Lakshmi Priya S

Children Stories Comedy Children

5  

Lakshmi Priya S

Children Stories Comedy Children

டீச்சர் வீட்டு ஃபேன்கள் சிரிப்பதே இல்லை

டீச்சர் வீட்டு ஃபேன்கள் சிரிப்பதே இல்லை

5 mins
2.0K



சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் ரோடு. பவளவண்ணன் சுரங்கப் பாதைப் பாலம்.

கிழக்கு ஜோன்ஸ் ரோட்டில் இருந்து வந்து பாலத்திற்குள் நுழைந்து வெளிவந்தால் மேற்கு ஜோன்ஸ் ரோட்டின் ஆரம்பம். இடப்பக்கம் தெப்பக்குளம். காரணீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமானது.

அந்தக் குளம் காய்வதற்குள் கண்டிப்பாக மழை வந்துவிடுமாம். ஆத்திக சிந்தனையோ நாத்திகக் கேலியோ எந்தப் பக்கமும் சாயும் எண்ணமில்லை. ஆனால், அது அப்படித்தான் நடக்கிறது.

அப்படியே குளத்தின் இடப்பக்கம் திரும்பி நடந்து, மீண்டும் இடப்பக்கம் திரும்பினால் காரணீஸ்வரர் கோயில் மெயின் வாசல். அதற்கு நேர் எதிர் ரோடு ஒன்று நீளும். அதன் இடப்புறம் உள்ளே சென்றால் மின்சார ரயில். டிக்கெட் கூடம். அப்படியே படியேறி இறங்கினால் மின்சார ரயிலின் நடைமேடை.

காரணீஸ்வரரின் முன்னும் பின்னும், அவரைச் சுற்றிலும் இருக்கும் பகுதியில் நிறைய சந்துகள். அதாவது லேன்கள். அந்த லேன்களிலும் தெருக்களிலும் நிறைய லைன் வீடுகள்.

ரயிலடியும் கோயிலும்போலவே அந்தப் பகுதியின் இப்போதைய அடையாளங்கள் இந்த லைன் வீடுகள்.

அந்த வீடுகளில் இருக்கும் குழந்தைகளுக்கு, மின்சார ரயில் கடக்கும் தடக் தடக் ஓசைதான் தூங்கும்போது தாலாட்டாய்க் கிடைக்கும்.

சிறுவர்களுக்கோ விளையாட்டில் ஒரு கை சேர்ந்தது போன்று கூச்சலுடன் இணைந்த ரயில்கூவல். ரயில்சேவல் என்றும் சொல்லலாம் கவிதைவயப்பட்டவர்கள்.

அப்படிப்பட்ட லைன்வீடுகளில் ஒன்றில் குடியிருப்பவர்கள்தான் வசந்தியும் ராஜாவும். தங்கள் கைக்குழந்தையுடன். பிறந்து இரண்டு மாதங்களே ஆனது.

வசந்தி சைதாப்பேட்டை மேற்கு ஜோன்ஸ் ரோட்டில் இருக்கும் மாந்தோப்பு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியை. ராஜாவுக்கு செய்திச் சேனலில் சப்-எடிட்டர் வேலை.

அந்த லைன் வீடுகளில் இருக்கும் பிள்ளைகள் சிலருக்கு வசந்தி வகுப்பெடுப்புக்கும் ஆசிரியரெல்லாம் இல்லை. அவர்கள் அனைவரும் தொடக்கப் பள்ளிகளில் படிப்பவர்கள்.

அதனால் டீச்சர் என்ற பயமின்றி வசந்தி வீட்டுக்குள், குழந்தையைப் பார்த்துக் கொஞ்சவும் விளையாட்டுக் காட்டவும் அந்தக் குழந்தைகள் அடிக்கடி வருவதுண்டு.

வசந்தி வகுப்பெடுக்கும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி வகுப்பில் பயிலும் பிள்ளைகளுக்கு வசந்தி வீட்டுக் காம்பவுண்டிலும்கூட டீச்சர்தான். அதனால் மேல்நிலை வகுப்புப் பிள்ளைகளுக்கு, வசந்தி வீட்டில் இருப்பது தெரிந்தால் ஒரே பம்மலும் பதுங்கலும்தான்.

