பால்ய காலத்தின் மழை
பால்ய காலத்தின் மழை
இன்றும் மழையென்றால் முதலில் நினைவிற்கு வருவது மென்சாரல் வீசிய எங்கள் முற்றத்து வீடு தான்
மழையில் கரகரத்து ஒலிக்கும் வானொலி பாடல்கள் நினைவு சுழலில் நம்மை கொண்டு நிறுத்திய இடங்கள் எங்குள்ளன???
முதலில் கால் நனைத்து பின் கெஞ்சி கொஞ்சி கை நனைத்து இறுதியில் முற்றாக மழை நனைவதே பேரானந்தம்
மழைக்குள் ஓடி வந்து சுடுபஜ்ஜி தந்த என் எதிர் வீட்டு தோழன் காலவெளியில் இன்று எங்கிருக்கிறானோ?
சடசடவென்று துளிகள் விழுகையில் மலரும் என் சிரிப்பு அந்தி மாலையில் பெய்யும் மழைக்கே சொந்தம்
இன்று விடுமுறை என்று தெருவெங்கும் கூவியபடி செய்தி அறிவிக்கும் அகமது இப்போது நலமா??
மழைக்கு நிரம்பி வழியும் பாத்திரங்களை மாற்றுவதில் ஒரு சிறு போர் நிகழுமே எனக்கும் என் இளையவனுக்கும்
மழைக்காலத்து அம்மா போர்வை தரும் கதகதப்பும் பாதுகாப்பும் சின்னஞ்சிறு மனதிற்கு எத்தகைய மகத்தான திறவுகோல்.
இன்றும் மழைக்காலங்கள் வந்துப்போகின்றன
மழைப்பார்த்தல் கூட இடையில் அரிதாக நிகழ்கிறது மழை நனைதல் வாய்ப்பதேயில்லை
அவ்வப்போது நினைவடுக்கில் தேடிப்பார்க்கையில் எஞ்சியிருப்பது
பவழமும் கொன்றையும் மெத்தை விரித்த வாசலில் பெருமழையில் சுற்றியாடிய சிறுமியும் அவள் பாதுகாத்திருக்கும் பால்ய காலத்தின் மழையும் தான்....