நிலவின் தோழி கனி

Children Stories Classics Inspirational

4  

நிலவின் தோழி கனி

Children Stories Classics Inspirational

'பச்சோந்தி'க் கல்

'பச்சோந்தி'க் கல்

2 mins
193


நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. "என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!"


தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. "நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!"


கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். "ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்"



ஒரு ஜன்னல் கண்ணாடியில் 'டண்' என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது "போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!"

வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். "இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!" என்று நினைத்துக் கொண்டது.



ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.



அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் "சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்" என்றது.



சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. "அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!" என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.


Rate this content
Log in