S B MEDHULA

Children Stories Drama

5.0  

S B MEDHULA

Children Stories Drama

நெகிழ்ச்சி - நிகழ்ச்சி

நெகிழ்ச்சி - நிகழ்ச்சி

4 mins
132


மிதுலா இனி வரும் தனது விடுமுறை நாளிட்களில் அரை நாளை மனநலம்  குன்றிய குழந்தைகளுக்காக செலவிட விரும்பியதால் அதைப்பற்றி விசாரிக்க இன்று நானும் அவளும் கொளத்தூரில் இருக்கும் அருணோதயம் காப்பகத்திற்கு சென்றோம். அங்கே நிகழ்ந்ததை இங்கே பதிவிட விரும்புகிறேன். 


நாங்கள் உள்ளே நுழைந்ததும் உயர்ந்த மேஜைக்கு பின் அமர்திருந்த அந்த இளம்பெண்ணின் முகம் தெரிந்தது.  


எங்களை புன்சிரிப்புடன் வரவேற்று அன்புடன் உபசரித்த அந்த பெண் நாங்கள் கொடுத்த பழைய ஆடைகளை வாங்க அருகில் வந்தபோதுதான் தெரிந்தது அவர் அமர்ந்திருந்த வீல் சேர். குறைகளை வெளிக்காட்டாத அந்த முகம் இவர்களின் பலம்.


பிறகு அருணோதயத்தின் தலைவர் திரு. ஐயப்பனை சந்தித்தோம். மிதுலாவின் விருப்பத்தை நான் விளக்கியதும் அவர் மிதுலவின் எண்ணங்களை புரிந்து கொண்டு பாராட்டியதோடு அவள் சேவை செய்ய உடனே சம்மதமும் தந்தார்.


குழந்தைகளை பார்க்கலாமா என நான் கேட்டதற்கு இன்னும் 20 நிமிடத்தில் மதிய உணவு வேளை பிள்ளைகள் பசியோடு இருப்பார்கள் என தயக்கம் காட்டியவர் பிறகு ஏனோ சரி சீக்கிரம் வந்து விடுங்கள் என்றார்.


பிள்ளைகள் இருக்கும் ஹாலில் நுழைந்தவுடன், படங்களில், கோயில்களில் கருணை வடிவுடன் பார்த்த கடவுளின் முகம் எனக்கு கோரமாய் தெரிந்தது. 

3 முதல் 8 வயதுள்ள 30க்கும் மேற்ப்பட்ட குழந்தைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்தனர்.


கால் சூம்பிப்போய், கை குட்டையாய், வாய் கோணி, கழுத்து திரும்பி என கடவுள் தன் இதயத்தை தனியே கழட்டி வைத்தபின் படைத்த படைப்புக்கள் அங்கே சிரித்தபடியே கடவுளை தோற்கடித்து கொண்டிருந்தார்கள். 


எங்களை பார்த்தவுடன் சந்தோக்ஷ ஆராவாரத்துடன் ஹாய் அக்கா. ஹாய் மாமா என கத்திக்கொண்டே ஓடி, நடந்து, தவழ்ந்து, ஊர்ந்து என அருகில் வந்து ஒவ்வெருவரும் ஒவ்வொரு விதமாய் எங்கள் கால்களை கட்டி பிடித்துக்கொண்டார்கள். அன்பு வெள்ளம் கேள்விபட்டிருக்கிறேன் அன்று நேரில் பார்த்தேன். 


இருவரும் பரவசத்தில் திக்குமுக்காடி போனோம். கண்டிப்பாக அவர்கள் எல்லாம் மூளை சரியில்லாதவர்களாகத்தான் இருக்கவேண்டும். நம்மை போல் மூளை சரியாய் இருந்தால் அவ்வளவு அன்பை கொட்டமாட்டார்கள்.


அப்போது, நடக்க முடியாத ஒரு குட்டி சொர்க்கம் மிதுலாவைப் பார்த்து க்கா.... க்கா... என கை நீட்டி அழைத்தது. மிதுலா அந்த குழந்தைக்கு அருகே சென்று வாடி செல்லம் என்று தூக்கி வைத்துக் கொஞ்சினாள்.  அதை பார்த்த மற்ற குழந்தைகள் தன்னையும் தூக்கி கொள்ள வேண்டும் எனும் தோரணையில் லேசாய் குதித்து காட்டினார்கள். தன் தவறை உணர்தவளாய் மிதுலா குழுந்தைகளோடு குழந்தையாய் தரையில் அமர்ந்தாள்.


எல்லா குழுந்தைகளும் அவளை சுற்றி சுற்றி வந்து தொட்டு தடவியபடி தனது சந்தோக்ஷங்களை தெரிவித்துக் கொண்டிருந்த போதுதான் அது நடந்தது.