போலீசும் டீச்சரும் எப்போதும் மிடுக்கை உடுத்திக்கொண்டேதான் இருப்பர் ஓர் மேலாடைபோல. அது மிரட்டாமல் வேறு மிரட்டும்.

இருந்தும், அந்தக் காம்பவுண்டில் இருக்கும் ஐந்தாவது வரை படிக்கும் குழந்தைகள் வசந்தியை ஆண்ட்டி மிஸ் என்றே அழைப்பர். வசந்தியும் அவர்களுடன் ஆசையாகத்தான் நடந்துகொள்வாள்.

வசந்தியின் இரண்டு மாதக் குழந்தை அழுதுகொண்டிருந்தது. மின்சாரமற்றப் பகல்பொழுது அது.

வசந்தி குழந்தைக்கு விசிறி கொண்டிருந்தாள். அப்போதும் அழுதுகொண்டே இருந்தது.

மற்ற சிறுவர்கள் குழந்தையின் தொடரழுகைச் சத்தம் கேட்டு ஓடி வந்தனர்.

வசந்தி விசிறி விட்டாலும் குழந்தையின் அழுகை நிற்காததால். சிறுவர்கள் சேர்ந்து சுற்றி அமர்ந்து கைதட்டியும் ஆராரோ சொல்லியும் புதிய சினிமா பாடல்கள் பாடியும் சிரிப்பு காட்டியும் பார்த்தனர்.

அப்போதும் குழந்தையின் அழுகை நிற்கவில்லை. மொழிப்போராட்டம்போல நீண்டுகொண்டே இருந்தது.

வெளியே வெயில் அடர்ந்து பொழிந்துகொண்டிருந்ததால் குழந்தையால் தாங்க முடியாது என்பதால் வெளியிலும் தூக்கி வர முடியவில்லை.

சிறுவர்கள் விளையாட்டு காட்டியும் அழுகை நிற்காததால் வசந்தி ஃபேனையும் ஸ்விட்ச் பாக்ஸ் இண்டிகேட்டரையும் மாறி மாறிப் பார்த்துக்கொண்டிருந்தாள்.

குழந்தை அழுவதையும் வசந்தியின் முகத்தையும் பார்த்த சிறுமி ஒருத்தி அங்கிருந்து எழுந்து ஓடினாள்.

ஓடியவள் தன் பாட்டியுடன் வசந்தி வீட்டுக்குள் வந்தாள்.

பாத்தியா பாட்டி ... ஆண்ட்டி மிஸ் விசிறிட்டே இருக்காங்க ... நல்லா காத்தும் வருது ... நாங்களும் விளையாட்டு காட்டறோம் ... அப்பவும் பாப்பா அழுதுகிட்டே இருக்கு ... அதான் உன்ன கூப்பிட்டேன் என்று பாட்டியிடம் கூறினாள் சிறுமி.

வசந்தி,சிறுமியைப் பார்த்து சிரித்தாள் சிநேகமுடன்.

ஏம்மா இப்டி குடு புள்ளய எறும்பு கிறும்பு கடிச்சிருக்கான்னு பாக்கறேன் என்று குழந்தையை வசந்தியின் மடியில் இருந்து வாங்கினார் பாட்டி.

குழந்தையின் சட்டையைத் தூக்கிப் பார்த்து, பின் சட்டையைக் கழற்றியும் பார்த்தார் அந்தப் பாட்டி. குழந்தையின் பின்புறம் புட்டம் விலக்கியும் முன்புறம் கால்களை விலக்கியும் பார்த்தார்.

எறும்பும் எதும்கூட கடிச்ச மாதிரி தெரியல ... அப்றம் ஏன் பிள்ள அழுவுது ... ஏழு பிள்ள பெத்தவ ... எனக்கே ஒண்ணும் புரியலயே ... திருநீறு கொஞ்சம் குடும்மா என்று வசந்தியிடம் திருநீறு வாங்கியும் வைத்துப் பார்த்தார் பாட்டி.

அழுகை நிற்கவே இல்லை.

இல்ல பாட்டி... கரண்ட் இல்லல்ல... அதான் அழுவுதுபோல… என்றாள் வசந்தி.

அதற்கேற்றாற்போல குழந்தையும் மேலே பார்த்தபடியே அழுதது.

