ருசி
ருசி


பாரீசின் நடைபாதைக்கடையைப் பார்த்தபடி ஓரமாகக் கண்மூடியபடி படுத்திருந்த ருசி பூனை எப்ப வருவாளோ! சம்பா எனக் காத்திருந்தது.
நேற்று ஏதோ தர்பீஸ்கடை போட்டான்னு கொண்டுவந்து போட்டுட்டு டீக்கடை பிஸ்கட்டைப் போட்டா!
இன்னைக்கு விடாம மழை பெய்யுது!
பள்ளிக்கும் அவ போனா மாதிரி தெரியலை! என யோசித்தபடி தனக்கு அருகில் இருந்த சோளமாவில் செய்யப்பட்ட தட்டுகளையும், கரும்பிலிருந்து செய்யப்பட்ட தட்டுகளையும் பார்த்தபடி இருந்தது.
அவளுக்கும் வயசு பன்னிரண்டு ஆகப் போகுது!
ஃப்ளாட்பாரத்திலேயே படுத்து தூங்க முடியுமா!
ஏதோ நான் கருப்பு கலரில் இருக்கிறதுனால எங்க கடிச்சுடுவனோன்னு பயந்து யாரும் அவ பக்கத்துல போறதில்லை. பள்ளியும் பக்கத்துலதான்.கடவுள்தான் இவளைக் காப்பாத்தணும்.
ஏதோ மிஷின் தயார் பண்றா போலத் தெரியுது…….என பக்கத்தில் வரைந்த அட்டைப்படங்களைப் பார்த்தபடி படுத்திருந்தது.
சம்பா பகல் இரண்டுமணி அளவில் ருசி எழுந்திரு! எனக் கூப்பிட்டபடி கையில் இருந்த சாம்பார் சாதத்தைப் போட்டாள்.
காரம் அதிகமாக இருக்கு ருசி! பார்த்து சாப்பிடு..எனச் சொல்லியபடி அவளும் அந்த சாம்பார் சாதத்தைச் சாப்பிடத் தொடங்கினாள்.
சாப்பிட்டு முடித்தவுடன் அலுமினிய அன்னக்கூடையில் ஊற வைத்திருந்த துணிகளை தெரு பைப்பில் தண்ணீர் அடித்து அலச கிளம்பினாள். இடுப்பில் வைத்திருந்த சுருக்குப்பையில் இருந்த பணத்தை ருசியின் தலைமாட்டில் வைத்தபடி பார்த்துக்கோ! குளிச்சிட்டு அலசிட்டு வர்றேன்…என ரோடைக் கிராஸ் செய்தாள்.
சம்பா கிராஸ் செய்வதற்கும் அவளை முட்டியதுபோல ஒரு கார் அவள்மேல் மோதுவதற்கும் சரியாக இருந்தது.
மயக்கமடைந்து கீழே விழுந்த சம்பாவைத் தேடி ருசி ஓடி வந்தது. காரில் இருந்து ஒரு பெரிய அம்மா கீழே இறங்கினார். டிரைவர் பார்த்து வண்டி ஓட்டுவதில்லையா?
கீழே விழுந்த பெண்ணை தண்ணீர் தெளித்து எழுப்பு! என டிரைவருக்கு உத்தரவு பிறப்பித்தார்.
அவள் வீடு எங்கே என சுற்றுமுற்றும் தேடினாள்.அவள் புடவைத் தலைப்பை கருப்புப்பூனை ருசி பிடித்து இழுத்து சம்பா பொருட்கள் இருந்த இடத்தில் கொண்டு சேர்த்தது.
பெரிய பாட்டி அந்த இடத்தையும், சம்பா பொருள் வைத்திருந்த இடத்தையும் பார்த்தபடி இருந்தாள். அவளது அட்டைத்தாளில் வரைந்து வைத்திருந்த இயந்திர மாடலையும் கையில் எடுத்தபடி ஃபோனில் யாருடனோ பேசிக் கொண்டிருந்தார்.
சற்று நேரத்தில் நிறைய கார்கள் சம்பா இடத்தின் அருகில் வந்து நிற்கவும்தான் மக்களுக்கு அது கவர்னர் என்றே தெரிந்தது.
இனி சம்பாவுக்கு வாழ்வுதான்!
கவர்னர் அவ ஏதோ எழுதி வச்சிருந்த படத்துக்கு அவார்ட் கொடுக்கிறதாகவும், இத்தனை கஷ்டத்திலும் விடாம பிளாஸ்டிக் பயன்படுத்தாமல் இருந்ததற்காகவும் அவளை ஒரு பெரிய பள்ளிக்கூடத்துல சேர்த்துடப்போறாங்களாம். அங்கேயே ஹாஸ்டல் இருக்காம்..பாவம் ருசி! இனி என்ன பண்ணப் போகுதோ! என மக்கள் பேசிக் கொண்டனர்.
ருசிக்கு அது காதில் விழுந்ததோ என்னவோ! பேசாமல் கோணியில் சென்று சுருண்டு படுத்தது.
கார் சம்பாவை ஏற்ற வந்தபோது டிரைவரிடம் ருசியும் தன்னுடன் வரவேண்டும் என அடம்பிடித்ததை கவர்னர் சிரிப்புடன் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தார்.
பாப்பா! அந்த பள்ளிக்கூடத்துல பூனையெல்லாம் வரமுடியாது பாப்பா1
அப்ப எனக்கு அந்த பள்ளியும் வேண்டாம்..வீடும் வேண்டாம். நான் இங்கேயே இருந்துடறேன்…
என்னை கவர்னர்கிட்டே திட்டு வாங்க வைக்கிறதுன்னு முடிவு கட்டிட்டு வந்தாயா..தூக்கு உன் ருசியை!……வண்டியில் வச்சுக்கோ..ஆனால், பள்ளியில் அதற்கு இடமில்லை பார்த்துக்கோ….என்றார்.
நான் போடற சாப்பாட்டை அதுவும் சாப்பிடப்போகுது..என்றபடி ருசியைத் தூக்கச் சென்றாள்.
ருசியின் உடலோ சில்லிட்ட மரக்கட்டையாகி இருந்ததைப் பார்த்த சம்பா அழத் தொடங்கினாள்.