அளவு சரியில்லாத, யாரோ நன்கொடையாய் கொடுத்திருந்த பழைய உடைகளை மட்டும் அந்தக் குழந்தைகள் உடுத்தியிருந்தார்கள். ஆனாலும் அவர்கள் முகத்தில் இருந்த ஆனந்தம் நாம் விலைஉயர்ந்த புதுத்துணி போடும்போது காட்டும் கர்வத்தை காலி செய்வதாய் இருந்தது. மிதுலா பட்டாம்பூச்சிகளுக்கு நடுவே பரவசப்பட்டுக்கொண்டிருந்தாள். 

யாரை பார்ப்பது, யாரை கொஞ்சுவது, யாருடன் பேசுவதென தெரியாமல் திணறினாள்.


மிதுலாவின் கை கால், கண்ணம் மூக்கு, கம்மல் வளையல், வாட்ச் செயின் என அவரவர்களுக்கு கிடைத்ததை பிடித்துக்கொண்டு ஒவ்வொன்றையும் தொட்டுப் பார்த்து குழந்தைகள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களின் கண்களில் ஏக்கம், துக்கம், வியப்பென பலவித உணர்வுகள் கலந்திருந்தாலும் எல்லாக் குழந்தைகளும் தனது அன்பை தனக்குத் தெரிந்த மொழிகளில் சந்தோக்ஷ ஒலிகளால் வெளிப்படுத்திக் கொண்டிருந்தார்கள்.


எல்லாம் இருந்தும், யாராவது நம்மீது அன்புகாட்டுவார்களாஎன்று எதிர்பார்க்கும் நாம் எங்கே! ஏதுமில்லா அனாதைகள் என சொல்லப்படும் அவர்கள், முன்பின் தெரியாத மிதுலாவிடம்கூட அன்பை வாரி வழங்கும் அவர்கள் எங்கே! பலவித எண்ண நெருடல்களுடன் மனம் பிசைய நான் ஓரமாய் நின்றிருந்தேன்.


அப்போது, பானு எனும் அந்த பட்டுச் சிறுமி மிதுலாவின் பத்து ரூபாய் தொங்கு கம்மலை தன் பஞ்சு விரல்களால் தொட்டு, தொட்டுப் பார்த்து சிரித்துக்கொண்டாள். பின் மெள்ள தன் கீச்சுக் குரலில், யக்காஆ..... இந்தக் கம்மல் உங்களுக்கு ரொம்ப அழகா இருக்குக்கா என்றாள்.


உடனே மிதுலா, ஓ அப்படியா...? உனக்கு பிடிச்சிருக்கா? நீ வேணும்னா போட்டுக்கிறியா... என கேட்டுக் கொண்டே கம்மலை கழட்டப் போனாள்,


அந்த நொடியில் என் காதில் வந்து விழுந்த வார்த்தைகள் என்னை கேட்காமல் என் கண்களில் கண்ணீராய் வெளிவந்தது.என்னை உருக வைத்த பானு சொன்ன பதில் இதுதான்:


ஊஹும்ம்ம், வேணாங்கா...அது உங்கள்து, 

உங்க கம்மலுக்கு நான் ஆசைபடறது தப்புக்கா...

அத நீங்களே பத்திரமா வைச்சுக்கோங்க....


பானு சொன்ன பதிலால் நான் பூஜ்ஜியமாய் மாறி அதளபாதாளத்தில் விழுந்து கொண்டிருந்தேன். என்னை நேருக்கு நேர் பார்த்த மிதுலாவின் கண்களிலும் அந்த பாதிப்பு தெரிந்தது. எந்தவித பாதிப்புமின்றி பானு இன்னும் மிதுலாவோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.


பானுஊஊஊஊ....


உள்ளறையிலிருந்து குரல்வந்ததும், அக்கா இவங்களுக்கு சாப்பாடு கொடுக்கனும், நான் போய் வேலையை முடிச்சுட்டு வரேன் என சொல்லிவிட்டு பானு எழுந்து நின்றாள். வளைந்திருந்த, தன் வலுவிழந்த கால்களால் அந்த இடத்தையும் என் இதயத்தையும் தேய்தபடியே அந்த அறையை விட்டுச்சென்றாள். 


பிறகு மாடிக்குச் சென்றோம். அங்கே வெறும் மூச்சை மட்டும் விட்டுக்கொண்டு அசைவே இல்லாமல் பல குழந்தைகள் படுத்தபடியே படுக்கையில் இருத்தனர்.  


கட்டில் மேல் படுத்திருந்த ஒரு 4 வயது குழந்தைக்கு மூக்கில் ஒரு டியூப் சொருகப்பட்டிருந்தது. அப்போது உள்ளேயிருந்து வந்த ஒரு பெண் எங்களை பார்த்து சிரித்து கொண்டே, இப்போது இவளின் மதிய உணவு வேளை என்றாள்.அசைவில்லாத அந்த குழுந்தைக்கு எப்படி உணவு கொடுக்கப் போகிறாள் என நான் வாய் பிளந்து பார்த்துக் கொண்டிருந்தேன்.

