STORYMIRROR

நிலவின் தோழி கனி

Children Stories Comedy Inspirational

4  

நிலவின் தோழி கனி

Children Stories Comedy Inspirational

வழுக்கைக்கு மருந்து

வழுக்கைக்கு மருந்து

2 mins
292

அரசனுக்கு வயதாகிக் கொண்டிருந்தது. தலைமுடி கொட்டி வழுக்கை அதிகமாகிக் கொண்டிருந்தது. அரசனுக்கு தன் கம்பீரம் குறைந்து விடும் என்ற கவலை அதிகமாகிப் போய் ஒரு நாள் அரசவைத் தலைமை மருத்துவனிடம் நிவாரணம் கேட்டான்.


தலைமை மருத்துவன் "மன்னா! இதற்கு மருந்தே கிடையாது" என்று உண்மையைச் சொன்னான். அரசனுக்கு அந்த பதில் பிடிக்கவில்லை. கோபமடைந்தான். ஆத்திரம் தலைக்கேறி தலைமை மருத்துவனை சிறையில் அடைக்குமாறு உத்தரவிட்டான்.


ஊரில் இருக்கும் அனைத்து சிறந்த மருத்துவர்களையும் வரவழைத்தான். ஒரே வாரத்தில் தன் பிரச்சனைக்குத் தீர்வு கண்டு பிடிக்குமாறு பணித்தான்.


மருத்துவர்கள் அனைவரும் கூடி விவாதித்தனர். அரசனிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்றுதான் தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒரு துடிப்பான இளைஞன் இருந்தான். பிரச்சினைக்குத் தன்னிடம் தீர்வு இருப்பதாகக் கூறினான். அனுபவம் முதிர்ந்த வயதான மருத்துவர்கள் கூட்டத்தில் இருந்தனர். அவனைப் பார்த்து சிரித்தனர். "வழுக்கைக்குத் தீர்வா? போய் வேறு வேலை இருந்தால் கவனியப்பா" என்று கூறினர்.


நாள் செல்லச் செல்ல அவர்களுக்கு அரசனிடமிருந்து தப்பிக்கும் வழி தெரியவில்லை.


அரசனை இந்த நிலையில் சந்தித்தால் கண்டிப்பாகத் தலைமை மருத்துவனுக்கு நேர்ந்த கதிதான் தமக்கும் நடக்கும் என்று எல்லோருக்கும் புரிந்தது. கதி கலங்கிக் கொண்டிருந்தார்கள். அப்போது இளைய மருத்துவன் திரும்பவும் "என்னை நம்பினால் நம் எல்லோருக்கும் விடிவு நிச்சயம்" என்று கூறினான்.


வேறு வழியில்லாமல் அனைவரும் அவன் வழியில் செல்ல ஒத்துக் கொண்டார்கள். அவனோ, மருந்தை நேரடியாக அரசனிடம்தான் தருவேன், என்று கண்டிப்பாகச் சொல்லி விட்டான்.


அடுத்த நாள் சபை கூடியது. மருத்துவர்கள் இளைய மருத்துவனைக் கூட்டிக் கொண்டு அரசவைக்கு வந்தார்கள்.


அவன் அரசனிடம் ஒரு குடுவையைக் கொடுத்தான். "மன்னா இதில் இருக்கும் மருந்தை தினமும் சிரசில் தேய்த்துக் கொண்டு வந்தால், ஒரே மாதத்தில் முடி கொட்டுவது நின்று போகும். இரண்டே மாதத்தில் முடியில்லாத இடத்திலெல்லாம் முடி வளர ஆரம்பிக்கும், ஆறே மாதத்தில் கருகருவென தலையெங்கும் தலைமுடி அழகாக வளர்ந்திருக்கும்" என்றான்.


மன்னனுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. "இப்போதே அந்தப்புரத்திற்குப் போய் தலையில் மருந்தைத் தடவிக் கொள்கிறேன்" என்று கிளம்பினான்.


அப்போது மருத்துவன் "மன்னா. இந்த மருந்து வேலை செய்ய வேண்டுமென்றால், அதைத் தலையில் தடவிக் கொள்ளும் போது மட்டும் நீங்கள் குரங்கை நினைக்கக் கூடாது!" என்றான்.


முட்டாள் மன்னன் சரியென்று சொன்னான். மந்திரியிடம் மருத்துவர்களுக்குப் பொன்னும் பொருளும் கொடுத்து சிறப்பாக மரியாதை செய்து அனுப்பி வைக்கச் சொல்லிவிட்டு அந்தப்புரத்திற்கு வேகமாகச் சென்று விட்டான். மருத்துவர்களும் தப்பித்தோம் பிழைத்தோம் என்று ஊரை விட்டே ஓடி விட்டார்கள்.


அந்தப்புரத்திற்குச் சென்ற அரசன், அங்கு குடுவையைக் கையில் எடுத்து அதிலிருந்த மருந்தைத் தலையில் தேய்க்கப் போனான். அப்போது அவனுக்கு மருத்துவன் சொல்லிய பக்குவம் கவனத்திற்கு வந்தது. "குரங்கை நினைக்கக் கூடாது" என்று நினைத்தவுடன் குரங்கைப் பற்றி நினைக்க ஆரம்பித்து விட்டான். என்ன முயற்சித்தும் அவன் நினைவிலிருந்து குரங்கை அகற்ற இயலவில்லை.


மன்னனுக்கு மருத்துவனின் தந்திரம் புரியவில்லை. சற்று நேரம் கழித்து முயற்சிப்போம் என்று வேறு வேலையில் ஈடுபட்டான்.


ஆனால் ஒவ்வொரு முறை அவன் மருந்தைக் கையில் எடுத்த போதும் மருத்துவனின் அறிவுரை மனதில் தோன்றி அவனுக்குக் குரங்கு பற்றிய யோசனை வந்து கொண்டே இருந்தது.


பல நாள் திரும்பத் திரும்ப முயற்சித்து விட்டு, இந்தச் சிரமத்திற்குப் பேசாமல் வழுக்கையாகவே இருந்து விடலாம் என்று தீர்மானித்து விட்டான்.


Rate this content
Log in