கடலோரக் கோலங்கள்
கடலோரக் கோலங்கள்
-
கடலோரத்; தனிமையில்
கடலையைக் கொரித்தபடி
கடற்கரை குறு மணலில்
நண்டுகளிடும் கோலங்களை
கண்வெட்டா பார்த்து நின்றேன்.
பிழையான புற்றுக்குள்
அவசரத்தில் புகுந்த நண்டு
அழையாத விருந்தாளியாய்
பதட்டத்துடன் வெளியேறி
திசைமாறி அங்குமிங்கும் ஓடியதில்
ஒரு கலைவடிவம் மண்ணில்
தோன்றியதைக் கண்டேன் நான்.
பக்கத்துவீட்டு பங்கஜம்மாள்
தலைமுழுகித் தலைசீவிக்,
கொண்டையிலை பூச்சூடி
ஆச்சாரத்துடன் ஆறுதலாய்
முற்றத்தில் போட்ட கோலம்
அவள் பலகாலம்
கற்றிந்து இட்ட கோலம்.
கடல் மணலில்
நான் பார்த்த கோலம்.
இயற்கையாத்
தாம் பெற்ற கலைத்திறனால்
நண்டுகள் இட்ட கோலம்..
ஓயாத அலைகள் பல.
கோலத்தை இரசித்ததினால்
அழிக்காது சென்றன சில.
புதுவடிவம் தேவை என்றதினால்
அவைற்றை அழித்துச்சென்றன
அலைகள் சில.
புற்றுக்குள் நீர் புகுந்ததினால்
இருக்க இடமின்றி
பரதவித்த நண்டுகள்
அங்குமிங்கும் ஓடியதினால்
தோன்றியன புதுக்கோலங்கள்.
இயற்கையின் கோலத்தினை
இமைகொட்டாது இரசித்து நின்றேன்.
******
