அரங்கேற்றம்
அரங்கேற்றம்
-
அடிவான விளிம்பினில்
ஆதவன் விழித்திட
இயற்கையெனும் அரங்கினில்
இரவெனும் திரை நீங்கிட
ஈரப் பனித்துளிகள்
பசும் புற்களில் மினுங்கிட
குதிரைகள் துள்ளித் திமிதிமி போட
கூவும் குயிலின் இசையுடன்
சில்வண்டுகளின் மோர்சங்கும்
சிட்டுக் குருவிகளின்
சிறப்பான சித்தாரும்
காற்றினில் மூங்கில்கள்
புல்லாங்குழல் இசைத்திட
"சோ" வென்ற நீர் வீழ்ச்சியின்
சோடை போகாத பின்னணியும்
வானத்து இடிமுழக்கம்
மத்தளம் வழங்கவும்
அரவங்களின் ஆட்டத்தின் பின்
மயில்களின் நடனமும்
தடாகத்து தவளைகளின்
தாளவாத்தியக் கச்சேரியும்
ஆற்றோர நண்டுகளின்
அலங்கார நர்த்தனமும்
வண்ணத்துப் பூச்சிகளின்
வர்ணஜால விந்தைகளும்
புள்ளிமான் கூட்டத்தின்
புதுமையான துள்ளல்களும்
நரிமாமா குழுவினரின்
"நயவஞ்சகம்" நாடகமும்
சந்தன மர நறுமணம்
தென்றலில் மிதந்து வர
அலைவரிசையாய் எறும்புகள்
அரங்கேற்றம் இரசிக்க வர
ஆமைகள் அசைந்தாடி
மெல்ல மெல்ல ஊர்ந்துவர
ஐவராசிகள் ஆரவாரம்
சபையினை நிறப்பிட
ஓரமாய் நின்ற ஓநாய்கள்
"ஓ"வென்று ஓலமிட.
வான்கோழிகள் வாய்விட்டு
"குழு குழு" வெனச் சிரித்திட
ஆந்தைமார் வியப்பினில்
"திரு திரு" வென விழித்திட
யானையார் குடும்பத்துடன்
வெட்டவெளியினில் நின்று இரசித்திட
இயற்கையின் அரங்கினிலே
புத்தம்; புது நாளொன்றில்
அரங்கேற்றம் இனிதாக நடந்ததுவே
******