இல்லம்மா... மேலயே பாத்து அழுவுதுன்னா... எதோ மெரட்டிருக்கும்மா புள்ளய... சாய்ந்தரம் எதுக்கும் மசூதிக்கு தூக்கிட்டுப் போய் காட்டிட்டு வா... வேணும்னா நானும் கூட வரேன்…

பாட்டி வசந்தியிடம் சொல்லிக்கொண்டிருக்கும்போதே, குழந்தையின் அழுகை மாறி அப்படியே லேசான சிரிப்பானது.

காற்று மெல்லிய சிலிர்ப்புடன் பரவுவதுபோல உணர்ந்தனர் அனைவரும். அனைவரும் அப்படியே ஆகாயம் பார்ப்பதுபோல மேலே பார்க்க, கரண்ட் வந்திருந்ததும் ஃபேன் சுற்றுவதும் தெரிந்தது.

குழந்தையின் சிரிப்பைப் பார்த்ததும்தான் வசந்தி முகத்தில் சிரிப்பு எட்டிப் பார்த்தது.

கரண்ட் இல்லன்னாதான் இப்படி அழுவுதும்மா…

ஆமாம்மா… அப்டித்தான் இருக்கும்போல... என்ன இருந்தாலும் பெத்தவளுக்குத்தானே பிள்ளைய பத்தி தெரியும்…

பாட்டி சொல்லிவிட்டு குழந்தையை நீவி நெட்டி முறித்துவிட்டுச் சென்றார்.

ஃபேன் வேகமாகச் சுற்றச் சுற்ற குழந்தையின் சிரிப்பு அதிகமானது.

அதைப் பார்த்த சிறுவர்கள், டேய் ... ஃபேனைப் பார்த்து சிரிக்குதுடா பாப்பா

ஆமாடா ஃபேனும் பாப்பாவ பாத்து சிரிக்கும்போலடா... அதான்…

பாரு பாரு... இஸ்பேனு அதிகமா சுத்த சுத்த பாப்பாவும் நல்லா சிரிக்குது பாரு…

டேய் சாமி வந்து பாப்பாகிட்ட விளாட்டு காட்டும்னு எங்க பாட்டி சொல்லுண்டா…

இந்தப் பாப்பாக்கு ஃபேனுகூட விளாட்டு காட்டுதுடா... அதான் அப்டி சிரிக்குது…

சிறுவர்கள் பேசிக்கொள்வதைக் கேட்டு வசந்தியும் சிரித்தாள். எலுமிச்சைப் பழ ஜூஸ் கலக்கிக் கொண்டே.

அங்கிருந்த சிறுவர்களுக்கு வெயிலுக்கு இதமாக எலுமிச்சை ஜூஸ் கொடுத்தாள்.

அப்போது திடீரென கரண்ட் மீண்டும் நின்றது.

அய்யய்யோ கரண்ட் போச்சு... பாப்பா திரும்பவும் அழப் போவுது…  என்று சிறுவர்கள் சொல்ல,

வசந்தி குழந்தையைப் பார்க்க, குழந்தை அழவில்லை. ஃபேனையே பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்தது.

கரண்ட் நின்றவுடன் சட்டென்று ஃபேனும் நிற்காமல் அதன் இயக்கம் சற்றே மெதுவாக வேகம் குறையக் குறைய, குழந்தை கை கால்களை ஆட்டியபடியே சிரிப்பையும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக்கொண்டே வந்தது. ஃபேன் முழுவதுமாகச் சுற்றுவதை நிறுத்த, அதைப் பார்த்த குழந்தை மீண்டும் அழத்தொடங்கியது. சிறுவர்கள் குழந்தையையேப் பார்த்துக்கொண்டிருந்தனர். குழந்தை நன்றாகக் கத்தி அழத் தொடங்க, வசந்தியின் முகம் மாற, சட்டென்று மீண்டும் கரண்ட் வர, ஃபேன் சுற்றத் தொடங்க, குழந்தையின் அழுகை சிரிப்பாக மாற, ஃபேன் வேகம் அதிகரிக்க, குழந்தையின் சிரிப்பும் அகலமாக, சிறுவர்கள் அதைக் கவனிக்க, வசந்திக்குக் குழந்தையின் சிரிப்பைப் பார்த்து முகம் மலர,

டேய்... நெஜமாதாண்டா இஸ்பேனு பாப்பாகிட்ட விளாட்டு காட்டுது… பாரேன் அது சுத்த ஆரம்பிச்சதும் பாப்பாவும் ஈஈஈயின்னு பொக்க வாய் காட்டிக்கிட்டு சிரிக்குது…

குழந்தை அதற்கேற்றாற்போலவே கைகள் கால்களை ஆட்டிக்கொண்டு சிரித்தது.

