ஒரு டைரியின் மனது!
ஒரு டைரியின் மனது!
கீதாவும் சீதாவும் ஒரு தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படிக்கிறார்கள். கீதா வசதி மிகுந்த குடும்பத்தைச் சார்ந்தவள். அவளின் அப்பா பல் மருத்துவர்; அம்மா சுகாதாரத்துறையில் பணியாற்றுபவர். சீதா ஏழ்மைக்குடும்பத்தைச் சார்ந்தவள் என்று அவளது உடை நேர்த்தியே கூறி விடும். சீதாவின் அப்பா அந்தப்பள்ளியில் அலுவலக உதவியாளராக இருந்து ஒரு விபத்தில் உயிரைப் பறிகொடுத்தவர். சீதாவின் அப்பாவின் மேல் கொண்ட நல்ல எண்ணத்தாலும் சீதாவின் படிப்புத்திறமையை மனதில் கொண்டும் அந்த பள்ளி தலைவர் சீதாவின் முழுக் கல்விச்செலவையும் ஏற்றுக்கொண்டார். சீதா எப்பொழுதும் டைரி எழுதும் வழக்கம் கொண்டவள்.அன்றாட நிகழ்வுகளை உடனே குறித்து வைக்கும் வழக்கம் கொண்டவள். அவளின் கையில் எப்போதும் அந்த டைரி இருக்கும்.
சீதா வகுப்பில் முதல் மதிப்பெண் வாங்கும் மாணவி. படிப்பில் மட்டுமல்லாமல் அனைத்து விளையாட்டுகளிலும் எந்த போட்டிகள் வைத்தாலும் அதில் முதல் பரிசு சீதாவிற்கே. கீதா ஓரளவு படிக்கக்கூடியவள். விளையாட்டுகளிலும் போட்டிகளிலும் தோல்வி அடைந்தால் கூட போட்டிகளில் வென்றவர்களுக்குக் கொடுத்த பரிசு பொருள் போல விலை உயர்ந்த பொருட்களைக் கடையில் வாங்கி வீட்டில் வைத்து கொள்வாள். எல்லாரிடமும் தனக்கு முதல் பரிசு கிடைத்ததாகப் பெருமிதப்பட்டு கொள்வாள்.
ஒரு நாள் வகுப்பு ஆசிரியை வகுப்பிற்கு வந்த உடன் சீதா எழுந்து ஒரு பூ கொடுத்து பிறந்த நாள் வாழ்த்துக்களைத் தெரிவிக்கிறாள்.உடனே ஆசிரியைக்கு மிகுந்த ஆச்சர்யத்தோடு கலந்த சந்தோசம். சீதாவின் கன்னத்தில் முத்தமிட்டு எப்படி தெரியும்? என்று கேட்க தனது டைரியில் பதிவு செய்து வைத்திருப்பதாகக் கூறினாள். இதைக்கண்ட கீதா தானும் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று டிரைவரிடம் பூங்கொத்து வாங்கி வர சொல்லி ஆசிரியைக்கு கொடுக்கிறாள். ஆசிரியை நன்றி என்று ஒரு வார்த்தையில் கூறி பெற்று செல்கிறார்.
இதை ஒரு அவமானமாக நினைத்த கீதா, சீதாவைப் பழி வாங்க நினைக்கிறாள். இதற்கிடையில் கீதாவின் அம்மா தடுப்பூசியின் அவசியத்தைப் பற்றி மாணவர்களுக்கு சொற்பொழிவாற்ற பள்ளிக்கு வர அங்கு கீதாவின் பரிசுகள் அனைத்தும் கடையில் வாங்கப்பட்டவை உண்மையான வெற்றியாளர் சீதா தான் என வகுப்பாசிரியை மூலம் தெரிந்து கொண்டு கோபமடைகிறார். கீதாவிடம் அவளுடைய தவறை சுட்டிகாட்டி கடையில் வாங்கி வந்த பரிசுப்பொருட்களை எடுத்து உள்ளே வைத்து விடுகிறார். கீதாவின் கோபம் மேலும் அதிகரிக்க சீதாவையும் வகுப்பாசிரியையும் பழி வாங்க துடிக்கிறாள்.
அடுத்த நாள் சீதா கவிதை போட்டியில் முதல் பரிசு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கீதாவின் கோபம் இன்னும் அதிகமாக, சீதாவிடம் சென்று அவளை வகுப்பாசிரியை அழைப்பதாக பொய் சொல்கிறாள். சீதாவும் ஆசிரியையை சந்திக்க சென்ற நேரத்தில் அவளின் டைரியை கீதா திருடிக் கொள்கிறாள். சீதா ஆசிரியையிடம் சென்று தன்னை அழைத்ததற்கான காரணம் கேட்க, ஆசிரியை குழப்பத்துடன் கவிதை போட்டியில் வெற்றி பெற்றதற்காக அவளை பாராட்ட அழைத்ததாக கூறுகிறார்.
