தூய்மை,ஆரோக்கியம்
தூய்மை,ஆரோக்கியம்


உடல் தூய்மை என்றால் நோய்கள் வராது. உள்ளம் தூய்மை என்றால் துன்பம் வராது. உடலும் உள்ளமும் தூய்மை என்றால் கொரோனா வராது.
புதுச்சேரியில் ஊரடங்கு உத்தரவால் மூடப்பட்ட மது பார்கள் 62 நாள்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட நிலையில், இருமடங்கு உயர்த்தப்பட்ட விலையின் காரணமாக திறந்த சில மணி நேரங்களில் கடைகள் வெறிச்சோடின.
புதுச்சேரியில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவால் மார்ச் 24-ம் தேதி முதல் அனைத்து மது பார்களும் மூடப்பட்டன. அதைப் பயன்படுத்திக்கொண்ட சில மதுக்கடை உரிமையாளர்கள், சரக்கின் விலையை பன்மடங்கு உயர்த்தி கள்ளச்சந்தையில் விற்று பணம் சம்பாதிக்கத் தொடங்கினர். இது தொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் 102 மதுக்கடைகள் உரிமங்களை ரத்து செய்தார் கவர்னர் கிரண்பேடி. தமிழகத்தில் டாஸ்மாக் திறக்கப்பட்டபோது, புதுச்சேரியிலும் மது பார்களைத் திறப்பதற்கு முடிவெடுத்தது அரசு. ஆனால், தமிழகத்தைப் போல மதுபாட்டில்களின் மீது கோவிட் வரியை விதித்தால் மட்டுமே திறப்பதற்கு அனுமதி அளிக்கப்படும் என்றார் கிரண் பேடி.
இதற்கிடையில், தமிழக டாஸ்மாக் கடைகளின் சரக்குகள் புதுச்சேரியில் கள்ளச்சந்தையில் விற்கப்பட்டன. தொடர்ந்து தமிழகத்தைப் போல புதுச்சேரியிலும் மதுபானங்களின் விலையை உயர்த்துவதென்று அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு அதற்கான கோப்பு கிரண் பேடிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அதற்கு அவர் அனுமதி அளித்ததன் அடிப்படையில் இன்று காலை உரிமங்கள் ரத்து செய்யப்பட்ட 102 கடைகளைத் தவிர்த்து அனைத்து மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. `குடி’மகன்கள் கிலோமீட்டர் கணக்கில் வரிசையில் நின்று சரக்கு வாங்கிச் செல்வார்கள் என்று நினைத்து, அனைத்து மது பார்களின் வாசலிலும் இரவோடு இரவாக தடுப்புக் கட்டைகள் அமைக்கப்பட்டன.
அரசாணைப்படி உயர்த்தப்பட்ட விலையுடன் இன்று காலை 10 மணிக்கு அனைத்து மது பார்களும் திறக்கப்பட்டன. விற்பனை அமோகமாக நடைபெற வேண்டுமென்று அண்ணா சாலையில் உள்ள மொத்த விற்பனைக் கடை ஒன்றில், புரோகிதர்களை வைத்து சரக்குப் பாட்டில்களுக்கு சிறப்பு பூஜைகளும் போடப்பட்டது. ஆனால், இருமடங்கு உயர்த்தப்பட்ட விலையால் திறந்த சில மணி நேரங்களில் அனைத்துக் கடைகளும் வெறிச்சோடின. வரிசையில் காத்திருந்து சரக்கு வாங்கச் சென்றவர்கள் கூட, விலையைக் கேட்டுவிட்டு திரும்பிச் சென்றனர்.
நம்மிடம் பேசிய `குடி’மகன் ஒருவர், ``ரெண்டு மாசமா வேலைக்குப் போகாம, சம்பளம் இல்லாம இருக்கும்போது இவ்வளவு விலையை ஏத்தி வித்தா நாங்க எப்படி குடிக்கறது ? கவருமெண்டுதான் எங்களைக் குடிகாரங்களாக்கி கோடிக்கணக்குல பணம் சம்பாதிக்குது. அதே கவருமெண்டுதான் எங்களைக் குடிகாரங்கனு சொல்லி சரக்கு விலையையும் ஏத்தி விக்குது. குடிக்கறது கேவலம்னா கடையை நிரந்தரமா மூடிட்டு போயிடலாமே? இப்போ எங்களோட நல்லதுக்காகவா கடைங்களை திறந்திருக்காங்க? பால், பாக்கெட், மருந்து விலையை ஏத்துறாங்களா? அப்படி இருக்கும்போது எங்களை குடிக்கு அடிமையாக்கிட்டு, குடி நோயாளிகளாவும் மாத்திட்டு இப்போ அநியாயமா விலையை ஏத்தி விக்குறது எந்த விதத்துல நியாயம்?” என்று கொந்தளித்தார்.
எஃப்.எல்-II மதுக்கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் சுதாகரிடம் பேசினோம். ``தமிழகத்தில் டாஸ்மாக்கில் குவிந்த கூட்டத்தைப் பார்த்து இங்கும் அப்படி வருவாய் வரும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால் இங்கு அப்படி நடக்காது, தமிழகத்தில் 1 முதல் 5 கிலோமீட்டருக்கு ஒரு கடைதான் இருக்கும். ஆனால், புதுச்சேரியில் 50 மீட்டருக்கு ஒரு கடை இருப்பதால் ஒரு கடையில் கூட்டம் இருந்தால் அடுத்த கடைக்குச் சென்றுவிடுவார்கள். இன்று நிற்கும் சொற்ப கூட்டம் கூட நாளையில் இருந்து இருக்காது. இவ்வளவு விலை கொடுத்தெல்லாம் புதுச்சேரி மக்கள் குடிக்கமாட்டார்கள்.
புதுச்சேரியைப் பொறுத்தவரை வெறும் 30% மக்கள்தான் குடிக்கும் பழக்கம் உடையவர்கள். தமிழகம், பெங்களூரு உள்ளிட்ட அண்டை மாநிலத்தவர்களால்தான் புதுச்சேரியில் மது அதிகமாக விற்பனையாகிறது. புதுச்சேரியின் எல்லைகள் சீல் வைக்கப்பட்டுவிட்ட நிலையில், சாதாரண நாள்களில் நடக்கும் விற்பனை கூட இப்போது இருக்காது. சென்னையின் விலைப்பட்டியலின் அடிப்படையில் இங்கு சரக்கின் விலைகளை உயர்த்தியிருக்கிறார்கள். இதை புதுச்சேரி மக்கள் ஏற்க மாட்டார்கள்” என்றார்.