ஃபேனைப் பார்த்து குழந்தை சிரிப்பதாகவும், குழந்தைக்கு ஃபேன் விளையாட்டுக் காட்டி அதுவும் சிரிப்பதாகவும் ஒரு கதைத் தொடர்பை லைன் வீடுகள் எங்கும் சிறுவர்கள் விதைத்தனர்.

டீச்சர் வீட்டு ஃபேன்கள் சிரித்து பாப்பாவுக்கு விளையாட்டு காட்டுகின்றன என்றனர் அந்த காம்பவுண்டு குடியிருப்பு வாசிகளிடம் எல்லாம்.

வாய்ப் பரப்புரையும் வாட்ஸப் பரப்புரையும் வயது வித்தியாசம் கடந்து வசப்படுத்தும் சக்தி கொண்டவை. சிறுவர்கள் செய்தது முன்னது.

தினமும் பள்ளி விட்டு வந்ததும் வசந்தி வீட்டுக்கு வந்துவிடும் சிறுவர்கள், குழந்தைக்கும் ஃபேனுக்குமான சிரிப்புத் தொடர்பை சோதித்து உறுதி செய்துகொண்டனர் அடிக்கடி.

ஓடும் ஃபேனை நிறுத்த, குழந்தை அது நிற்பதைப் போல சிரிப்பைக் குறைத்துக்கொண்டே வந்து அழுகையாக மாற்ற, மீண்டும் ஃபேனைப் போட, அது சுற்றத் தொடங்க, குழந்தையும் சிரிப்பை அதற்குத் தகுந்தாற்போல அதிகமாக்க, இது சிறுவர்களுக்கு ஒரு பொழுதுபோக்காகவே மாற,

வசந்தி சில நேரங்களில் சிறுவர்களை அதட்டுவாள். சில நேரங்களில் அந்த விளையாட்டை அவளும் ரசிப்பாள். இப்படித் தன் குழந்தை ஃபேனுடன் சிரிப்பதையும் அதை சிறுவர்கள் பார்த்து ரசிப்பதையும் தன் கணவன் ராஜாவிடமும் சொல்லிச் சிரித்தாள். அதில் இருக்கும் சூட்சுமத்தைப் பார்த்து ஒரு கட்டத்தில் ராஜாவும் வசந்தியுமே ரசிக்கத் தொடங்கிவிட்டனர். சிற்சில நேரங்களில் லைன் வீட்டுச் சிறுவர்கள் போலவே, அந்த ஃபேன் ஆஃப்(Off) அண்ட் ஆன்(On) விளையாட்டை வசந்திகூட செய்து பார்த்து, குழந்தையின் ரசனையானச் சிரிப்பை ரசித்து மகிழ்வாள். திடீரென, வசந்திக்கு வேறு பள்ளிக்கு மாறுதல் வந்துவிட்டது. சூளைமேட்டில் அம்மா ஆஸ்பத்திரிக்கு அருகில் இருக்கும் ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்குப் பணிமாறுதல் ஆணை கைக்கு வந்தது. குழந்தையைப் பார்க்க வசதியாக இருக்க வேண்டுமெனில், சூளைமேட்டில் பள்ளிக்கு அருகிலேயே வீடு பார்ப்பதே உகந்தது என்பதால் அங்கேயே ஒரு வீடு பார்த்து ராஜாவும் வசந்தியும் சென்றுவிட்டனர்.

வசந்தியும் ராஜாவும் சைதாப்பேட்டை லைன்வீட்டைக் காலி செய்துவிட்டதால் அந்த ஹவுஸ் ஓனர் வீட்டைத் திறந்தே போட்டிருப்பார். யாரும் வந்து வாடகைக்கு வீடு பார்க்க வசதியாக.

வசந்தி வீடு காலி செய்த பின்னர், அந்த வழியாகப் போகும்போதும் வரும்போதும் வீட்டிற்குள் சென்றும் செல்லாமலும் லைன்வீட்டுச் சிறுவர்கள், குழந்தையிடம் சிரித்து விளையாட்டு காட்டிய ஃபேனைப் பார்த்துவிட்டுச் செல்வர்.