வகுப்பிற்கு வந்த சீதா டைரியைக் காணாமல் துடித்து போகிறாள். அழுது கதறுகிறாள். கீதா அவளுக்கு ஆறுதல் கூறுபவள் போல நடிக்கிறாள். வகுப்பை சுத்தம் செய்யும்போது யாரேனும் தவறுதலாக குப்பையில் போட்டிருப்பார்கள் என்று கூறுகிறாள். அதை கேட்டு சீதா குப்பைக்கூளத்தில் தேடுகிறாள். கிடைக்காமல் போகவே ஏமாற்றத்துடன் அழுது கொண்டே வீட்டுக்கு செல்கிறாள். கீதா அவளை அழவைத்த மகிழ்ச்சியுடன் வீடு செல்கிறாள். அடுத்து 2,3 நாட்கள் சீதா வகுப்பில் யாருடனும் பேசவில்லை. ஆசிரியை நடத்துவதை கவனிக்கவில்லை. சீதாவின் இந்த நடவடிக்கை ஆசிரியைக்கு மிகுந்த குழப்பத்தையும் கோபத்தையும் தருகிறது. ஆசிரியை காரணம் கேட்க அதற்கும் சீதா அமைதியாக இருக்க அவர் அவளை திட்டி விட்டு செல்கிறார். கீதாவிற்கு ஒரே சந்தோசம். அவளது திடீர் சந்தோஷத்தைப் பார்த்து சந்தேகப்படும் அவளின் அம்மா அவளது புத்தகப்பையை தேடி பார்க்கிறார். அதில் சீதாவின் டைரி உள்ளது. அதை எடுத்து படிக்கும் போதே கதறி அழுகிறார்.
அடுத்த நாள் கீதாவிற்குத் தெரியாமல் அந்த டைரியை சீதாவிடம் ஒப்படைக்க பள்ளி செல்கிறார். சீதா பள்ளிக்கு வரவில்லை. கீதாவை அழைத்து கொண்டு சீதாவின் வீட்டுக்கு செல்கிறார். சீதா ஒரு சிறிய குடிசைக்குள் படுத்திருக்கிறாள். உள்ளே சென்று பார்க்க வீட்டில் இருவர் உட்கார கூட வசதி இல்லாத இடம். கீதா அவர்களை வரவேற்று அவர்களுக்காக காபி போட்டு கொடுக்கிறாள். கீதாவின் அம்மா சீதாவின் அம்மா அப்பா பற்றி கேட்க, அம்மா சிறு வயதிலேயே இறந்து விட்டதாகவும் அப்பா பத்து மாதங்களுக்கு முன் விபத்தில் இறந்து விட்டதாகவும் கூறுகிறாள். மேலும் வசதி இல்லாததால் உறவினர்கள் கண்டுகொள்ளாமல் போனதையும் அருகில் இருக்கும் வீடுகளுக்கு சென்று வேலை செய்து வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் கூறினாள். அதன்பின் இவர்கள் டைரியைக் கொடுக்காமலே வீட்டிற்கு வந்து விட்டனர்.
வீட்டிற்கு வந்தபின் கீதாவின் அம்மா அந்த டைரியை கீதாவின் அப்பாவிடம் காட்டி அழுது கொண்டிருந்தாள். அப்போது தான் புரிந்தது கீதாவின் அப்பாவின் கார் மோதிதான் சீதாவின் அப்பா இறந்தார் என்பது. டைரியில் உள்ள தேதியை வைத்து அவர்களுக்கு உண்மை தெரிய வருகிறது. அதைக் கேட்டதும் கீதா மிக்க மனவருத்தத்துடன் சீதாவுக்கு ஏதேனும் உதவி செய்வதைப் பற்றி யோசிக்கிறாள். அன்று இரவு முழுவதும் கீதாவின் அம்மா, அப்பாவும் மிகுந்த வருத்தத்துடன் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருந்தனர்.
காலை விடிந்ததும் சீதாவைக் கீதா வீட்டிற்கு அழைத்து வந்திருந்தாள். கீதாவின் அம்மா வந்து இதை பார்க்க "இனி கீதா மட்டுமல்ல சீதாவும் உங்கள் மகள் தான். இனிப்பு செய்யுங்கள் கொண்டாடலாம் என்றாள்” மகிழ்ச்சியாக!
