பெற்றோர்கள்
பெற்றோர்கள்


பெற்றோர்கள். நம்ம வாழ்க்கையில நமக்கு கிடைத்த மிகப்பெரிய அளவிட முடியாத சொத்து. வாழ்நாள் முழுவதும் நமக்காக தன்னுடைய ஆசைகளை மறைச்சிகிட்டு, நம்முடைய ஆசைகளை தன்னுடைய ஆசைகளா நினைச்சிட்டு நமக்காக மட்டும் வாழ்கிறவர்கள். எனக்கு விவரம் தெரிஞ்ச நாளிலிருந்து இன்றுவரை எங்க அம்மா அப்பா வாங்கிட்டு வந்த திண்பண்டங்களை ஆசையா எடுத்து சாப்பிட்டதை நான் பார்த்ததே இல்லை.
நாங்க 3 குழந்தைகள், நடுத்தரமான குடும்பம்தான். அப்பா பண்டங்கள் வாங்கிட்டு வர நாளே திருநாள் மாதிரி தான் சந்தோஷப் படுவோம். பிள்ளைகள் சாப்பிடட்டும்னு நினைச்சி அவங்க அதை சாப்பிட கூட மாட்டாங்க. எனக்கு பிடிக்காதுடா நீ சாப்பிடுனு ஊட்டி விடுவாங்க. நாம நினைச்சிப்போம் அவங்களுக்கு உண்மையிலேயே அதெல்லாம் பிடிக்காதுனு. ஆனா அப்படி இல்லை.
ஏதாவது விசேஷ வீடுகளுக்கு போனா கூட என் மகனுக்கு இந்த லட்டு ரொம்ப பிடிக்குமேனு அதை சாப்பிடாமல் எனக்கு வந்து கொடுப்பாங்க. இப்படிப்பட்ட குடுப்பணை எல்லாம் யாருக்கு கிடைக்கும் சொல்லுங்க? விலை மதிக்க முடியாத சொக்கத்தங்கம். ஒரு நாள் என் மேலதிகாரி எதார்த்தமா பேசிட்டு இருந்தார். "இப்போ உனக்கு ஒரு கார் வேணும்னா முதலில் நீ அதற்கு ஆசைப்படணும்.
அப்ரம் கற்பனை பண்ணி பார்க்கணும், உனக்கு அது கிடைச்ச மாதிரி. இப்போ சொல்லு நீ உன் கார் எந்த பிராண்ட் எந்த நிறத்தில நீ பார்க்கிறனு". எனக்கு எளிமைதான் ரொம்ப பிடிக்கும். நான் சொன்னேன் அதெல்லாம் சரி, ஆனா எனக்கு கார் வேண்டாம்னு. எனக்கு பொதுவா பஸ், ரயிலில ஜன்னலோர சீட்ல உட்கார்ந்துட்டு பிடிச்ச பாட்டு கேட்டுட்டு பயணம் பண்ணதான் பிடிக்கும்னு. உடனே அவர் சரி உனக்கு வேண்டாம் உங்க அம்மா அப்பாவுக்காக வாங்கி கொடுக்க யோசினு சொன்னார்.
ஆனா அவங்க அப்படியெல்லாம் ஆசைப்பட்டதில்லைனு சொன்னேன். உன்கிட்ட அவங்க சொன்னாங்களா? எனக்கு கார்ல எல்லாம் போக ஆசை இல்லைனு அவர் கேட்டார். சரிதான் எனக்கு எப்படி தெரியும் நான் தான் அவங்க கிட்ட கேட்டதே இல்லையே. அவங்களோட மனசிலேயும் நிறைய ஆசைகள் இருக்கும் நமக்கு தெரியாம. நாம சந்தோஷமா வாழ்றதே அவங்களுக்கு மிகப் பெரிய சந்தோஷம் தானு நாம ஏதோ ஒரு வகையில நியாயப் படுத்திறலாம். கண்டிப்பா அது அவங்களோட பெரிய ஆசைதான் ஆனா அதெல்லாம் தாண்டி அவங்க ஆழ்மனசில நிறைவேறாத ஆசைகள் இருக்கலாம். நம்ம சின்ன வயசுல நமக்கு கிடைச்ச சந்தோஷம் அவங்க சின்ன வயசுல ஒரு கனவா மட்டுமே இருந்திருக்கலாம்.
சில பெரியவர்களை பார்த்திருக்கீங்களா? வயசாகி இருக்கும் ஆனா நவீன காலத்துக்கு ஏற்ற மாதிரி உடை உடுத்திருப்பாங்க. மொபைல் போன்ல ஆனந்தமா பாட்டு கேட்டு மூழ்கியிருப்பாங்க. வாழ்க்கையை ரசிச்சு வாழ்வாங்க. சில பேர் பார்த்துட்டு இந்த வயசுல இதெல்லாம் தேவையானு கேட்பாங்க ஆனா அவங்க அதை பற்றியெல்லாம் கண்டுக்கவே மாட்டாங்க. அவங்க இஷ்டப்படி இருப்பாங்க.
அதெல்லாம் அவங்க சின்ன வயசுல ஆசைப்பட்டதா இருக்கலாம் காலம் கடந்து கிடைச்சிருக்கலாம். உங்க அப்பா அம்மாவுக்கும் அப்படி ஏதாவது ஆசைகள் இருக்கலாம். அதற்காக இன்னும் கூட அவங்க மனசு ஏங்கலாம். இந்த காலத்தில பெற்றோர்கள் கிட்ட அன்பா பேசுறதே குறைஞ்சி போச்சு.
நம்ம சின்ன வயசுல நமக்கு பிடிச்ச பொருளை பாத்து பாத்து வாங்கி கொடுத்தவர்களுக்கு, வளர்ந்ததும் அவங்களுக்கு பிடிச்ச பொருளை கேட்டு வாங்கிக் கொடுக்க கூட நமக்கு மனசு இல்லாம போச்சே.. அப்பா அம்மா கிட்ட அன்பா பேசுங்க. அவங்க உலகமே நாமதான். அம்மா மடியில படுத்துகிட்டு செல்லமா உனக்கு மாம்பழக் கலர் புடவை பிடிக்குமா இல்லை ராமர் பச்சை கலர் பிடிக்குமானு கேட்டு பாருங்க. அப்பா கிட்ட ராயல் என்ஃபீல்டு ஓட்டுறீங்களானு கேட்டு பாருங்க. அவங்க கிட்ட பேசுங்க, ஆசைகளை கேளுங்க. முடிஞ்ச வரைக்கும் அதை நிறைவேற்ற முயற்சி பண்ணுங்க.
இன்னைக்கு ரொம்ப நல்ல நாள் இன்னைக்கே கேட்டு தெரிஞ்சுக்கோங்க. இனி அவங்க உங்க குழந்தைகள் அவங்க ஆசையை நீங்க நிறைவேற்றுங்க !!🙏🏻❤️ நாள் இனியதாக இருக்கட்டும்!! ❤️