ஃபேன் சுற்றாமல் அமைதியாகவே இருக்கும்.

டேய் இப்ப சிரிக்குமாடா டீச்சர் வூட்டு இஸ்பேனு…

டேய் ஓடினாதாண்டா சிரிக்கும்… இப்பதான் ஓடல இல்லடா…

இருடா இசுவிச்ச போட்டுப் பாப்போம்… இஸ்பேனு சுத்தும்போது சிரிக்குதான்னு பார்ப்போம்…

என்று இரண்டு சிறுவர்கள் திறந்திருக்கும் வீட்டிற்குள் நுழையப் போக,

அதை ஹவுஸ் ஓனர் பார்த்து,

டேய் வூட்டாண்ட என்னடா பண்றீங்க?..

என்று சத்தம் போட,

டேய் அவுஸோனருடா ... சவுண்ட குடுக்காரு பாரு … லவுடு இஸ்பீக்கரு மாதிரி…

டேய் அவரு கட்சிக்கார்ருடா… அப்டித்தான் கத்துவாரு… என்று கூறிக்கொண்டே அப்படியே ஓடிவிட்டனர்.

இரண்டொரு நாளில் அந்த வீட்டுக்கு வயதான தாத்தா பாட்டி இரண்டுபேர் குடி வந்தனர்.

சிறுவர்கள் போகும்போதும் வரும்போதும் ஃபேன் சுற்றுகிறதா என்று பார்க்க முயல்வர். ஆனால், தாத்தா பாட்டி கதவை சாத்தியே வைத்திருந்ததால் அவர்களால் ஃபேனைப் பார்க்கவே முடியவில்லை.

எப்படியாவது அந்த ஃபேன் சிரிப்பதைப் பார்த்துவிட வேண்டுமென எண்ணினர்.

அன்று ஞாயிற்றுக் கிழமை.

தாத்தா பாட்டியைப் பார்க்க யாரோ உறவினர்கள் வந்திருந்தனர். அதனால் கதவு திறந்தே இருந்தது.

அந்த வழியாக வந்த சிறுமி, வீடு திறந்திருப்பதைப் பார்த்து ஓடிச்சென்று, தன் சகாக்களிடம் டேய் வாங்கடா ... டீச்சர் வீடு தெறந்திருக்கு ... ஃபேனும் ஓடுது சிரிக்குதான்னு பாக்கலாம் என்று சொல்ல,

நான்கைந்து சிறுவர்களும் ஆவலுடன் ஓடி வந்தனர்.

தாத்தா பாட்டிக்குத் தெரியாமல், பதுங்கிப் பதுங்கி மறைந்து மறைந்து நின்று, சுற்றும் ஃபேனையே பார்த்தனர். ஃபேன் படு வேகமாகச் சுற்றிக்கொண்டிருந்தது.

அதையேப் பார்த்துக்கொண்டிருந்த சிறுவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து உதடுகளைப் பிதுக்கிக் கொண்டனர்.

டேய்... டீச்சர் வூட்டு இஸ்பேனு சிரிக்கவே இல்லடா…

என்று கூறியபடியே சோகமான முகத்துடன் அங்கிருந்து நகர்ந்தனர். குழந்தைகளின் மகிழ்ச்சிக்கும் சோகத்துக்கும் இலக்கணம் இருப்பதே இல்லை எப்போதும். புதுக்கவிதையின் சொல்மயக்கம்போல. அதுசரி. தலைக்கனம் இல்லாதோருக்கு இலக்கணம் எதற்கு?.

சிறுவர்கள் சோகம் சுமந்து சென்ற அதே வேளையில், சூளைமேட்டில் குடியிருக்கும் புதிய வீட்டில், வசந்தி ஃபேனை ஆஃப் செய்தும் ஆன் செய்தும் காட்ட, குழந்தை ஃபேனின் இயக்க மாறுதலுக்கேற்ப சிரிப்பைக் கூட்டியும் குறைத்தும் அழுகைவரை சென்றும் வருவதை ராஜாவும் வசந்தியும் லயித்து ரசித்துக்கொண்டிருந்தனர்.

ஃபேனும் குழந்தையும் அவரவர் இயல்பில்.






 




Rate this content
Log in