும் தன் குழந்தையை மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றனர். மருத்துவமனையில் நல்ல கூட்டம். மருத்துவரை உடனடியாக பார்க்க வேண்டுமெனவும் தன் குழந்தை அழுது கொண்டே இருக்கிறதென்றும் செவிலியரிடம் கெஞ்சிக் கூத்தாடி உடனே மருத்துவரைப் பார்ப்பதற்கு வழி செய்தான்.

தன் குழந்தையை மருத்துவரிடம் காட்டினர். அவர் இரண்டு மூன்று கேள்விகள் கேட்டுவிட்டு பிறகு மூன்று விதமான மருந்துகள் எழுதிக் கொடுத்துவிட்டு மூன்று நாட்கள் கழித்து வாருங்கள் அதுவரை இந்த மருந்தைத் தொடர்ந்து எழுதியபடி தவறாமல் கொடுங்கள் என்றார். தன் குழந்தைக்கு என்னவென்று கேட்பதற்குள்ளாகவே அவர் மற்றொருவரை அழைத்துவிட்டார். ஆக எனக்கு மருத்துவரிடமும் விடை கிடைக்கவில்லை. அவன் குழந்தைக்கு அம்மருந்தைக் கொடுத்தான், கொடுத்த சிறிது நேரத்தில் அக்குழந்தை தூக்கத்தில் ஆழ்ந்தது. அக்குழந்தையின் வலியை மறைக்கும் வண்ணம் அம்மருந்து இருந்ததாகவே கருதினான்.

இவற்றையெல்லாம் பார்த்துவிட்டு அவனுக்கு அவனுடைய பாட்டியின் ஞாபகம் வந்தது. ஆமாம் அவனுடைய பாட்டி கைவைத்தியத்தில் தேர்ந்தவள். அவன் ஊரில் எந்த குழந்தைக்கு உரை விழுந்தாலும் அவன் பாட்டியிடம் கூட்டிச் செல்வார்கள். அவனது பாட்டியோ சற்றும் தாமதிக்காமல் அக்குழந்தையை வாங்கி உடனே வைத்தியம் பார்த்துவிடுவாள். ஆமாம் எனக்குத் தெரிந்து எந்தக் குழந்தைக்கும் சுளுக்கை எடுக்காமல் கொடுத்ததில்லை என் பாட்டி.

அவன் பாட்டியிடம் வரும் குழந்தைக்கு வைத்தியம் பார்ப்பதற்கு முன்னர், குழந்தையைக் கொண்டுவந்தவர்களிடம் 1 ரூபாய் அல்லது 5 ரூபாய் காணிக்கை வாங்கி அந்த காணிக்கையை என் பாட்டியின் குல தெய்வமான பாகம்பிரியாளை வேண்டி முடிந்து வைத்துவிடுவாள். அப்படி வாங்கும் எல்லா காணிக்கையும் அக்கோவிலுக்கே சேரும் மாறாக என்பாட்டி அதை எடுத்துச் செலவிடமாட்டாள் மேலும் பார்க்கும் வைத்தியத்திற்கும் பணம் வாங்க மாட்டாள்.

தன் குல தெய்வத்திற்குக் காணிக்கை முடிந்ததும், தன் வைத்தியத்தைத் தொடங்குவாள். தொடங்கியதிலிருந்து அவ்வைத்தியம் முடியும்வரை அவள் வாயிலிருந்து பாகம்பிரியாளின் நாம வழிபாடு வந்து கொண்டேயிருக்கும்.

முதலில் அக்குழந்தையை சொளகில் போட்டு இந்த பக்கம் அந்த பக்கமெனப் பக்குவமா உருட்டியெடுப்பாள் அந்த சொளகில் குழந்தையை உருட்டும் பொழுது அக்குழந்தையின் அழுகை மிக வேகமாக இருக்கும் இருப்பினும் சிறிதும் அதைச் சட்டைசெய்யாமல் தன் வைத்தியத்தில் முழு கவனத்தையும் வைத்திருப்பாள்

இவ்வாறாக சொளகில் உருட்டப்பட்ட குழந்தை சிறிது நேரத்தில் தன் அழுகையை விட்டுவிட்டு தொட்டிலில் ஆட்டியதுபோல உறங்குவதற்ஙக்ஷகே தயாராகும். அதற்கடுத்த படியாகக் குழந்தையின் இரு கால்களை மட்டும் பிடித்து குழந்தையை தலைகீழாக தன் கையின் மூலமாகத் தொங்கவிட்டு அவளது வைத்தியத்தை ஆரம்பிப்பாள். அப்படிச் செய்தவுடன் அக்குழந்தை தன் வாயை முன்பைவிட மிக அதிகமாகத் திறந்து கூச்சலிடும். இப்படியாக ஒரு மூன்றுதடவை செய்து அக்குழந்தையின் உரையை நீக்கி விடுவாள் என் பாட்டி. இவற்றையெல்லாம் பார்க்கும் போது பெருமையாகவும் அதே சமயம் பயமாகவும் இருக்கும்.

என்பாட்டி இப்படிப்பட்ட பல கைவைத்தியங்களை நாங்கள் யாரும் கற்றுக் கொள்ளவில்லை. என் அம்மா சிறிதளவு கற்றுக் கொண்டாலும் முழுவதுமாக கற்றுக் கொள்ளவில்லை. இன்று என் பாட்டியிடம் கற்றுக் கொண்டவர்களில் சிலர் இன்றளவும் இவ்வைத்தியத்தைச் செய்தாலும் தன் குடும்பத்தில் ஒருவர்கூட இப்படிப்பட்ட கைவைத்தியத்தை கற்றுக் கொள்ளவில்லை என்ற ஏக்கம் அவனிடம் தோன்றியது. அவ்வாறு கற்றுத் தேர்ந்திருந்தால் இன்று நானே என்குழந்தைக்கு இச்சுளுக்கை எடுத்திருப்பேன் மாறாக நானும் மருத்துவரை அணுகி மருந்து கொடுத்துக் கொண்டிருக்கிறேன் என்று வருத்தப்பட்டான். இன்றைய சூழ்நிலையில் எனது பாட்டியிருந்திருந்தால் கண்டிப்பாக அவ்வைத்தியக் கூறுகளை கற்றுத் தெரிந்திருப்பேன் ஆனால் அது சாத்தியமற்றது. ஏனெனில் அவனது பாட்டி கடந்த இரண்டு மாதங்கள் முன்பே காலமானார். தன் பாட்டியை தன்னுடைய நினைவலையில் அசை போட்டுக் கொண்டே அவனுடைய குழந்தையின் அருகிலேயே அவனையும் அறியாமல் தூங்கினான்.

இன்றைய சூழ்நிலையில் நாம் நம் பாரம்பரியத்தை மறந்துவிட்டோம். மாறாகப் பயத்திற்கே நம்மை விலை பேசி விற்று விட்டோம்.

நமக்கு நமது பாரம்பரிய வைத்தியமான கைவைத்தியம், சித்த மருத்துவம் எல்லாம் நம்மைவிட்டே நீங்கிவிட்டது. எதற்கும் நாம் மருத்துவரை அணுகி அவர் தரும் மருந்தைச் சாப்பிடப் பழகிக் கொண்டோம்.

நம் பாரம்பரியத்தின் பழமொழியான உணவே மருந்தை மறந்து மருந்தையே உணவாக உட்கொள்ளும் நிலைமை வந்துவிட்டது.

பாட்டியின் கைவைத்தியம் நம் பாரதத்திற்குத் தேவை இதுவே சத்தியம்

மணிமாறன் கதிரேசன்



Rate this content
Log in