 

அவள் சர்வசாதாரணமாய் பக்கத்திலிருந்த முக்கோன வடிவ புனல் ஒன்றை எடுத்து அந்த குழந்தையின் மூக்கில் உள்ள டியூபில் சொருகினாள். கையில் வைத்திருந்த டம்ளரில் இருந்த பாலை அந்த புனலில் ஊற்றிவிட்டு பால் மூக்கின் வழியே உள்ளே போனதும் புனலை எடுத்துக்கொண்டு உள்ளே சென்றாள்.


கடவுளே, யார் மேல் உள்ள கோபத்தை இந்த குழந்தைகளிடம் இப்படி காட்டியிருக்கிறாய்?

பதில் தெரியவில்லை. எப்படியோ, இவர்கள் ஒரு பாதுகாப்பான இடத்தில் இருப்பது குறைவிலும் நிறைவு தந்தது. 


நல்லவேளை நாம் இப்படி இல்லை என மனம் நன்றியுடன் நிம்மதியானது. நமக்கு உடலில் ஏதாவது ஒரு பகுதி வேலைசெய்யாவிட்டாலும் நாமும் இப்படிதான் எங்காவது ஒரு மூலையில் இருந்திருப்போம் எனும் உண்மை புரிந்தது. ஒழுங்காக வேலை செய்யும் என் உடலின் ஒவ்வொரு பகுதியின் அருமை பெருமையையும் உள்ளம் உணர்ந்தது. அதை உணவளித்து பாதுகாத்த அம்மா, அக்கா, மனைவி என ஒவ்வொருவராய் ஏனோ என் நினைவில் வந்து சென்றனர்.


குழந்தைகள் உணவு நேரம் என்பதால் கிளம்பிவிட முடிவுசெய்து கீழே இறங்கி வந்தோம். பானு உட்பட பத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் எங்களை வழியனுப்ப வாசல்வரை வந்தார்கள். எல்லோருக்கும் டாட்டா சொன்னோம், பதிலுக்கு டாட்டா சொன்ன குழந்தைகளில் ஒன்று (பெயர் தெரியவில்லை), க்காஆ.. இவங்க யாரு? என என்னை சுட்டி காட்டி மிதுலாவிடம் கேட்டாள். மிதுலாவிடமிருந்து வரப்போகும் பதில் எனக்கு தெரிந்ததுதான் என்பதால் அலட்சியமாய் வேறு பக்கம் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். 


ஆனால் அப்படி ஒரு பதிலை மிதுலாவிடமிருந்து நான் சற்றும் எதிர்பார்க்கவில்லை. 


சிறிது நேரம் ஏதும் விளங்காமல் நான் குழப்பத்தோடு மிதுலாவை பார்த்தேன். அவள் என்னை கண்டுகொள்ளாமல் குழந்தைகளிடம், இனிமேல் நான் இங்கே அடிக்கடி வருவேன் என செல்லிக்கொண்டே டாட்டா காண்பிப்பதில் மும்முரமாய் இருந்தாள். நான் கேட்டிற்கு வெளியே வந்து நின்றேன், மிதுலாவின் விளக்கத்திற்காக ஆவலோடு காத்திருந்தேன்.


ஒரு வழியாக மிதுலா வெளியே வந்து என்னோடு இணைந்து நடக்க ஆரம்பித்தாள்.


உடனே நான், ஏம்மா? நான் யாருன்னு கேட்ட குழந்தைகிட்ட அப்படி சொன்ன! என்று கேட்டேன். என்னை ஆச்சரியமாக பார்த்த மிதுலா,

உங்களை என் அப்பான்னு சொல்லி அந்த குழந்தைங்க மனசுல "நமக்கு அப்பா யாருங்கிற கேள்வியையும்,அவரை பார்கனுங்கிற ஏக்கத்தையும்" வரவைக்கிறது எனக்கு சரின்னுபடலைப்பா, அதான் உங்களை என் Friendன்னு சொன்னேன் என்றாள்.


நடந்து கொண்டிருந்த என் கால்கள் சட்டென்று ஸதம்பித்து நின்றன.


இரண்டடி எனக்கு முன்னால் சென்றுவிட்டவள் நான் நின்றுவிட்டதை உணர்ந்து லேசாய் என்னை திரும்பிப் பார்த்து, 

நீங்க என் Friend-ம்தானே? என கேட்டுவிட்டு பூப்போல புன்னகைத்த மிதுலா இப்போது என் கண்களுக்கு என்னைவிட அதிக உயரமாய் தெரிந்தாள்.


என் முகஉணர்வுகளை மறைக்க நான் சட்டென்று திரும்பிக்கொண்டேன்.

 

தூரத்தில் அந்த குழந்தைகள்...இருபது நிமிடங்கள் பழகிய பாசத்திற்காக சாப்பிடக்கூட போகாமல், எங்களுக்காக இன்னும் கையசைத்துக்கொண்டே இருந்தனர்.


நெகிழ்ச்சி தொடரும்....

என் வணக்கத்தோடு

நிகழ்ச்சி முற்றும்.Rate this content
Log in