பியார் பிரேமா காதல்
பியார் பிரேமா காதல்


கல்லூரி முடிந்த உடன் பேருந்தை பிடிக்கும் வேகத்தில் ஓட்டமும் நடையுமாக புறப்பட்டான் சேது. நண்பர்கள் அழைத்தும் நின்றபாடில்லை அவன் இவ்வாறு நடந்து கொள்வது புதிதுமில்லை. ஒரு பஸ் போகும் ஊர்காரபயலே பொறுமையா வாரான் நொடிக்கொரு பஸ் போகும் ஊரில் இருந்து கொண்டு உனக்கென்னடா பிரச்சனை என்று நண்பர்கள் பலமுறை திட்டியதுண்டு. எதையும் கண்டுகொள்ளாதவனாய் கடிவாளம் போட்ட குதிரையாய் ஓட்டம் பிடித்தான்.
அவன் ஊர் செல்லும் பேருந்துகள் வரிசை கட்டி ஒன்றன் பின் ஒன்றாக நின்றன. எதையும் கண்டுகொள்ளாமல் பிரேமாவை தேட தொடங்கினான். அவள் இல்லாமல் அவன் பயணமில்லை. கல்லூரி முடிந்து பசியுடன் களைப்பாக வருபவனுக்கு பிரேமா தான் ஆறுதல் அவளே எனர்ஜி பூஸ்டர். பிரேமாவை அவன் அவ்வளவு நேசித்தான் சில நேரங்களில் அவளை பிரிந்து இறங்க மனமின்றி பயணத்தை பக்கத்து ஊர் வரை தொடர்ந்துள்ளான். பிரேமாவுடனான அவனது பயணம் பற்றி பலமுறை நண்பர்களுடன் சொல்லி சிலாகித்துள்ளான். பலர் கிண்டலடிப்பார்கள் ஆனால் அவன் பொருட்படுத்தியத்தில்லை.
1.40 மணிக்கெல்லாம் பிரேமா வந்துவிடுவாள் ஆனால் இன்று காணவில்லை. பசி வேறு வயிற்றை கிள்ளியது பக்கத்து பரோட்டா கடையின் சால்னா வாசம் அவன் கோபத்தை கிளறியது. துல்லியமான ஒலியுடன் ராஜா பாடல் இசைக்கும் திசை நோக்கி திரும்பியபோது பிரேமா வந்து நின்று கொண்டிருந்தாள். துள்ளியடித்து இடம் பிடித்து இருக்கையின் பின்னால் தலை சாய்க்கையில் "மயங்கினேன் சொல்ல தயங்கினேன் உன்னை விரும்பினேன் உயிரே" பாடல் பிரேமா பஸ்ஸில் ஒலித்துக்கொண்டிருந்தது. ராஜாவின் இசையில் பசியடங்கி, உயிர் கரைந்து பிரேமாவுடன் வீட்டை நோக்கி பயணத்தை தொடர்ந்தான் சேது...