STORYMIRROR

StoryMirror Feed

Children Stories Classics Others

3  

StoryMirror Feed

Children Stories Classics Others

தீபாவளியைத் தேடி.

தீபாவளியைத் தேடி.

2 mins
254

பண்டிகைகள்

எப்போதும்

எங்கோ தொலைவில் இருக்கும்

ஒரு ஊரில் இருக்கின்றன

தீபாவளிக்கு முந்தைய நாளில்

தீபாவளியைத் தேடிசெல்பவர்கள்

நகரத்தை விட்டு

பெரும் வெள்ளமாக

வெளியேறிக் கொண்டிருந்தார்கள்

பேருந்துக்காக காத்திருப்பவர்கள்

ரயிலுக்காக காத்திருப்பவர்களின் முகங்களில்

எல்லையோரங்களில் காத்திருக்கும்

அகதிகளின் நிழல்கள் விழுகின்றன

ஒரு புதுமணத் தம்பதி

தங்கள் முதல் தீபாவளிக்கு

ஊருக்குச் செல்வதற்காக

டிக்கட் கவுண்டரின் முன்

வாடிய முகத்துடன்

நின்று கொண்டிருக்கின்றனர்.


அப்பா வந்துருவேன்

அப்பா வந்துருவேன்

என்று யாரோ ஒருவன் பதைப்புடன்

அலைபேசியில் சொல்லிக்கொண்டே

அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தான்

தெற்கிலிருந்து

இந்த நகரத்திற்கு வந்த ஒருவன்

ஒரு சிறிய கைப்பையுடன்

இரவெல்லாம் பேருந்தில்

நின்று கொண்டே பயணம் செய்கிறான்.


ஒரு பண்டிகையைத் தேடி

எல்லா திசையிலும்

மக்கள் சாரை சாரையாக

சென்று கொண்டிருக்கிறார்கள்

பண்டிகைகள் நாம் இருக்கும்

இடத்திற்கு வந்து விடாது

நாம் தான் அதை தேடிப் போக வேண்டும்

நாம் எந்த நிலங்களை விட்டு வந்தோமோ

எந்த முகங்களை விட்டு வந்தோமோ

அங்குதான் பண்டிகைகள்

குடியிருக்கின்றன

தீபாவளிக்கான ஒரு சிறப்பு ரயிலில்

கூட்டம் பிதுங்கி வழிகிறது

அந்த ரயில் மாற்று பாதைகளில்

வெகு நேரமாக சென்றுகொண்டிருக்கிறது

யாரோ ஒருவன்’' இந்த ரயில் போய்ச்சேருவதற்குள்

தீபாவளி முடிந்து விடும்”

என்று முணுமுணுக்கிறான்.


நானும் அந்த ரயிலில்தான்

போய்க்கொண்டிருக்கிறேன்

எனது பண்டிகை காத்திருக்கும்

ஊர் என்று எனக்கு எதுவும் இல்லை

எனது பண்டிகைகள்

என் பால்யத்தில் இருக்கின்றன

அதுவரைக்கும் இந்த ரயில் போகுமா

என்றும் எனக்குத் தெரியவில்லை.



Rate this content
Log in